Monday, June 24, 2013

இனவாதமும் ஒரு இளைஞனும் ...

மூன்று தசாப்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப் பட்ட பின்னர் எதிர்பாராத , எதிர்பார்த்த திருப்பங்கள் இலங்கையில் ஏற்பட்டு வருகின்றன . 

ஒரு பக்கம் கடும் போக்கு வாதிகளின் அட்டகாசம் அதிகரித்து வந்தாலும் மறுபக்கம் தமிழர்களின் பிடி முழுமையாக நழுவி வருவதைக் காணும் போது  கவலையாக இருந்தாலும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் நெஞ்சங்களை காணும்போது மனதுக்கு ஆறுதலாகத்தான் இருக்கிறது. 

இனவாதம் என்பது அடிப்படை லட்சணங்களில் மாறாத பரிமாணம் உடையது. சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதங்கள் அதற்குக் கிடையாது. 

( சிறுபான்மை இனவாதம் : தென் ஆபிரிக்க நிறவெறி ஆட்சி, வருணாசிரமம்..
பெரும்பான்மை இனவாதம் : இந்தி திணிப்பு, இலங்கை...)

தங்கள் இனம் சார்பான தகவல்கள் வரும்போது அதனை ,மட்டுமே ஊதிப் பெருசாக்குவதும் அதே மற்ற நேரங்களில் அடக்கி  வாசிப்பதும் தான் எல்லா இடங்களிலும் நடக்கிறது . இலங்கையின் சிங்கள, தமிழ் பத்திரிக்கைகளும் இதே பணியை செவ்வனே செய்கின்றன . 

தனது இனத்தவர்களிடம் தாங்கள் மட்டுமே ஏமாற்றப் படுவதாகவும் மற்றவர்கள் சுக வாழ்க்கை வாழ்வதாகவும் ஒரு மாயத் தோற்றத்தையுமே இவை உருவாகுகின்றன. 

இலங்கை அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இலங்கையின்  பகுதிகளிலும் வழங்கப் படும் ஆள் அடையாள அட்டையில் சிங்கள மொழியில் கட்டாயம் பெயர் அச்சடிக்கப் படும். 

சிங்களவர்களுக்கான அட்டையில்  சிங்களத்தில் மட்டுமே  இருக்கும் அதே வேளை தமிழர்களுக்கு மட்டும் கூடவே  தமிழில் எழுதப் படும். இது ஓர  வஞ்சனை என்பதும் இதில் ஒரு தேசிய மொழி புறக்கணிக்கப் படுவதாகவும் கூறியே இந்த வழக்கு. 

இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இந்த வழக்கை தொடர்ந்தவர் தமிழர் அல்லர். மஹரகம என்ற இடத்தை சேர்ந்த இசுரு கமகே என்ற 18 வயதே நிரம்பிய சிங்கள இளைஞன் ...

வழக்கின் தீர்ப்பு எக்கேடோ கெட்டுப் போகட்டும்... அடுத்த இளைய தலைமுறை இந்த வன்மம் கொண்ட சாபக் கேட்டில் இருந்து விடுபட்டு விடும் என்ற ஒரு சிறு நிம்மதியாவது கிடைக்கிறது அல்லவா? 

வேடிக்கை என்னவென்றால் இந்த செய்திக்கெல்லாம் தமிழ் பத்திரிக்கைகள் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. வழக்கம் போல இனவாதிகளால் அந்த இளைஞன் துரோகி எனப் படுவான்.... போனால் போகட்டும் ... அந்த இளைஞனுக்கு மனதார ஒரு நன்றியைக் கூறி விடுவோம்... 

Tuesday, June 18, 2013

13 + இலங்கை மீது இந்தியா திணித்த ஒன்று

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான உச்ச கட்டத்தை அடைந்து விட்டோம். தீர்வுக்கான கடைசி வாய்ப்பு இதுவாகத்தான் இருக்க வேண்டும். இதனை இழந்து விட்டால் அநேகமாக தமிழர்கள் தங்கள் இருப்பை மறந்து விட வேண்டியதுதான். 

இந்த சந்தர்ப்பத்தில் 13 பிளஸ் பற்றி பேசாவிட்டால் பிறகு பேச முடியாமலும் போய்  விடலாம்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப் பட்ட தீர்வு (??) இந்த 13 வது திருத்தச் சட்டம். இலங்கை நாட்டைப் பொறுத்த வரையில் இந்த சரத்து ஏற்படுத்திய அதிர்வலைகளை வேறு எந்த சரத்தும் ஏற்படுத்தியது இல்லை.

ஆரம்ப காலத்தில் இருந்து கடும் போக்கு சிங்களவர்களும் சரி, தமிழ் ஆயுதப் போராளிகளும் சரி இதனை ஏற்கவில்லை.  தமிழருக்கு அதிக உரிமைகளை வழங்குகிறது என்று ஒரு தரப்பும் உரிமைகளே வழங்கப் படவில்லை என்று ஒரு தரப்பும் கூறியது தான் வேடிக்கை.

இந்த சரத்து ஒன்றும் தமிழருக்கு தனிப்பட்ட சலுகைகளையோ சுயநிர்ணய உரிமயையோ வழங்கி விடவில்லை. மாறாக ஒரு வரையறுக்கப் பட்ட அதிகாரங்களை வழங்குகிறது. அதாவது தமிழர்கள் அதிகமாக வாழக் கூடிய வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் பிரதிநிதிகளை தேர்வு செய்யக் கூடிய வாய்ப்பை அளிக்கிறது.

இந்நிலையில் இத அதிகாரங்களும் சிறுபான்மை தீவிரவாதமே என்ற அடிப்படை வாதக் கூச்சல் இலங்கையில் வலுப் பெற்று வருகிறது.
இதில் சில வேடிக்கைகளையும் காரணங்களையும் பார்த்து விடுவோம்.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் நடந்து முடியும் வரை தமிழர் தரப்பினால் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு  கீழே இறங்கி வர முடியவில்லை . யுத்தம் முடிந்தால் 13 பிளஸ் தருவோம், வசந்தம் பிறக்கும் என்றெல்லாம் அரசால் வாக்குறுதி வழங்கப் பட்டது. யுத்தம் முடிந்த பின்பு காட்சி தலை கீழாய் மாறியது. இப்போது இந்த சட்டம் இலங்கை மீது இந்தியா திணித்த ஒன்று , இதனை ஒழிக்க வேண்டும் என இனவாதிகள் கூச்சலிட அரசு கள்ள மௌனம் சாதிக்கிறது. அரசுடன் ஒத்து ஊதிய தமிழ் கட்சிகளும் கூட வாயடைத்து நிற்கின்றன.

*  மாகாண சபை முறையை ஒழிக்க வேண்டும்  என்று கூச்சலிடும் அந்தக் கட்சிகள் தங்கள் மாகாண உறுப்பினர்களை தங்கள் பகுதிகளில் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக அவர்களின் பிரச்சனை இந்த முறை நம் நாட்டுக்கு ஒத்து வராது என்பதல்ல, மாறாக தாங்கள் அனுபவிக்கும் அதே உரிமைகளை தமிழர் அனுபவிக்கக் கூடாது என்ற நல்ல எண்ணம் மட்டும்தான்.

* கூச்சல் போடும் இந்த இனவாதிகள் பெரும் வாக்கு பலம் உள்ளவர்கள் அல்லர். மாறாக சிறு பகுதியினர். இதிலிருந்தே கபட நாடகம் தெளிவாக விளங்கும். இதே ஒரு சிறிய பகுதியினருக்காகதான்  இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஹலால் முறை ஒழிக்கப் பட்டது. அப்போது அரசும் சரி அதில் தொங்கும் தமிழ், முஸ்லிம்  அமைச்சர்களும் சரி வேடிக்கை பார்த்தது தான் மிச்சம்.

* ஆக மொத்தத்தில் அரசின் ஒரே எண்ணம் : வடக்கில் தமிழர் பிரதிநிதி ஆட்சி செய்வதை தடுப்பது ஒன்றுதான்... அதற்க்காக முன்னோட்டம் இது.
இவ்வளவும் சரி ... இப்போது அரசில் பங்கு வகிக்கும்  தமிழ்,  முஸ்லிம்  அமைச்சர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? தங்களுடைய உறுப்பினர்களின் அதிகாரம் பறிக்கப் பட்ட பின்னர் தங்கள் முகத்தை எங்கு வைத்துக் கொள்ளப் போகிறார்கள்?

சிங்கள அமைச்சர் ஒருவர் தமிழருக்கு எதிராக இந்த சட்டம் நிறைவேற்றப் பட்டால் என் பதவி போனாலும் இதை எதிர்ப்பேன் என்கிறார்... அவரின் முதுகெலும்பு நம் சிறுபான்மை அமைச்சர்களுக்கு இல்லாதது ஏன் ?

இந்தக் கேள்விகளுக்கான விடை இன்னும் சில நாட்களில் கிடைத்து விடும். பொறுத்திருந்து பார்ப்போம். இந்த சட்டம் ஒழிக்கப் பட பலரும் பல காரணங்கள் சொல்வது இருக்க அதற்கு எல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல அரசில் பங்கு வகிக்கும் முஸ்லிம் அரசியல்வாதி  சொல்லும் காரணம் தெரியுமா?

" வடக்கில் இப்போது அரசின் புண்ணியத்தால் அபிவிருத்தி நடக்கிறது. வடக்கில் தேர்தல் நடத்தினால் தமிழ் மக்கள் பழக்க தோஷத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பார்கள். அதனை தடுக்க இந்த சட்டத்தை ஒழிக்க வேண்டும்."

மிஸ்டர். அமைச்சர் 'வால்", தட் இஸ் கால்டு ஜனநாயகம்.. உங்களுக்கு யார் அவர்கள் யாருக்கு ஓட்டு போடா வேண்டும் என்று தீர்ப்பு சொல்லும் உரிமையைக் கொடுத்தது?  இப்படியா ஜால்ரா அடிக்கணும்? ஆனா உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு.

( இந்த பழக்க தோஷம் நாள்தானே தமிழ்நாட்டுல ரெண்டு கட்சி மாறி மாறி பொழைப்பு நடத்துது ??? )