Tuesday, June 18, 2013

13 + இலங்கை மீது இந்தியா திணித்த ஒன்று

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான உச்ச கட்டத்தை அடைந்து விட்டோம். தீர்வுக்கான கடைசி வாய்ப்பு இதுவாகத்தான் இருக்க வேண்டும். இதனை இழந்து விட்டால் அநேகமாக தமிழர்கள் தங்கள் இருப்பை மறந்து விட வேண்டியதுதான். 

இந்த சந்தர்ப்பத்தில் 13 பிளஸ் பற்றி பேசாவிட்டால் பிறகு பேச முடியாமலும் போய்  விடலாம்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப் பட்ட தீர்வு (??) இந்த 13 வது திருத்தச் சட்டம். இலங்கை நாட்டைப் பொறுத்த வரையில் இந்த சரத்து ஏற்படுத்திய அதிர்வலைகளை வேறு எந்த சரத்தும் ஏற்படுத்தியது இல்லை.

ஆரம்ப காலத்தில் இருந்து கடும் போக்கு சிங்களவர்களும் சரி, தமிழ் ஆயுதப் போராளிகளும் சரி இதனை ஏற்கவில்லை.  தமிழருக்கு அதிக உரிமைகளை வழங்குகிறது என்று ஒரு தரப்பும் உரிமைகளே வழங்கப் படவில்லை என்று ஒரு தரப்பும் கூறியது தான் வேடிக்கை.

இந்த சரத்து ஒன்றும் தமிழருக்கு தனிப்பட்ட சலுகைகளையோ சுயநிர்ணய உரிமயையோ வழங்கி விடவில்லை. மாறாக ஒரு வரையறுக்கப் பட்ட அதிகாரங்களை வழங்குகிறது. அதாவது தமிழர்கள் அதிகமாக வாழக் கூடிய வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் பிரதிநிதிகளை தேர்வு செய்யக் கூடிய வாய்ப்பை அளிக்கிறது.

இந்நிலையில் இத அதிகாரங்களும் சிறுபான்மை தீவிரவாதமே என்ற அடிப்படை வாதக் கூச்சல் இலங்கையில் வலுப் பெற்று வருகிறது.
இதில் சில வேடிக்கைகளையும் காரணங்களையும் பார்த்து விடுவோம்.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் நடந்து முடியும் வரை தமிழர் தரப்பினால் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு  கீழே இறங்கி வர முடியவில்லை . யுத்தம் முடிந்தால் 13 பிளஸ் தருவோம், வசந்தம் பிறக்கும் என்றெல்லாம் அரசால் வாக்குறுதி வழங்கப் பட்டது. யுத்தம் முடிந்த பின்பு காட்சி தலை கீழாய் மாறியது. இப்போது இந்த சட்டம் இலங்கை மீது இந்தியா திணித்த ஒன்று , இதனை ஒழிக்க வேண்டும் என இனவாதிகள் கூச்சலிட அரசு கள்ள மௌனம் சாதிக்கிறது. அரசுடன் ஒத்து ஊதிய தமிழ் கட்சிகளும் கூட வாயடைத்து நிற்கின்றன.

*  மாகாண சபை முறையை ஒழிக்க வேண்டும்  என்று கூச்சலிடும் அந்தக் கட்சிகள் தங்கள் மாகாண உறுப்பினர்களை தங்கள் பகுதிகளில் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக அவர்களின் பிரச்சனை இந்த முறை நம் நாட்டுக்கு ஒத்து வராது என்பதல்ல, மாறாக தாங்கள் அனுபவிக்கும் அதே உரிமைகளை தமிழர் அனுபவிக்கக் கூடாது என்ற நல்ல எண்ணம் மட்டும்தான்.

* கூச்சல் போடும் இந்த இனவாதிகள் பெரும் வாக்கு பலம் உள்ளவர்கள் அல்லர். மாறாக சிறு பகுதியினர். இதிலிருந்தே கபட நாடகம் தெளிவாக விளங்கும். இதே ஒரு சிறிய பகுதியினருக்காகதான்  இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஹலால் முறை ஒழிக்கப் பட்டது. அப்போது அரசும் சரி அதில் தொங்கும் தமிழ், முஸ்லிம்  அமைச்சர்களும் சரி வேடிக்கை பார்த்தது தான் மிச்சம்.

* ஆக மொத்தத்தில் அரசின் ஒரே எண்ணம் : வடக்கில் தமிழர் பிரதிநிதி ஆட்சி செய்வதை தடுப்பது ஒன்றுதான்... அதற்க்காக முன்னோட்டம் இது.
இவ்வளவும் சரி ... இப்போது அரசில் பங்கு வகிக்கும்  தமிழ்,  முஸ்லிம்  அமைச்சர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? தங்களுடைய உறுப்பினர்களின் அதிகாரம் பறிக்கப் பட்ட பின்னர் தங்கள் முகத்தை எங்கு வைத்துக் கொள்ளப் போகிறார்கள்?

சிங்கள அமைச்சர் ஒருவர் தமிழருக்கு எதிராக இந்த சட்டம் நிறைவேற்றப் பட்டால் என் பதவி போனாலும் இதை எதிர்ப்பேன் என்கிறார்... அவரின் முதுகெலும்பு நம் சிறுபான்மை அமைச்சர்களுக்கு இல்லாதது ஏன் ?

இந்தக் கேள்விகளுக்கான விடை இன்னும் சில நாட்களில் கிடைத்து விடும். பொறுத்திருந்து பார்ப்போம். இந்த சட்டம் ஒழிக்கப் பட பலரும் பல காரணங்கள் சொல்வது இருக்க அதற்கு எல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல அரசில் பங்கு வகிக்கும் முஸ்லிம் அரசியல்வாதி  சொல்லும் காரணம் தெரியுமா?

" வடக்கில் இப்போது அரசின் புண்ணியத்தால் அபிவிருத்தி நடக்கிறது. வடக்கில் தேர்தல் நடத்தினால் தமிழ் மக்கள் பழக்க தோஷத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பார்கள். அதனை தடுக்க இந்த சட்டத்தை ஒழிக்க வேண்டும்."

மிஸ்டர். அமைச்சர் 'வால்", தட் இஸ் கால்டு ஜனநாயகம்.. உங்களுக்கு யார் அவர்கள் யாருக்கு ஓட்டு போடா வேண்டும் என்று தீர்ப்பு சொல்லும் உரிமையைக் கொடுத்தது?  இப்படியா ஜால்ரா அடிக்கணும்? ஆனா உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு.

( இந்த பழக்க தோஷம் நாள்தானே தமிழ்நாட்டுல ரெண்டு கட்சி மாறி மாறி பொழைப்பு நடத்துது ??? )

Monday, November 26, 2012

மரணம் என்பது என்ன?

என்ன இது வரிக்குதிரை கொஞ்சம் நாள் காணாமல் போய் திரும்பி வந்திருக்கிறானே ... ஆன்மீகப் பணிக்கு போய் விட்டானா? மதம் பரப்பும் கும்பலில் சேர்ந்து விட்டானா?
( இந்த உலக அழிவுக்கு பயந்து?????)

இப்படி எல்லாம் தலைப்பை பார்த்தவுடன் சந்தேக வந்தால் தப்பே இல்லை..... ஆனால் நான் இங்கு பயனுள்ள ஒரு அறிவியல் தகவலை சொல்லத் தான் வந்துள்ளேன்...

அறிவியலும் சரி , ஆன்மீகமும் சரி ,... இன்னும் விடை தெரியாமல் மண்டையை சொறியும் முக்கியமான ஒரு புதிர் மரணம்.
ஆமாம்... உண்மையில் மரணம் என்பதை மருத்துவம் எப்படி தீர்மானிகிறது?

நம்ம ராமசாமி அவுட் ஆ? அப்டின்னு தீர்மானிப்பது எப்படி?
அது கொஞ்சம் சிக்கல் தான். ஏன் ?
மரணம் என்பதற்கு மருத்துவத்தில் வரைவிலக்கணம் இல்லை... அதான்.

" சுவாசம் மற்றும் உணர்வுகளின் மீள முடியாத நிரந்தர இழப்பு மரணம் என்று ஐக்கிய ராச்சியத்தில் மொட்டையாக ஒரு கூற்று உண்டு. ஆனால் பூரண விளக்கம் கிடையாது....
'The irreversible loss of the capacity for consciousness, combined with irreversible loss of the capacity to breathe'. 

ஒரு தேர்ந்த அனுபவம் மிக்க மருத்துவர் அதனை தீர்மானிப்பார்.
உடல் தன செயற்பாடு இழப்பது மரணம்... அதனை சில அறிகுறிகளை வைத்து அறிகின்றனர்.
அவை எவை எனத் தெரியுமா?

வெளிறல் ..
ஆங்கிலத்தில் இதை Pallor என்பார்கள். உடம்பில் வழமையாக ரத்த ஓட்டம் கூடிய பகுதிகள் சிவப்பாக இருக்கும் . இறந்த பின்பு நமது இரத்த ஓட்டம் செயலிழந்து விடுவதால் அந்த இடங்கள் வெளிறிப் போய்  விடும்.
நமது உடலில் வெப்பம் பரவ குருதியே காரணமாக இருப்பதால் உடல் சில்லிட்டுப் போய்  விடும்.  

அசைவற்ற தன்மை...
இது கொஞ்சம் நிச்சயம் இல்லாத விஷயம். இதை நம்பி அடக்கம் பண்ணப் பார்த்து  பல கல்லறைகளில்  உயிர்த்தெழுந்து ஓடினவர்கள் உண்டு.
ஆனால் ஒருவரின் மரணத்தை தீர்மானிக்க கட்டாயம் அவரின் அசைவற்ற தன்மை நிரூபிக்கப் படவேண்டும்... 
குறிப்பாக சுவாச அசைவுகள் இல்லாமல் இருக்க வேண்டும். 
ஒரு சிலருக்கு அந்த அசைவு சில நிமிஷம் இல்லாது போகலாம்.

திறந்த கண்கள்....
இது நமக்கு பரிச்சயமான ஒன்று... நம் தமிழ்ப் படங்களில் சாகும் நபர் இப்படிதான் சாவார்,... ஆனால் இறந்த ஒருவர் கண்களை திறந்த படியே சாவார் என்று கட்டாயம் இல்லை.
இந்நிலையில் கண்ணின் சுற்றயல் பகுதி கண்ணீர் முகிலால் சூழ்ந்து காணப் படலாம்..

நாடித் துடிப்பு ( Pulse )  இல்லாமல் போகும்... வழமையாக கையில் பார்ப்பது நமக்கு பரிச்சயம். ஆனால் மருத்துவ ரீதியாக கழுத்தில் ( Carotid ) , அதுவும் ஒரு நிமிடம் வரை பார்க்க வேண்டும். இது இல்லை என்றால்,,,
அன்னாரின் பூதவுடல்...

இதயத் துடிப்பும் அதே ஒரு நிமிடம் சோதிக்கப் படும்...
சுவாச அசைவுகள் கிட்டத் தட்ட 3 நிமிடங்கள் அவதானிக்கப் படும். 

கண்ணின் மணி சோதிக்கப் படும்... உங்கள் கண்ணை கண்ணாடி முன்பாக சென்று உன்னிப்பாக அவதானியுங்கள் . ஒரு டோர்ச் ஒளி உங்கள் கண்ணில் படட்டும் . கண்மணி சுருங்கும் . இது Corneal Reflex எனப்படும். இறந்த மனிதற்கு இதுவும் சோதிக்கப் படும்...

இவ்வளவும் பார்த்து முடிந்த பின்புதான் மரணத்தை முடிவு செய்வார்கள். ( எவ்வளவு கஷ்டம்? )
இம்புட்டும் இல்லை என நூறு வீதம் முடிவு பண்ணி விட்டுதான் டாக்டர் கண்ணாடியை கழற்றுவார்...
" சாரிங்க ... நாங்களும் எவ்வளவோ ட்ரை பண்ணினோம்....எல்லாத்துக்கும் சொல்லி அனுப்பிடுங்க..."

அப்படியும் ஏதாவது ஒரு விஷயம் நம்பிக்கை  தருகிற பட்சம் ,
" கோட் இஸ் கிரேட்... நம்பிக்கை வைங்க..." இதெல்லாம் சொல்கிறார்கள்... நீங்கள் அடிக்கும் டாக்டர் ஜோக் மாதிரி இல்லையாக்கும்....

குறிப்பு:
நேரம் இல்லாத கொடுமை... அன்பு நண்பர்களிடம் எதையும் பகிர்ந்து கொண்டு பல நாளாகி விட்டது... வரிக்குதிரை பூட்டானோ?? என்கிற சந்தேகமே வந்து விடக் கூடாது என்று தான் இப்படி ஒரு பதிவு. பயனுள்ளதாக இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்...

என்னுடைய வழமையான பதிவுகளைப் போல இது அமையாமல் இருக்கலாம். ஆனால் பதிவுகளை விட்டு விலகாமல் இருந்து விட வேண்டும் . கூடிய விரைவில் அதே உத்வேகத்தோடு பதிவுகளை அளிக்கிறேன்... 




Sunday, October 14, 2012

தமிழில் " ஒன்பது " என்ற சொல்லின் விதிவிலக்கு



தமிழின் குறியீடுகள் பற்றி ஒரு சிறிய அறிமுகத்தை மட்டும் பார்த்தோம் . இப்போது ஒரு சிறு தகவலை மட்டும் விட்டுச் செல்கிறேன் .

தமிழில் இலக்கங்களுக்கான பெயர்கள் தனித்துவமானவை.
பாருங்கள்:
ஒன்று - ஒரு
இரண்டு - இரு
மூன்று - மு
நான்கு - நா ....

இவ்வாறு தொடரும் பெயர்களுக்கு தனித்துவமான ஒழுங்கும் அடிச் சொற்களும் உள்ளன. ஆனால் இந்த வரிசையில் சற்று வேறு பட்டு நிற்பது ஒன்பது மட்டும்தான். எப்படி?

' பது ' என்பது பத்தின் பெருக்கத்தை குறிக்கும் விகுதி. உதாரணமாக
இரு- பது = இரண்டு * பத்து
இவ்வாறே முப்பது , நாற்பது எல்லாமே...

எனவே ஒன்பது என்பது ஏதாவது ஒரு எண்ணின் 10 பெருக்கமாக அல்லவா இருக்க வேண்டும்?

இது தற்செயலாக இருப்பினும் தொடரும் இலக்கங்களை பாருங்கள் .
தொண்ணூறு 90,
தொள்ளாயிரம் 900

என் இந்த மாற்றம் அல்லது  முரண்பாடு ?
ஆய்வாளர்கள் அதற்கு இப்படி விடை தருகிறார்கள்.
ஏழு, எட்டு என்ற வரிசையில் 9 ஐக் குறித்த உண்மையான பெயர்

" தொன் " என்பதாம். ( சிலர் தொள் என்று கூறுகிறார்கள். )
இதன்படி 90= தொன்பது , 900 தொண்ணூறு, 9000 தொள்ளாயிரம் என வழங்கியதாம் .

காலப் போக்கில் எதோ ஒரு காரணத்தால் இது மருவி இன்றைய பெயர்கள் வந்து விட்டனவாம். என்ன ஏற்றுக் கொள்ளும் படியாக இருக்கிறதா?

எது எப்படியோ உங்கள் குழந்தைகள் இனி இந்த கேள்வியை கேட்டால் இந்த விளக்கத்தை சொல்லுங்கள் . மேலும் தமிழில் இந்த தகவலும் எனக்குத் தெரியும் என மார் தட்டிக் கொள்ளலாம் அல்லவா? இந்த விஷயத்தை உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!