Saturday, March 19, 2011

மலையக தமிழர்களுக்கான சிறுபான்மை அங்கீகாரம்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒருவாறு முடிவுக்கு வந்துள்ளது. வழமை போலவே வாக்களிக்கும் ஆர்வம் மக்களிடம் மந்தமாகவே இருந்தது. ராமன் ஆண்டாலும் ? ........

மலை என உயர்ந்து நிற்கும் விலை வாசிக்கு நடுவில் வேற்று நாடகமாகவே நடந்தேறியிருக்கிறது. நாட்டின் சகல மக்களையும் ஆடி வைத்துக் கொண்டிருக்கும் பொருளாதாரம் குறிப்பாக தாக்குவது மலையகத் தோட்டத் தமிழர்களை தான். 

இந்தவிடத்தில் ஒன்றை கட்டாயம் சொல்லியாக வேண்டும். மலையகத் தமிழர்கள் என்றொரு இனம் இருப்பதை தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டிய துர் பாக்கியமும் இருக்கவே செய்கிறது. 
அண்மையில் செம்மொழி ( குடும்ப) மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற மலை நாட்டு தமிழ் கவிஞர் ஒருவர் மனவருத்தத்தோடு தெரிவித்த விடயத்தையும் இங்கு சொல்லி ஆக வேண்டும். 

தனை விழாவில் மலை நாட்டு தமிழ் கவிஞர் என அறிமுகப் படுத்தி இருக்கிறார். 
" அப்படி என்றால்...?"
" மலை சாதி மக்களா?" 

அந்த தமிழர் நொந்து போய் இங்கு கலாசாலை ஒன்றில் உரையாற்றிய போது குறிப்பிட்ட விடயங்கள் இவை. பாவம். தன தொப்புள் கோடி உணர்வு அறுந்த செய்தி  அறியாமலே சென்றிருக்கிறார். இங்குள்ள பல  மலை நாட்டு தமிழ் மக்களைப் போலவே... 

இத்தனைக்கும் சமீப காலம் வரை "இந்திய வம்சாவளி " என அறியப் பட்ட  ஒரே இனத்தவர்கள் அவர்கள் தான். இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி ஆடும் போது அவர்களுக்கு கைத்தட்டி பாரட்டும் மக்கள். இன்றும் தன உறவினர்களோடு தமிழ் நாட்டில் தொடர்பு வைத்திருக்கும் மக்கள். இந்திய  வம்சாவளி என்ற ஒரே காரணத்துக்காக திட்டமிட்டு பிரஜாவுரிமை பறிக்கப் பட்டவர்கள். 

கடும் வறுமைக்கு மத்தியில் போராடி இப்போதைக்கு முன்னேற துடித்து ஓரளவு வெற்றி பெற்ற மக்களை பற்றி பேசியே ஆக வேண்டும். 

அண்மையில் தமிழ் பத்திரிகை  ஒன்றில் மலையக தமிழர்களுக்கான சிறுபான்மை அங்கீகாரம் பற்றி வாசித்தேன். காலத்தின் தேவையினை விளக்கி  இருந்த அந்த கருப் பொருளை பற்றி விவாதிக்க வேண்டி இருக்கிறது. 

சமூக ரீதியில் சிறுபான்மை இனத்தவர்களுக்கான சகல தகுதிகளை கொண்டிருந்தும் இன்னும் அந்த சலுகைகள் கிடைக்கதவர்களாகவே இருப்பதைக் கண்கூடாகப்  பார்கிறேன்.   மலையக தமிழர்களுக்கான சிறுபான்மை அங்கீகாரம் கட்டாயம் தேவை  என்ற சர்ச்சையான முடிவை காரணம்,, நியாயங்களோடு விளக்குகிறேன். 

பயனுள்ள விமர்சனங்கள் , கருத்துகளை எதிர் பார்க்கிறேன். 
இன்னொரு பதிவில் விரிவான விமர்சனங்களுடன் சந்திப்பேன்.
 


Sunday, January 16, 2011

சிங்களம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்!

சமத்துவம், சகோதரத்துவம். கொஞ்சம் அலுத்துப் போன சப்ஜெக்டுதான் . அதிலும் இலங்கை தமிழர்களை பொறுத்தவரை கேட்டுக் கேட்டு சலித்துப் போன விஷயம். பிரெஞ்சுப் புரட்சியில் உச்சரிக்கப் பட்டத்தை விட அதிகமாக இலங்கையில் அதிகமாகவே உச்சரிக்கப் படுகிறது. ஆனால் அதற்கு கொடுக்கப் படும் மரியாதை சொற்பம்தான்.

முப்பது வருட யுத்தம் முடிந்து விட்டது. தமிழர்களுக்கான தீர்வு? நடத்தப் பட்ட யுத்தம் மனிதாபிமான மீட்பு என்று பெயராலும் அழைக்கப் பட்டது. ஆனால் மீள்குடியமர்வு? நஷ்ட ஈடு? சில விஷயங்களை ஆராயப் போனால் பக்கங்கள் போதாது. அதுவல்ல என் எண்ணம். மேலோட்டமாக என் கருத்துகளை கோடிட்டு காட்டி விடுகிறேன். உங்களுக்கேற்றவாறு அர்த்தப் படுத்திக் கொள்ளுங்கள்.

 இலங்கையில் நடை பெறுவது பெரும்பான்மையினரின் ஆட்சிதான். அதை மாற்றவும் முடியாது. ஆனால் அதுவே பெரும்பான்மையினருக்கான ஆட்சியாக மாறிய போதுதான் பிரச்சினை வெடித்து விடுகிறது.

தன் குறைகளை மறைப்பதற்கு அரசாங்கம்  வைத்திருக்கும் நொண்டிச் சாக்குகள் ஏராளம். எதிரணியில் உட்கார்ந்திருக்கும் கட்சிகள் நாற்காலியில் உட்கார்ந்தாலும் நடக்கப் போவது இதுதான் என்று எல்லோருக்குமே தெரியும்.
வாழ்க்கைச் செலவுகளை வானுயர உயர்த்தி விட்டிருக்கிறார்கள்  . முன்பு பாதுகாப்பு செலவு. இப்போது? ஒரே காரணம் நெடுநாள் தாக்கு பிடிக்காது என்பது அவர்களுக்கு   நன்றாகவே தெரியும்.

சிங்களக் கட்சிகளை பொறுத்தவரை இனவாதம் பேசுவது அவர்களின் வாக்குப் பெட்டிகளை நிரப்புவதற்கு செலவில்லாத முதலீடு! இவ்வளவு நாட்களும் தமிழர்களை பார்த்து 'கொடி' என்று கூற முடிந்தது . இப்போது அந்த சந்தர்ப்பம் கை நழுவி இருக்கிறது. வேறு வழி? மறுபடியும் அந்தத் தீயை வளர்க்க வேண்டுமே? அதைதான் அரசின் சில பங்காளி கட்சிகளும் எதிர்க் கட்சிகள் சிலவும் செய்து கொண்டிருக்கின்றன.

ஆனால் சாதாரண சிங்கள மக்களின் மனப் போக்கில் இப்போது பாரிய மாற்றத்தை அவதானிக்க முடிகிறது. நிச்சயமாக அது கடந்த காலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. வெறுமனே ஏற்பட்ட மாற்றம் அல்ல அது. மாறாக கல்வியறிவு , தொழில்நுட்பம் சார்பாக ஏற்பட்ட மாற்றம்.
நாட்டின் பொருளாதாரம் பற்றி அதிகமாக யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அதனால் இனவாத தூண்டல்கள் முன்பு போல மக்களை மயக்க முடியாது. ஆனால் காலம் கடந்த இந்த மாற்றத்திலும் ஏராளமான பிறழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆனால் வெளிப் படையாக இந்த இனவாதத்தை தூண்டாமல் தமிழர்களை வெறுப்படையச் செயும் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கு எதிராக பேசுவதை வைத்து இனவாதம் வளர்க்கப் படுகிறது. ஒரே செயல் இரு வேறு நபர்களுக்கு மாறுபடும் பிரச்சனைதான் இலங்கையில். உதாரணங்களை சொல்கிறேன்.

ஒன்று. சிங்கள குடியமர்வுகள். தமிழர்கள் பகுதிகளில் பெரும்பான்மையினர் குடியமர்த்தப் படுகிறார்கள். இந்த நாட்டில் எந்த இனத்தவரும் எங்கு வேண்டுமானாலும் வாழலாம் என்று நியாயம் சொல்கிறார்கள். சரிதான், ஆனால் அம்பிலிபிடியாவில் ஒரு தமிழர் வாழ முடியுமா என ஒரு அமைச்சரிடம் கேட்ட போது மௌனம். இன்னும் பாதிக்கப்பட்ட தமிழர்களே குடியேறாத போது ஏன் இந்த நடவடிக்கைகள். 

அது போலதான். தமிழர்களும் வாழ வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. ஆனால் அவர்களின் மனவெளிபாடுகள் புரிந்து கொள்ளப் படவில்லை. சுருக்கமாக நாட்டில் சிங்களம் அனைவரும் கற்றுக் கொண்டு ஒன்றாக வாழ வேண்டும் என்று ஒரு கருது திணிக்கப் படுகிறது. அது சமத்துவத்தை  வளர்க்குமாம். ஆனால் தாங்கள் தமிழ் கற்க வேண்டுமென்றோ பேச வேண்டுமென்றோ நினைப்பதில்லை.

தமிழர்களில் ஒரு பகுதியினர் தனிநாடு கேட்ட போது பிரிவினைவாதம் என்றவர்கள், இது சிங்களவர்களின் நாடு என்று சொல்லும் போது ஏன் அவர்களை பிரிவினைவாதிகள் என்பதில்லை? மாறாக அவை வெளிபடையாக பேசப் படுகின்றன.

பிரச்சினை இதுதான். சிங்களவர்களுக்கு சமாதான நடவடிக்கையாக தெரியும் இந்த நடவடிக்கைகள் தமிழர்களால் எதிர்க்கப் பட்டால் அவர்கள் துரோகிகள். இதை எடுத்து சொல்ல  யாரும் இல்லை. தமிழர்கள் உரிமைகள் பற்றி பேசிய மிகச் சில singala தலைவர்களும் இப்போது அரசில். பாவம் அவர்களும் எவ்வளவு காலம்தான் பதவி இல்லாமல் பணம் செலவழிப்பார்கள்?

பெரும்பான்மையினர் எங்களுக்கு தருவதா என்று யோசிக்கிறார்கள். அவர்களுக்கு தெரியவில்லை. எங்களுக்கு புதிதாய் ஒன்றும் தேவை இல்லை. இருப்பதை நிம்மதியாக அனுபவிக்க முடிந்தால்....