பதிவுலகச் சகோதரர்கள் யாராவது பகிர்ந்து கொள்வார்கள் என்று நினைத்தேன்... ஆனால் நான் தேடிய வரையில் அவ்வாறான பகிர்வு ஒன்றை காணவில்லை. கவர் ஸ்டோரி எழுதும் ஆர்வம் எப்போதுமே எனக்கு இல்லை.. ஆனால் இலங்கையில் அதுவும் தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சமகால நிகழ்வை பகிர்ந்து கொள்ளாமல் விட்டால் அது நல்லதல்ல என்றே நினைக்கிறேன்..
அதுவும் இந்த சம்பவம் இலங்கை முழுவதும் ஒரு அதிரவலையை ஏற்படுத்தி விட்டது.
முதலில் இந்த சம்பவம் பற்றி அறிந்திராத அன்பர்களுக்கு ஒரு அறிமுகம் தந்து விடுகிறேன்.
இந்த சுட்டியையும் பாருங்கள்.
*********
கொழும்பு.
இலங்கையின் வர்த்தகத் தலைநகர்...
வெள்ளவத்தை... கொழும்பின் ஒரு சிறு பகுதி.
தமிழர்கள் அதிகமாக செறிந்து வாழும் ஒரு பகுதி...
தொடர் மாடிக் கட்டிடப் பகுதி ஒன்றின் குறிப்பிட்ட ஒரு வீட்டிலிருந்து பிணவாடை கிளம்புகிறது.. சந்தேகமுற்ற அயலவர்கள் போலிசுக்கு அறிவிக்கின்றனர்..
அந்த இடத்துக்கு விரையும் போலீசார் அதிர்ச்சி அடைகின்றனர். தந்தை, தாய், ஒரு இளம் மகள் ஆகியோர் உயிரற்றுக் கிடக்கின்றனர். மகனைக் காணவில்லை. கடத்தப் பட்டிருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்..
பிரஷான் .
அவன் ஒரு மெடிக்கல் ரெப் .... மிக சாந்தமான நல்ல ஒரு பையனாக அறியப் படுகிறான். அவன் மேல் சந்தேகம் கொண்டாலும் அது ஒருபுறம் இருக்க விசாரணை கட்டவிழ்த்து விடப் படுகிறது. மத்திய மலைநாட்டில் உள்ள அவனது சொந்த ஊரில் விசாரிக்கப் படுகிறது. திருப்பமாக கொலை நடந்த அன்று அவன் ஊருக்கு வந்ததாக அயலவர்கள் கூறுகின்றனர்.
சில நாட்கள் கழித்து அவனது உறவினர் ஒருவருக்கு மின்மடல் ஒன்று வருகிறது. அதில் பிரசான் தான் தனது பெற்றோரையும் தங்கையையும் கடன் தொல்லையால் கொன்று விட்டதாகவும் அவர்கள் உயிரோடு இருந்தால் இன்னும் வேதனை அடைந்து இருப்பார்கள் என்றும் கூறி உள்ளான்.
விசாரணை மீண்டும் திசை திரும்புகிறது.
தான் கெட்டவன் அல்ல எனவும் தானும் இன்னும் சில நாட்களில் உருக்குலைந்த சடலமாக மீட்கப் படுவேன் எனவும் அவன் மின்மடல் அனுப்பி உள்ளான்.
*******
ஒரு வார இடைவெளியில் தனது உருவத்தை மாற்றிக் கொண்டு வேறு ஒரு பகுதிக்கு தப்பிக்க பேருந்தில் செல்லும் பொது அவனது பழைய ரூம் மேட் ஒருவனால் இனங்காணப் பட்டு கையும் களவுமாக பிடிக்கப் பட்டான்.
போலிஸ் விசாரணையில் பிரசான் எந்த சிரமமும் வைக்கவில்லை. அவனது வாக்கு மூலமாகவே வெளிவந்த விபரங்களை பாருங்கள்.
பிரசான் மலையகத்தில் பத்தனைக்கு அண்மித்த ராணியப்பு எனும் தோட்டத்தில் வசித்தவன். தந்தை தோட்ட வாகன சாரதி. கொழும்பில் நல்ல வேலையில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளான்.
சொந்தமாக கார் கூட வாங்கி உள்ளான்..
ஆடம்பர செலவுகள் அதிகரிக்க கடனும் அதிகரித்து உள்ளது.
மொத்தக் கடன் 80 லட்சம் . ( நம்ப முடிகிறதா? அதுவும் 25 வயதில்)
ஒரே நபரிடம் இருந்து 42 லட்சம் பெற்று உள்ளான்.
கடனை அடைக்க தந்தையின் ஓய்வூதியப் பணத்தைக் கேட்டு உள்ளான். ( மிகச் சிறு தொகை, அவனது கடனுடன் ஒப்பிடும் பொது.) தந்தை மறுக்க , ஆத்திரம் அடைந்துள்ளான்.
பின்பு எதோ முடிவெடுத்தவன் மறு நாள், அவர்களின்
பானம் ஒன்றில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொன்று விட்டான். பின்பு தனது வீட்டுக்கு சென்று பணம் தேடி உள்ளான். கிடைக்காத ஆத்திரத்தோடு திரும்பி வந்துள்ளான்.
தனது தாயின்
கழுத்து சங்கிலியை அடகு வைத்து 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்கி விட்டு மறுநாள் தனது காதலியுடன் சுற்றி விட்டு அவளுக்கு 17000 ருபாய் கையடக்க தொலைபேசி ஒன்றை பரிசளித்து விட்டு திரும்பி பின்பு தலை மறைவாகி விட்டான்.
இப்படியே நீளுகிறது வாக்குமூலம்..( பத்திரிகைகளில் பந்திக் கணக்கில் எழுதிய விடயம். ஆனால் அந்த அளவு எழுத எனக்கு பிடிக்கவில்லை. )
*********
இனி நான் சொல்ல வந்ததை சொல்கிறேன்.
முழு நாட்டிலும் இது மிகப் பெரிய சலசலப்பை உண்டாக்கி விட்டது உண்மை. மேலோட்டமாகப் பார்த்தால் அவன் ஒரு காட்டு மிராண்டி... கொலைகாரன்... என அடக்கிக் கொண்டே போக முடியும் அந்த வேலையே இன்று வரை பலர் பார்ப்பதால் நமக்கு அந்த வேலை வேண்டாம். நான் அதன் விளைவுகளை மட்டும் சொல்கிறேன்.
ஒரு பக்கம் இந்த விஷயத்தை பத்திரிக்கைகள் நன்கு பயன்படுத்திக் கொண்டன ஒவ்வொரு நாளும் விசாரணை வாக்கு மூலம் என விதமாக எழுத நல்ல கதை கிடைத்து விட்டது.
மறுபுறம் மக்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை உண்டுபண்ணி விட்டது. ஏனெனில் பணத்துக்காக அவன் கடத்தப் பட்டு வேறு யாரும் கொலை செய்து இருந்தால்.
அந்த மூன்று உறவுகளை எமது உறவுகளாக எண்ணி கண்ணீர் வடிப்பதோடு அந்த சம்பவம் கரைந்து போயிருக்கும்... ஆனால் மகன் ஒருவன் தனது பெற்றோரை?
இது வரை செய்திகள் மூலமாக கேள்விப்பட்ட விடயத்தை எமது சமூகம் நேரடியாக சந்தித்த பொது ஆடித்தான் போனது.
வெறுமனே மேலோட்டமாக பார்க்காமல் அதன் பின்னணியில் எழும் கேள்விகளை கேட்கிறேன், பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.....
ஆடம்பர வாழ்க்கைக்காக கடன் பட்டான்,.. அவன் ஊதாரியாக இருக்கட்டும். ஆனால் தன கடன் சுமைக்கு அவன்
தற்கொலை செய்து கொள்ள மனநிலை தூண்டி இருக்கக் கூடும்... ஆனால் அவன் தனது பெற்றோரைக் கொலை செய்து அதுவும் அவர்களின் நன்மைக்கே என
எந்த யோசனையில் சொல்லி இருக்கக் கூடும்.?
அது பொய்யா? அல்லது அதன் பின்னணியில் எதுவும் உண்டா?
மின்மடல் மூலம் தான் தற்கொலை செய்து கொள்வதாக
திசை திருப்ப முயன்றுள்ளான் . ( ஏனெனில் அவன் அளித்த சில விபரங்கள் பொய்.) என தைரியத்தில் அவன் அவ்வாறு தப்பித்து விட முடியும் என நம்பி இருப்பான்? அல்லது உண்மையில் மன நிலை பிரல்ந்தவனாக இருக்கக் கூடுமா?
ஒரே நபர் என்ன நம்பிக்கையில் ஒருவனுக்கு 42 லட்சம் கடன் கொடுக்க முடியும்?
என்ன உத்தரவாதத்தில் அவ்வாறு கொடுக்க முடியும்? அதன் பின்னணி ஏன் வெளிவரவில்லை....?
தனது தங்கை குடித்த பானம் வாந்தி எடுத்து விட , அவளுக்கு பலவந்தமாக புகட்டி உள்ளான். என்ன குரூர மனதுடன் அதை செய்திருப்பான்?
உங்களால் முடிவெடுக்க முடிகிறதா?
அவன் கொடூரக் கொலைகாரனா, மன நோயாளியா அல்லது சூழ்நிலைக் கைதியா?
தான்
கெட்டவன் அல்ல என மின்மடலில் எழுதி இருக்கிறான்...
இந்த விடயத்தை எழுதி விட வேண்டும் என என்னைத் தூண்டிய ஒரு விடயத்தை சொல்லி விடுகிறேன்....
"
நம்ம ஆக்கள் தோட்டத்தை விட்டு வெளிய போய் காசு பாத்துட்டா அவ்வளவுதான்... இதான் பண்றான்.." இது ஒரு
அனுபவஸ்தர் சொன்னது.. மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தெரிந்தாலும் அதன் விளைவு பாரதூரமானது.
மலையகத்தில் இருந்து வெளியே உழைக்க செல்லும் இளைஞர்கள் சும்மா செல்லவில்லை...
கடும் உழைப்புக்கு போதிய வருமானம் இல்லாமல் சமீப காலமாகத்தான் வெளியே சென்ற உழைக்கிறார்கள்..
இந்த திமிர்ப் பிடித்த ஊதாரிக்காக ( மன்னிக்கவும்... என்னையும் மீறி வரும் தார்மீகக் கோபம் இது) அந்த இளைஞர்களின் உழைப்பை கொச்சைப் படுத்த முடியுமா?
தனது தேவைக்காக இந்த அளவு சுயநலமாக செயல்பட்ட இளைஞனை உருவாக்கிய சமூகம் மீது ( நான் உட்பட) தவறு இல்லையா? எங்கள் கலாசாரம், ஒழுக்க நெறி எங்கே செல்கிறது?
விடை தெரியாத கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன். விடை தெரிந்தால் சொல்லுங்கள்...
குறிப்பு:
தெளிவாக எழுத விடாமல் மனம் தடுக்கிற படியால் சுருக்கமாக வினா வடிவில் பலவற்றை முன்வைத்துள்ளேன்.... ஆனால் விளக்கம் கிடைக்கவில்லை என்று நினைத்தால் மறுமொழியில் சொல்லுங்கள்... தாரளமாக விரிவாக விவாதிப்போம்.