Tuesday, September 21, 2010

ஒபாமாவும் ஒரு மசூதியும்

வெள்ளை மாளிகைக்குள் ஒரு புயல் வீசி இருக்கிறது. ஒபாமா சாவகாசமாக சொன்ன சின்ன விஷயம் சர்ச்சையைத் தோற்றுவித்துவிட்டது. செப்டம்பர் பதினொன்று தாக்குதலை யாரும் மறந்து விட முடியாது. இன்று பலி வாங்கப் படும் பல உயிர்களுக்கு அது முதல் விதை.  


அந்த இரட்டைக் கோபுர வளாகத்தில் ஒரு மசூதி கட்ட ஏற்பாடுகள் நடக்கின்றன. அதுதான் சர்ச்சை. ஆனால் ஒரு புறம் மன்னிப்பு என்ற மனித உணர்வை ஊட்டும் அற்புதமான தருணமாக இதைக் கருதலாம். ஆனால் மன்னிக்க நாம் யார்? யார்தான் தவறு செய்யவில்லை? தவிர பயங்கரவாதிகளின் தவறுக்கு உண்மையான முஸ்லிம்களை எப்படி புண்படுத்த முடியும்?  


ஆனால் நடப்பதென்னவோ அதுதான். யாரும் மன்னிக்கவில்லை. 
ஒபாமா மசூதி கட்ட ஆதரவு தந்த ஒரே காரணத்தால் அவரின் ஆதரவு வீழ்ச்சி அடைந்து விட்டதாம். என்ன கொடுமைடா இது? 


வளர்ச்சி பெற்ற, கருத்து சுதந்திரம் பெற்ற அமெரிக்காவில் இந்த நிலையா? 
அதுவும் Mr. President இற்கு. 


தவிர என் தனிப்பட்ட openion! 
நம்ம ஊர் அரசியல்வாதி மாதிரி  சந்தர்ப்பத்துக்கு ஏற்றாப் போல் பேச அவருக்குத் தெரியாதா? உண்மையே பேசினாலும் ஆதாயம் இருந்தா தானே பேசுவாங்க? 
பாவம் பச்சை புள்ளதான் போங்க... 

Monday, September 6, 2010

நான் எப்போது உன் தோழன் ஆகிறேன் ?

நாங்கள் ஒன்பதாம் ஆண்டில் படித்த நேரம் என்று நினைக்கிறேன். எங்கள் பாடத் திட்டத்தில் குழுச்செயன்முறை எனத் தனியாக ஒரு பாடம் உண்டு. ஆரம்பத்திலே நாங்களாக எங்கள் மைதான பிரவேசத்துக்கு பயன் படுத்திய பாடம் அது. அனால் எங்கள் சந்தோஷத்துக்கு முடிவு கட்டுவது போல திடீரென ஒரு ஆசிரியர் நியமிக்கப் பட்டு எங்கள் கோபத்துக்கும் ஆளானார். 


ஒரு முறை குழுவாக செயல் படுவதன் மகத்துவத்தைப் பற்றி விளக்கிக் கொண்டு இருந்தார். 
" குழு முறையாக இயங்குவதனால் ஏற்படும் அனுகூலங்களை பிரயோக ரீதியில் நீங்கள் புரிந்து கொள்வதற்காகவே உங்களை குழுக்களாக ஒன்று சேர்த்திருக்கிறேன். "
"டீச்சர், ஒரு சந்தேகம்! ஒண்ணா சேரும்போது வேலைகள் லேசாகுனு சொல்லிட்டு, இப்ப ஒரே கிளாஸ் ஆறாப் பிரித்து விட்டிங்களே?" 
ஆசிரியை ஒரு கணம் திகைத்து விட்டாலும் பிறகு எங்களை கண்டித்து உட்கார விட்டார். 
சிறுபிள்ளைத்தனமாக பாடத்துக்கு முழுக்குப் போட நாங்கள் கேட்ட கேள்வி பற்றி இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.  உலகம் முழுவதுமாக பரவிக் கிடக்கும் பிரச்சனையே அதுதானே?

மனிதனை நல்வழிப் படுத்த வேண்டிய மத நம்பிக்கைகள் எதைச் செய்து கொண்டிருக்கின்றன? தொடர்பாடலுக்கும் உணர்வுக்கும் , கலைத்துவத்துக்கும் அடிப்படையான மொழியினால் நாம் அனுபவிக்கும் விளைவு என்ன? 
'முரண்பாடுகள்'. 
இவற்றின் விளைவில் முக்கியமான சாராம்சத்தைக் கேட்டால் இதைத் தவிர மிகப் பொருத்தமான விடயமொன்றை சுட்டிக் காட்ட முடியாது. கலாசாரப் பன்முகத்தன்மை குறித்து நாம் பெருமிதம் அடைய வேண்டுமென நான் சிறு வயது முதலே ஊக்குவிக்கப் பட்டுள்ளேன். அதை உணர்வு பூர்வமாக அனுபவித்தும் இருக்கிறேன். 

ஆனால் இந்த பன்முகத் தன்மை எப்போது முரண்பாடுகளுக்கு அடிக்கல் இடுகின்றது என்பதுதான் கட்டாயமாக ஆராயப் பட வேண்டும், சமூக ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும். 
இலங்கையில் மட்டுமே இன ரீதியான பிளவு எவ்வளவு வடுக்களை விட்டுச் சென்றிருக்கிறது என்பது உலகுக்கே வெளிச்சம்! இன்றளவும் ஒருவரை ஒருவர் கை காட்டியது தவிர வேறு எந்த முடிவுக்குமே செல்லாத பிரச்சனை அது. 

சில விஷயங்கள் எனக்கு இன்றளவும் புரியாதவை.
சிறு வயது முதலே இஸ்லாம், கிறிஸ்தவ சகோதரர்களுடன் பழகி இருக்கிறேன். அவர்களின் வழிபாட்டுத் தளங்களுக்கு சென்று மகிழ்ந்தும் இருக்கிறேன். ஆனால் வழிபாடுகள் திருமணச் சடங்குகள் என்பவற்றின் பொது அவர்கள் நம்மவர்கள் அல்லர் என்ற எண்ணக் கரு நிச்சயமாக என்னுள் திணிக்கப் பட்டுள்ளது. முக்கியமாக சக மதத்தவர்களின் வழிபாடு முறை, சடங்குகள், சமயப் பெரியார்கள் இவர்களை மிகக் கீழ்த் தரமாக சாடக் கூடிய கருத்துகள் மிகச் சாதாரணமாக உலவுவதை கேட்டிருக்கிறேன். அவர்களும் அவ்வாறே பேசுவதை அறிந்திருக்கிறேன். நாம் எப்போது சகோதரர்/ எப்போது எதிரிகள்? எங்கள் புரிந்துணர்வின் மேல் விஷம் தூவப் படுகிறதா? அல்லது கசப்புணர்வோடு சகித்துக் கொண்டு வாழ்கிறோமா?  

எங்கள் ஊரில் சிங்களவர்கள் (பௌத்தர்கள்) அதிகமான பகுதிகளில் சகஜமாக நடமாடி இருக்கிறோம். அவர்களோடு நட்பு பாராட்டி இருக்கிறோம். அவர்களின் வெசாக் அப்ப தானத்தில் உண்டிருக்கிறேன். அவர்கள் பெரும்பாலும் எம் ஆலயங்களில் வழிபடுகிறார்கள். திருவிழாக்களில் கலந்து கொள்கிறார்கள். எவ்வளவு கண்ணியமான மனிதர்கள்? ஆனால் அதே ஒரு சிலர் பிணக்குகளின் போது, இன அடையாளத்தைச் சொல்லி (தமிழன்) வசை பாடி உள்ளதையும் கண்டிருக்கிறேன்.   

முடியாத கேள்விகளாக என்னை வாட்டி எடுக்கும் கேள்விகள் இவை.
மதத் தலைவர்கள் எவ்வளவோ காரணம் கூறட்டும். ஆனால் மனிதத் தன்மையைப் போதிக்காத மார்க்கம் எமக்குத் தேவை இல்லை. மற்றவர்களை மட்டம் தட்டிதான் எம் பெருமை வெளிப் பட வேண்டுமா? 
ஓஷோ சொன்னது போல ( அவரின் கருது பற்றி மட்டுமே கூறுகிறேன். அவர் பற்றிய ஆராய்ச்சிகள் இப்போது வேண்டாம்.) மதங்கள் இப்போது மார்க்கங்களாக இல்லை. மாறாக அவை கட்சிகளாகி விட்டன. யார் கட்சியில் ஆள் அதிகமென பொடி போடும் குழுக்களாகி  விட்டன.     

சாதிய ஒடுக்குமுறைகள் குறைந்து விட்டதாக மார்தட்டினாலும் திருமணச் சடங்குகளில் தலை காட்டி விடுகின்றனவே? நிறவெறி அடங்கிப் போய் விட்டதாகப் பேசினாலும் கேலிப் பேச்சுக்கள் அடங்கி விட்டனவா என்ன? (தமிழ்ச் சினிமாவைப் பார்த்தாலே போதும் )
மொத்தத்தில் ஆழ்மனதில் குப்பைகளை இட்டுக் கொண்டு எமக்கு முகத் திரை போட்டுக் கொண்டுதான் நடமாடுகிறோம். 

இப்போதும் கேட்கத் தோன்றுகிறது,
நான் எப்போது உன் தோழன் ஆகிறேன் ?

Friday, September 3, 2010

என் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள்

ஹட்டன் நகரச் சந்தியின் இரைச்சல் என் காதுகளை வழமையாகக் கிழிதெறிந்து விடும். ஏனோ அன்று ஏதோ வெறுமை மட்டும்தான் மனதை நிறைத்து வைத்திருந்தது. என் இயந்திர வாழ்கையில் இது எனக்குப் புதியதாகத் தெரியாவிட்டாலும் அன்றைய தினம் என் தன்மானம் முழுவதையும் விழுங்கி விட்டது போன்ற எண்ணம் ஊற்றெடுத்து இருந்தது.  


கேடுகெட்ட சமூகத்தின் மேல்தான் ஆத்திரம் பொங்கி எழுந்தது. அது எல்லாவற்றையும் அடகுவைத்து முடிந்த பின்பு இறுதியாக அடகு வைப்பது மானத்தைதான். அவன் நேற்று வந்த நாய்! என்னைப் பற்றி என்ன தெரியும் அவனுக்கு? ஏதோ அவன் வேலைக் காரனிடம் கதைப்பது  போலதானே கதைக்கிறான்? ஒரு கடாதாசியை இன்றே எழுதி அந்த வே.. மகனின் முகத்தில் வீசி எறிய வேண்டும். என் பட்டதாரித் திமிருக்கு வேலையா கிடைக்காது? என் வயதுக்காவது மதிப்பு தெரியுமா அவனுக்கு?  


நான் அவனைவிட அதிகம் படித்திருக்கிறேன். அந்த எரிச்சல்தான் அவனுக்கு. என் திறமைக்கு விலை போகாத எனக்கு எவ்வளவு எரியும்? அவனைப் போல சிபாரிசுக்கு உயர்மட்டத்தில் ஒரு ஆளும், ஒண்டிக்கட்டை வாழ்க்கையும் எனக்கிருந்தால் அவன் என் செருப்பைதான் நக்க வேண்டும். "போக விருப்பம் இருந்தா முன்னால போ, இல்லாட்டி  இறங்கு" பஸ் கண்டக்டர் சிங்களத்தில் கத்தினான். ஆத்திரம் பொங்கி எழுந்தது. 'ச்சே.. ஒரு பைக் வாங்கி இருக்கணும். ' காசு குடுத்துத்தானே போறோம்?  


அழுக்கு ஆடையோடு ஒரு மனிதன் வந்து நின்றான். சில்லறை போடுவது என் கடமை போல... எதுவுமே பேசாமல் என் மார்புக்கு முன்னால் கையை நீட்டிக் கொண்டு நின்றான். "இல்ல" அவன் எதுவுமே பேசாமல் நகர்ந்தான். பின்வரிசையில் உட்கார்ந்திருந்த மாணவன் ஒருவன் 2 ருபாய் போட்டு விட்டு பெருமிதப் பட்டுக் கொண்டான். 'அப்பன் காசுதானே' . பிச்சைக்காரன் என்னை ஏளனமாய் பார்ப்பது போல இருந்தது. பீறிட்ட கோபத்தை அடக்கிக் கொண்டேன்.  சிறுவனை அறைய வேண்டும் போல இருந்தது.     


"Tea ?"

"வேணாம்!" எதுவுமே சொல்லாமல் போய்விட்டாள். 
'ச்சே.. இவளால் தான் எல்லாம். பொறுமையாக நல்ல வேலை ஒன்று தேடி இருக்கலாம். இவங்கப்பன் தானே அவசரப் பட்டான். எங்கயாவது தள்ளி விட்டால் போதும் என்று நினைத்திருப்பான். '
அந்தாளைச் சொல்லிக் குற்றம் இல்லை. இவள் இல்லாவிட்டால் வாழ்க்கையா போய்விடும்? அப்போது உயிரே அவள்தான் என்றல்லவா இருந்தது ? தன் சாதித் திமிரெல்லாம் விட்டுவிட்டு அந்த மனுஷன் தியாகம் செஞ்சது மாதிரிதானே பெருமை?    

நான் வேண்டாம். என் பிள்ளைகள் மட்டும் சொந்தம்! என்ன ஜென்மங்கள்? யார் மீது கோபம் என்றே தெரியாமல் தவித்தேன். 
நான் விட்டது சின்ன பிழைதான். கணக்கு சரிபார்க்கையில் ரெண்டு digit  மாறி விட்டது. அதை அழகாய் சொல்லி இருக்கலாம். திரும்ப ஒரு file save பண்ண எவ்வளவு நேரமாகி விடும்? 
அமில, புதிதாய் வந்த பொறுப்பதிகாரி. என்னை விட ஏழெட்டு வயது குறைய இருக்கும். ஒரு பிழை கண்டு விட்டு நாய் போலக் கத்தினான். 

"It's not even a hard work, Mr.Kugan. கம்ப்யூட்டர் முன்னாடிப் பாத்து type பண்ண graduate qualification தேவை இல்ல. எங்க வீடு tommy  செய்யும். " அவனுக்குத் தெரிந்த தமிழில் என்னெனவோ கத்தினான். பியுன்கூட 
 என்னை எகத்தாளமாகப் பார்த்தான். " கேம்ஸ் விளையாடவா வர்ரிங்க? "
' உன்னைப் போல ponography பாக்க வரல" என்று ஓங்கிக் கத்த வேண்டும் போல இருந்தது.  
"He is jealousy about you. You are smarter." மஞ்சுளா என்னைத் தேற்றினாளா, கிண்டல் செய்தாளா  தெரியாது. ஆனால் I was hurt. சக மனிதர்களை மதிக்கத் தெரியாத,  தகுதி அறிந்து பேசத் தெரியாத நபர்கள். 

பிரைவேட் கம்பனிகளில் வேலை செய்வது எதோ சுகவாசியாக இருப்பது போலதான் தெரியும். ஆனால் தான் தோன்றித்தனமாக ஏறிவரும் இலங்கையின் விலைவாசிக்கு முன்னால் எல்லாம் தூசுதான். செய்யும்  தொழிலின் கௌரவத்துக்கு போலி முகத்திரை போட வேண்டும். வீட்டில் உள்ளவர்களுக்கும் அழ வேண்டும். நடுத்தர வாழ்கையின் வானம் பார்த்த கனவுக்கு யார்தான் பலியாகவில்லை? கை ஏந்த முடியாது! ஆனால் rich ஆக சிரிக்க வேண்டும். பிள்ளைகளைப் பொறுத்தவரை , அவர்கள் வசதியான பிள்ளைகளாக காட்டிக் கொள்ளவாவது வேண்டும். 

கௌரவம்! அது ஒன்றுக்கு தானே இவ்வளவும்? அதை அடகு வைப்பதென்றால்?
'பேசாமல் அந்த tea garden இல் சேர்ந்து விடலாம்! 2000 குறைந்தாலும் ராகவன் எனக்குத் தெரிந்த மனிதர்தானே? மரியாதையான மனுஷன். ' மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டேன். 

மணி பத்தடித்தது. "ப்பா..." 
"என்னடா கண்ணா?" 
"காசு கொஞ்சம் வேணும்பா..' மனதுக்குள் எதோ சிரித்தது. 
"எதுக்குமா?" மழலைப் பேச்சு ஏதோ செய்தது. 
" நம்மட மொண்டிசொரில.. " , "ம்ம்" ... 
" கண்டி போறமே..." , "எதுக்குமா?"
  "பார்க் போறோம்.. தலதா போறோம்.. அப்புறம் ..." குட்டி விரல்களை எண்ணிக் கொண்டான். " magic ஷோ.. ஹையா.. " கைகளை ஆனந்தமாய்த் தட்டிக் கொண்டான். 

எவ்வளவு என்று கேட்கத் தோன்றவில்லை. இந்த இங்க்லீஷ் pre -school  பற்றி எனக்குத் தெரியும். சிரித்த முகத்துடன் அன்பாய்க் கறந்து விடுவார்கள். ஆனால் எங்களுக்கு நல்ல respect உண்டு. என் சம்பளத்தில் ஒரு கால் பங்கை நேர்ந்து விட்டுக் கொண்டேன். குட்டி அப்படியே நெஞ்சில் தூங்கிவிட்டான்.
அமிலவை நினைத்தால் முதுகில் ஏதோ ஊர்வது போல இருந்தது. 'வேலைனா அப்படிதான். ' 
இன்னொரு தடவை உங்களிடம் குறைப் பட்டுக் கொண்டால், என் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள் .

நன்றி! 

  

Thursday, September 2, 2010

ஹிட்லரின் ஒற்றை விதை...

சமீபத்தில் படித்து நான் மிகவும் வியந்த, ரசித்த புத்தகம், " மனிதனுக்குள் ஒரு மிருகம்". சந்தேகமே இல்லாமல் மதன் தனது முத்திரையினை பதித்து இருந்தார். மதனுடன் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு. அவர் எழுத்துகள் மூலமாக. அனைத்து  தரப்பினரையும் கட்டிப் போடக் கூடிய லாவகம் அவருக்கு உண்டு.  
எல்லா மனிதர்களுக்குள்ளும் மிருகம் உறங்கிக்கொண்டு இருப்பதை தெளிவாக நிறுவி இருக்கிறார். வாசித்த அனைவரையும் தம் ஆழ்மனதை ஒரு தடவை தடவிப் பார்க்க வைத்து விட்டார். 




வரலாற்றில் வர்ணிக்கப் படும் கொடுரர்களாக நாமும் மறைமுக முகத்திரையினை கொண்டிருப்பதை சுட்டிக் காட்டிவிட்டார்.
மீண்டொரு தடவை உங்களைச் சந்திக்கையில் இப்புத்தகம் தொடர்பான விடயங்களை மறக்காமல் பகிர்ந்து கொள்வேன். 


சரி விடயத்துக்கு வருகிறேன். சமகாலத்திலும் மனித உணர்வு சிதைக்கப் பட்டு, மிருகத் தனம் வெளிப்படையாக உலவுவதைக் காணவும், அவற்றுக்கு காரணமாகவும் நாம் இருப்பதை அறிந்தோ அறியாமலோ இருந்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் மனிதநேயம் பற்றி பேசுவதும் நாங்கள்தான். 
அன்றாட பத்திரிகைச் செய்திகள் கூட இதை காட்டிக் கொடுக்கின்றன. வாரப் பத்திரிகை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். முழுப் பக்கம் ஒன்று ஹிட்லருக்காக ஒதுக்கப் பட்டிருந்தது. சர்வாதிகாரி ஹிட்லரின் விறைப் பையில் ஒரு விதை மட்டும் இருந்ததாம். ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து இருக்கிறார்களாம். சாதாரண செய்திதான். ஆனால் அதன் பின்னணி என்ன? கொடூர ஹிட்லரை பரிகாசப் படுத்துவதுதான் நோக்கம். ஹிட்லரின் குற்றங்கள் ஜீரணிக்கவே முடியாதவை. யாராலும் நியாயப் படுத்தவே முடியாதவை. ஆனால் இவ்வளவு ஆண்டுகள் முடிந்த பின்பும் , இறந்த ஒருவனை பழிவாங்கத் துடிக்கும் வன்மத்தை என்னவென்பது? 


இது புதிய விடயம் அல்ல. ஹிட்லர் நரமாமிசம் உண்பவர், இறந்த உடல்களுடன் உறவு கொள்பவர் என்றெல்லாம் ஏராளமான கதைகள் உண்டு. என்னெனவோ சொல்லி எம் வன்மத்தைத் தீர்த்துக் கொள்கிறோம். ஆனால் ஏறத்தாழ எம் மிருகம் வெளிவருவதைத் தானே அது காட்டுகிறது?
மறப்பதை விடுத்து நாம் புழுங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். மதன் சொல்வது போலவே "வன்முறையாளனுக்கும் எமக்கும் ஓர் அங்குல இடைவெளிதான். 


தோல்வி அடைந்த ஹிட்லர் இறந்த பிறகும் தூற்றப் படுவது இருக்கட்டும். 2 அணுகுண்டுகளால் ஜப்பானியர்களை அழித்த அமெரிக்கா, விஎட்நாமியர்களை அழவைத்தவர்கள், விஷவாயுக் கசிவுக்குக் காரணமானவர்கள், இன்றும் முஸ்லிம்களைக் கொள்பவர்கள், இப்படி அடுக்கிக் கொண்டே போகக் கூடிய குற்றங்களை செய்தவர்கள் இந்தளவு வெறுக்கப் படுவதில்லையே? கீழ்த்தரமாக விமர்சிக்கப் படுவதில்லையே?


இன்னொரு சம்பவம்! தமிழ் என இணையத்தில் தேடும்போது விடுதலைப் புலிகள் பாலியல் குற்றவாளிகள் என ஒரு செய்தி. இடி அமீன் மனைவி இறந்த பின்பும் கொடூரமாக உடலை சிதைத்த கட்சிதான் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு சக மனிதனை கொன்ற பின்பும் அவனைக் சித்ரவதை செயத் துடிக்கிறோம். யாரும் தவறானவர்களாக இருக்கட்டுமே! ஆனால் ஒரு தனிமனிதனின் தன்மானத்தை எவ்வளவு சுரண்டுவது? 


மறுபுறம் சிங்களவர்களை, சிங்களக் காடையர்கள் என அடையாளப் படுத்தும் தமிழ்நாட்டு  மக்களும் உண்டு. அவர்கள் அனைவரும் தமிழர்களுக்கு எதிரானவர்களா? அப்படியெனில் அவர்கள் எம் அனைவரையும் (தமிழர்களை) எதிரிகளாக அடையாளப் படுத்தினால் என்ன தவறு? இரு மொழி என பேசி நின்ற இடதுசாரித் தலைவர்கள் அவர்களயும் உண்டு. சம உரிமை , மனிதம் இதெல்லாம் தாண்டி நாம் விலகிப் போவதாக தென்படுகிறது. 

மனிதன் எவ்வளவு தூரம் வன்மம் படைத்வனாகிப் போகிறான் என்பதற்கு நான் கண்ட இரு சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டேன். தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுக. வலையில் என் கருத்துகளைச் சொல்ல உங்கள் மேலான கருத்துகளை மறக்காமல் விட்டுச் செல்லுங்கள்.
நன்றி..