Monday, September 6, 2010

நான் எப்போது உன் தோழன் ஆகிறேன் ?

நாங்கள் ஒன்பதாம் ஆண்டில் படித்த நேரம் என்று நினைக்கிறேன். எங்கள் பாடத் திட்டத்தில் குழுச்செயன்முறை எனத் தனியாக ஒரு பாடம் உண்டு. ஆரம்பத்திலே நாங்களாக எங்கள் மைதான பிரவேசத்துக்கு பயன் படுத்திய பாடம் அது. அனால் எங்கள் சந்தோஷத்துக்கு முடிவு கட்டுவது போல திடீரென ஒரு ஆசிரியர் நியமிக்கப் பட்டு எங்கள் கோபத்துக்கும் ஆளானார். 


ஒரு முறை குழுவாக செயல் படுவதன் மகத்துவத்தைப் பற்றி விளக்கிக் கொண்டு இருந்தார். 
" குழு முறையாக இயங்குவதனால் ஏற்படும் அனுகூலங்களை பிரயோக ரீதியில் நீங்கள் புரிந்து கொள்வதற்காகவே உங்களை குழுக்களாக ஒன்று சேர்த்திருக்கிறேன். "
"டீச்சர், ஒரு சந்தேகம்! ஒண்ணா சேரும்போது வேலைகள் லேசாகுனு சொல்லிட்டு, இப்ப ஒரே கிளாஸ் ஆறாப் பிரித்து விட்டிங்களே?" 
ஆசிரியை ஒரு கணம் திகைத்து விட்டாலும் பிறகு எங்களை கண்டித்து உட்கார விட்டார். 
சிறுபிள்ளைத்தனமாக பாடத்துக்கு முழுக்குப் போட நாங்கள் கேட்ட கேள்வி பற்றி இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.  உலகம் முழுவதுமாக பரவிக் கிடக்கும் பிரச்சனையே அதுதானே?

மனிதனை நல்வழிப் படுத்த வேண்டிய மத நம்பிக்கைகள் எதைச் செய்து கொண்டிருக்கின்றன? தொடர்பாடலுக்கும் உணர்வுக்கும் , கலைத்துவத்துக்கும் அடிப்படையான மொழியினால் நாம் அனுபவிக்கும் விளைவு என்ன? 
'முரண்பாடுகள்'. 
இவற்றின் விளைவில் முக்கியமான சாராம்சத்தைக் கேட்டால் இதைத் தவிர மிகப் பொருத்தமான விடயமொன்றை சுட்டிக் காட்ட முடியாது. கலாசாரப் பன்முகத்தன்மை குறித்து நாம் பெருமிதம் அடைய வேண்டுமென நான் சிறு வயது முதலே ஊக்குவிக்கப் பட்டுள்ளேன். அதை உணர்வு பூர்வமாக அனுபவித்தும் இருக்கிறேன். 

ஆனால் இந்த பன்முகத் தன்மை எப்போது முரண்பாடுகளுக்கு அடிக்கல் இடுகின்றது என்பதுதான் கட்டாயமாக ஆராயப் பட வேண்டும், சமூக ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும். 
இலங்கையில் மட்டுமே இன ரீதியான பிளவு எவ்வளவு வடுக்களை விட்டுச் சென்றிருக்கிறது என்பது உலகுக்கே வெளிச்சம்! இன்றளவும் ஒருவரை ஒருவர் கை காட்டியது தவிர வேறு எந்த முடிவுக்குமே செல்லாத பிரச்சனை அது. 

சில விஷயங்கள் எனக்கு இன்றளவும் புரியாதவை.
சிறு வயது முதலே இஸ்லாம், கிறிஸ்தவ சகோதரர்களுடன் பழகி இருக்கிறேன். அவர்களின் வழிபாட்டுத் தளங்களுக்கு சென்று மகிழ்ந்தும் இருக்கிறேன். ஆனால் வழிபாடுகள் திருமணச் சடங்குகள் என்பவற்றின் பொது அவர்கள் நம்மவர்கள் அல்லர் என்ற எண்ணக் கரு நிச்சயமாக என்னுள் திணிக்கப் பட்டுள்ளது. முக்கியமாக சக மதத்தவர்களின் வழிபாடு முறை, சடங்குகள், சமயப் பெரியார்கள் இவர்களை மிகக் கீழ்த் தரமாக சாடக் கூடிய கருத்துகள் மிகச் சாதாரணமாக உலவுவதை கேட்டிருக்கிறேன். அவர்களும் அவ்வாறே பேசுவதை அறிந்திருக்கிறேன். நாம் எப்போது சகோதரர்/ எப்போது எதிரிகள்? எங்கள் புரிந்துணர்வின் மேல் விஷம் தூவப் படுகிறதா? அல்லது கசப்புணர்வோடு சகித்துக் கொண்டு வாழ்கிறோமா?  

எங்கள் ஊரில் சிங்களவர்கள் (பௌத்தர்கள்) அதிகமான பகுதிகளில் சகஜமாக நடமாடி இருக்கிறோம். அவர்களோடு நட்பு பாராட்டி இருக்கிறோம். அவர்களின் வெசாக் அப்ப தானத்தில் உண்டிருக்கிறேன். அவர்கள் பெரும்பாலும் எம் ஆலயங்களில் வழிபடுகிறார்கள். திருவிழாக்களில் கலந்து கொள்கிறார்கள். எவ்வளவு கண்ணியமான மனிதர்கள்? ஆனால் அதே ஒரு சிலர் பிணக்குகளின் போது, இன அடையாளத்தைச் சொல்லி (தமிழன்) வசை பாடி உள்ளதையும் கண்டிருக்கிறேன்.   

முடியாத கேள்விகளாக என்னை வாட்டி எடுக்கும் கேள்விகள் இவை.
மதத் தலைவர்கள் எவ்வளவோ காரணம் கூறட்டும். ஆனால் மனிதத் தன்மையைப் போதிக்காத மார்க்கம் எமக்குத் தேவை இல்லை. மற்றவர்களை மட்டம் தட்டிதான் எம் பெருமை வெளிப் பட வேண்டுமா? 
ஓஷோ சொன்னது போல ( அவரின் கருது பற்றி மட்டுமே கூறுகிறேன். அவர் பற்றிய ஆராய்ச்சிகள் இப்போது வேண்டாம்.) மதங்கள் இப்போது மார்க்கங்களாக இல்லை. மாறாக அவை கட்சிகளாகி விட்டன. யார் கட்சியில் ஆள் அதிகமென பொடி போடும் குழுக்களாகி  விட்டன.     

சாதிய ஒடுக்குமுறைகள் குறைந்து விட்டதாக மார்தட்டினாலும் திருமணச் சடங்குகளில் தலை காட்டி விடுகின்றனவே? நிறவெறி அடங்கிப் போய் விட்டதாகப் பேசினாலும் கேலிப் பேச்சுக்கள் அடங்கி விட்டனவா என்ன? (தமிழ்ச் சினிமாவைப் பார்த்தாலே போதும் )
மொத்தத்தில் ஆழ்மனதில் குப்பைகளை இட்டுக் கொண்டு எமக்கு முகத் திரை போட்டுக் கொண்டுதான் நடமாடுகிறோம். 

இப்போதும் கேட்கத் தோன்றுகிறது,
நான் எப்போது உன் தோழன் ஆகிறேன் ?

No comments: