Tuesday, October 9, 2012

" குட்டி " என்று ஒரு அருமையான திரைக்காவியம்

" குட்டி " திரைப்படம் ஒரு கண்ணோட்டம்

தமிழ் சினிமாக்கள் பலவிதம்,.. ஒரு சில திரைப்படங்கள் வந்து ஒரு சிலநாளில் காணாமல் போய்  விடுகின்றன. சில மனதில்  பதிந்து அழியாத இடம் பிடிக்கின்றன .அப்படி  மனதில் நீங்காத இடம் பிடித்த திரைப்படம் குட்டி.ஐயோ ....
சத்தியமாக இந்த குட்டி அல்ல....
////////இந்தக் குட்டி...

தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு போக்கு காணப் படும். ஒரு வெற்றிப் படம் வந்து விட்டால் அதே சாயலில் தொடர்ச்சியாக பல திரைப்படங்கள் குவியும். ஹாலிவூட் திரைப்படங்களுக்கும் நமக்கும் இது தான் பாரிய இடைவெளி. அங்கும் குப்பைத் திரைப்படங்கள் எக்கச்சக்கமாக உண்டு. ஆனால் நான் சொல்ல வந்தது அதை அல்ல...'

அங்கு திரைப்படங்களில் variety நிறையவே உண்டு. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள், முழு வணிக ரீதியிலான படங்கள், சண்டைப்படங்கள், சூப்பர் ஹீரோ கதைகள் என்று விதவிதமாக வரும், பார்க்கும் ரசிகனின் ரசனையை பன் முனைகளை உடையதாக மாற்றும். ஆனால் துரதிருஷ்டவசமாக நமது படங்களில் இந்த ஹீரோ இதான் பண்ணப் போறார்னு முடிவெடுத்து விட்டே போகின்ற நிலைமை.

( இப்போது நிறைய விதிவிலக்கான திரைப்படங்கள் வருகின்றன... அதனை நிச்சயமாக வரவேற்போம்)

*******

ம்ம்.. இப்போ நம்ம விஷயத்துக்கு வருவோம். சினிமா என்பது ஒரு பிரமிப்பு இலக்கியம்... அந்தக் கலை நம்மை 2 மணிநேரம் மெய்மறக்க வைத்து கதையோடு  ஒன்ற வைத்து விட்டால் அந்தக் கலை வென்று விட்டது என்றுதான் அர்த்தம்... எனவே நல்ல படம், குப்பைப் படம் என்பது அவரவர் மனப்பாங்கைப் பொறுத்தது. எனவே அந்த முடிவுகள் உங்கள் கையிலேயே விட்டு விடுகிறேன்.

2001 இல் வெளிவந்து என் மனதில் அழுத்தமாக பதிந்த குட்டி திரைப்படத்தைப் பற்றிதான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

*******

தமிழ் சினிமாவில் நான் பெரும் வருத்ததோடு பார்க்கும் ஒரு விடயம் சமகால பிரச்சனைகளை மையப் படுத்திய திரைப்படங்கள் மிகக் குறைவு.  வன்முறை,காதல், இளைஞர் பற்றிய திரைப் படங்களோடு ஒப்பிடுகையில் சமூக பிரச்சனைகள் பற்றிய திரைப்படங்கள் சார்பளவில் மிகக் குறைவு. அதிலும் கூட காதல், வன்முறைகள் மிகைப் படுத்தியே காட்டப் படுகின்றன.

( அல்லது கதாநாயகர்கள் ஆயுதங்களை தூக்கிக் கொண்டு உலகை மாற்றப் புறப்பட்டு விடுகிறார்கள். இதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும் ,ரசிகர்களுக்கும் தெரியும். அதைப் பற்றி  இங்கு பேசினால் ரசிக உள்ளங்கள் கொதிப்படைந்து பதிவின் நோக்கமே  மாறிவிடும். ஆகவே அது நமக்கு வேண்டாம்.)

திரைக்கதை 

கிராமத்தில் சுதந்திரமாக திரியும் குட்டிப் பட்டாம்பூச்சி அவள் ... உழைப்பாளிகளை பீடித்த வறுமை மட்டுமே அவளை தத்தெடுக்கிறது .
வெறுமையாகிக் கிடக்கும் பணத்தை ஈடு செய்ய மனம் நிறைய அவள் மீது அன்பைப் பொழியும் தந்தை.  தன அன்பு முழுவதையும் குட்டி மீது கொட்டும் தந்தை. அவளது உலகை சிரியதாக்குகிறான் ... சொர்க்கமாக்குகிறான்.வறுமை அவள் கண்களுக்கு தெரிவதே இல்லை. அவள் வாழ்க்கையில் அவளின் பிஞ்சு ஆசைகள் கனவாகவே இருப்பதை அவள் உணருவதும் இல்லை. கிராமத்து சூழல், இயற்கையோடு அவள் ஒன்றி விடுகிறாள். மொத்தத்தில் அவளுக்கு எந்தக் குறையுமே இல்லை. அந்த நாள் வரை...

இடியென வந்து விழுகிறது தந்தையின் இழப்பு. அவளை சுமந்த அவனின் இழப்பு அவளது வாழ்வை திசை மாற்றுகிறது .

அவளின் குழந்தை உள்ளம், கிராமிய வாழ்க்கை , மகிழ்ச்சி அனைத்துமே அவளிடமிருந்து முற்றாக பறிக்கப் படுகின்றன. நகரத்தின் ஒரு பணக்கார வீட்டுக்கு வேலைக்கு அழைத்து வரப்படுகிறாள். அவள் இது வரை கேள்விப் படாத புதிய உலகத்தில் நுழைகிறாள் ...

நகரத்தின் வேகம், வளர்ச்சி, பிரமிப்பு அனைத்தும் அவளுக்கு புதியவை. வானுயர நிற்கும் கட்டிடங்களை அவள் அண்ணாந்து பார்க்கிறாள் ... அவள் இது வரையில் கனவிலும் கண்டிராத பொருட்களைப் பார்க்கும் பொது அவளுக்குள் இனம் புரியாத ஆச்சரியம் .

வேறு ஒரு குழந்தையாக இருந்தால்  இந்த புதிய சூழலை பெரும் ஏமாற்றத்தோடு  எதிர்கொண்டு இருப்பாள். ஆனால் அவள் காட்டுச் செடி . வலிகளை சுகமாக ஏற்கும் மனப் பக்குவம் அவளுக்கு உண்டு. ஏராளமான ஏழைகளைப் போலவே அந்த புதிய இடத்தில் அனுபவமாக ஏற்கும் பக்குவத்தை  ஏற்கிறாள்.


அந்த குடும்பம் பணத் தேடல்களுக்காக நேரத்தை அடகு வைத்து விட்ட ஒரு சராசரி நகர்ப்புறக் குடும்பம். வீடு வேலைகளை முடிப்பதட்கோ குழந்தைகளை கவனிக்கவோ நேரமில்லாத அக்மார்க் மேல்தட்டு வர்க்கம் . ஆனால் அந்தக் குடும்பம் குட்டியை தங்களின் ஒருத்தியாகவே ஏற்றுக் கொள்கின்றனர் .

புதிய ரோஜாவில் மலரை மட்டுமே பார்க்கிறாள் குட்டி. தன வயதுக்கு மீறிய பெண்மையை , முதிர்ச்சியை அவளாக ஏற்றுக் கொள்கிறாள். அதுவும் விரும்பி ஏற்றுக் கொள்கிறாள். இந்த குடும்பம்  என்ற உணர்வை அடைகிறாள் . புதிய உடைகள் , நல்ல உணவு என்ற புதிய அனுபவத்தில் பூரிப்பு கொள்கிறாள்.  நன்றாகவே போகிறது . அந்த குடும்பத்தின் வயதான் பாட்டி வந்து சேரும் வரை.

முதன் முதலாக தான் ஒரு அடிமை என்பதை குட்டி உணர்கிறாள் , பிஞ்சு உள்ளம் வாடும் வரை கொடுமைப் படுத்தப் படுகிறாள் .
பொறுத்துப் பார்க்கும் குட்டி எப்படியாவது தன தாயுடன் சேர்ந்து விடவேண்டும் என தன மேல் அன்பு காட்டும் கடைக்காரனிடம் கெஞ்சுகிறாள் . தன ஊர் பேர் கூட தெரியாத அவள் வழி தெரியும் வண்டியேற்றி மட்டும் விடுங்கள் என வேண்டுகிறாள் .

மறுநாள் அந்த கடைக்காரனை காணாமல் முன்கடை மனிதனிடம் உதவி கோருகிறாள். அவனும்  வண்டியில் ஏற்றி விடுகிறான்.
ஆனால்...????

விருதுகள் 

2002 ஆம் ஆண்டு கெய்ரோ சிறந்த சிறுவர் திரைப்படத்துக்கான விருதைப் பெற்றுக் கொண்டது.

இரண்டு தேசிய விருதுகள். 2002
சிறந்த குழந்தை நட்சத்திரம்   குட்டியாக நடித்த ஸ்வேதா.
சிறந்த இயக்குனர் சிறப்பு ஜூரி விருது ஜானகி விஸ்வநாதன் .

முக்கிய அம்சங்கள் 

கதையின் இசை இளையராஜா . படத்தில் அது எவ்விதமான தாக்கத்தை  இருக்கும் என சொல்லவே வேண்டாம்.

கதையில் எனக்கு மிகப் பிடித்த விஷயம் , கதை யதார்த்தத்தை விட்டு துளியும் அசையவில்லை . கதையின் போக்கிலும் சரி, முடிவிலும் சரி.

அன்றாடம் கதையில் வரும் அத்தனை  கதை மாந்தர்களையும் நாம் கடக்கிறோம் . எத்தனை சிறுவர் தொழிலாளிகள் ? அவர்கள் அவர்களின் வயதுக்கு மீறிய பொறுப்புகளால் திணிக்கப் படுகிறார்கள். ஏற்றுக் கொள்ளவும் செய்கிறார்கள். குட்டி கதாப் பாத்திரம் உருவாக்கப் பட்டது அன்று . நம் முன் நடமாடுவது வளரும் நாடுகளின் சாபக்கேடு.

அந்தப் பாட்டி கொடுமைக்காரியாக வில்லியாக தெரியலாம் . ஆனால் நமது எத்தனை வீடுகளில் அவ்வாறான பாத்திரங்களை சுமக்கிறோம்? வயது கூடிய மாமியார்கள் , பாட்டிகள் சர்வாதிகாரிகளாக உலவுவதை நாம் சற்று ஆராயப் போனால் ஒரு புத்தகமே போடலாம் , மனோ தத்துவம் பற்றி....

குழந்தை தொழிலாளிகள் என்ற எண்ணக்கருவே தப்பு .. அதில் நாம்  அவர்களை நன்றாகத் தானே பார்க்கிறோம்? கொடுமைப் படுத்தவில்லை என்ற பேச்சு பிழை .... சிறுவர் உழைப்பு சந்தேகமே இல்லாமல் ஒழிக்கப் பட வேண்டும் ,....

சமீபத்தில் அங்காடித்தெரு என்று ஒரு சமூகப் பிரச்சனை பற்றி பேசும் நல்ல சினிமா.. ஆனால் அதில் கூட வணிக ரீதியாக சில விஷயங்களை நுழைக்க வேண்டிய தேவை நமக்கு இருப்பது வேதனையான விஷயம்தான் .

குட்டி இப்படி எந்த வணிக அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை .
குறுகிய நேரப் படம். வெறும் 118 நிமிடங்கள்தான். ஆனால் நமது வழமையான 3 மணி நேர படங்கள் தராத மன நிறைவை முழுமையாக தருகிறது.

பங்களிப்பு

குட்டி வேடத்தில் ஸ்வேதா எனும் தேவதை . அசத்தி இருக்கிறாள் . மகளாக பாசம், கிராமத்துக் குழந்தையாக வெகுளித்தனம் , ஏழையாக ஒரு முதிர்ச்சி என முகபாவங்களில் அசத்தி விட்டாள் .

தந்தை வேடத்தில் நாசர் . குறைந்த நேரத்தில் மனதில் நிற்கிறார் . கடையில் பொறுப்பாளராக குணச்சித்திர வேடத்தில் விவேக்.  மனிதாபிமானம் மிக்க ஒரு சராசரி பாத்திரம் ... அது சமூக அவலங்களை ஏக்கத்தோடு பார்க்கும் . ஆனால் அதனால் எதையும் சாதிக்க முடியாது... மனதைத் தொட்டு சொல்லுங்கள் , அது நீங்கள்தானே? அல்லது நான்தானே?

அந்தக் குழந்தையின்  கஷ்டத்தை  சகிக்கவும் முடியாமல் , எதுவும் செயவும் முடியாமல் தடுமாறும் போது புதிய தளத்தில் விவேக்.  இரட்டை அர்த்த வார்த்தைகளோடு  வருபவரா இவர்?

 பாட்டியாக எம்.என்.ராஜம் . அப்பப்பா.... கதையோட்டத்தை தூக்கி நிறுத்துபவர் இவர்தான் . கதையில் மிகக்  குறைவான பாத்திரங்கள்தான். ஆனால் அவை போதும் இந்த நல்ல கதைக்கு. படம் முழுவதும் அவர் மீது  வெறுப்பு வருமளவு தன நடிப்பை அள்ளிக் கொட்டி உள்ளார் ராஜம்.

கதை எழுத்தாளர் சிவசங்கரி அவர்களுடையது. இவ்வாறான சமூக பிரச்சினையை ஆழமாகவும் அழுத்தமாகவும் தந்த அந்த படைப்பாளிக்கு நன்றிகள் .

ஜானகி விஸ்வநாதன் இந்த திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார். அருமையான ஒரு திரைகாவியத்தை தந்த அவருக்கு வாழ்த்துகள்.

********

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது இந்த திரைப்படம். பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த நான் அதே நினைவோடு மீண்டும் பார்க்காமல் விமர்சன செய்கிறேன். அது அந்த திரைகதையின் எவ்வளவு பெரிய வெற்றி?

வசூல் பற்றி தெரியவில்லை . தெரிந்தால் கோடிட்டுக் காட்டுங்கள் . ஆனால் இப்படி ஒரு நல்ல முயற்சியை அறிமுகப் படுத்தும் பொது அது தேவை இல்லை என நினைக்கிறேன்.

இந்த திரைப்படம் பார்க்கும் பொது எனக்கு 13 வயது இருக்கலாம் .
" ஏம்பா? குட்டியை இன்னொரு வீட்டுக்கு வேலைக்கு அனுபிட்டானா அந்த கடைக்காரன்?"

அதற்கு குட்டி எங்கு செல்கிறாள் என அப்பா சொன்ன போது மனதில் ஏற்பட்ட வலி .... அன்று  முழுதும் குட்டியை நினைத்து நான்  தூங்காததும் என் தலையணை நனைந்ததும் இன்னும் ஞாபகம் இருக்கிறது. இன்னொரு குழந்தைக்காக குழந்தையாக நான் முதல் தடவை அழுதது அன்றுதான் ....நீங்கள் இந்த படத்தை தவற விட்டிருந்தால் மறக்காமல் ஒரு முறை பார்த்து விடுங்கள். 
********

பின்குறிப்பு:

உனக்கு தமிழ் படம்  பாக்க வராதோ ? இங்கிலீஷ் விமர்சனம்  எழுதுற அளவுக்கு அப்படக்கரோ நீ? அப்டின்னு ஒரு நண்பன் கேட்டதாலோ , அல்லது...

நீ ரெண்டு தரம் அதும் subtitle போட்டு இங்க்லீஷ் படம் பாத்துட்டு எதோ உலக சினிமாவை கரைச்சு குடிச்சவன் மாறி விமர்சனம் எழுதுறியா? அப்டின்னு இன்னொரு நண்பன் சிரிச்சதாலோ இந்த விமர்சனம் அவசர அவசரமாக எழுதப் பட்டது என்று நீங்கள்  நினைத்தால் அதற்கு  நிர்வாகம்  பொறுப்பல்ல,,,
ஹீ.. ஹீ....
22 comments:

 1. அறியாத படம் விமர்சனத்துக்கு நன்றி

  வணக்கம் தினபதிவு திரட்டி உங்களை வரவேற்கின்றது

  தினபதிவு திரட்டி

  ReplyDelete
  Replies
  1. அப்படியா ? இந்த திரைப்படத்தை அறிமுகப் படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் . அருமையான திரைப்படம். கட்டாயம் பார்த்து விடுங்கள்.

   Delete
 2. விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது...

  பார்த்துடுவோம்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. என்ன திண்டுக்கல் அண்ணா ... நீங்கள் இன்னும் இந்த திரைப்படத்தை பார்க்கவில்லையா? ஆச்சரியமாக இருக்கிறது. நான் 10 வருடங்களுக்கு முன்பு பார்த்தது . இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை. கட்டாயம் பார்த்து விடுங்கள். நானும் இந்த திரைப்படத்தை தேடியும் பார்த்து விட்டேன் . தரவிறக்கவும் தேடினேன். கிடைக்கவில்லை.

   Delete
 3. தமிழ்நாட்டில் நல்ல படங்கள் ஒடக்கூடாது என்று சாபம் இருக்கிறது.
  இப்படத்திற்கு அச்சாபம் தப்பாமல் பலித்தது.

  உங்கள் பதிவு... என்னுள் ‘குட்டி’ ஏற்படுத்திய தாக்கத்தை உயிர்த்தெழச்செய்தது.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. படம் ஓடவில்லை என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும் ... மிக்க வருத்தம் அடைகிறேன் தோழா... ஆனால் உங்களை போன்ற ரசிகருக்கு அந்த படத்தின் அருமை தெரிந்திருக்கும். மிக்க நன்றி நண்பா... வருகைக்கும் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கும்....

   Delete
 4. அருமையான,நல்ல படத்தின் விமர்சனம்..அருமை

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி பாலாஜி... வருகையால் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் தொடர்ந்து இணைந்து இருங்கள்..

   Delete
 5. இப்படம் வந்த காலத்திலேயே பார்த்தேன். சிறந்த தமிழ்ப் படத்திலொன்று!, ஆனால் பெரிதாகப் பேசப்படவில்லை. வெளிநாடுகளில் கவனிக்கப்பட்டது.
  சாட்டை பார்த்துவிட்டீர்களா?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் யோகன். அதனால்தான் தோல்விப் படம் என்றதும் ஆச்சரியமாக உள்ளது. நல்ல விமர்சன வரவேற்பு இருந்தது அல்லவா? இன்னும் சாட்டை பார்க்கவில்லை நண்பா...

   Delete
  2. தரவுகளை தேடித் பார்த்தேன் நண்பா. இலங்கையில் சில பத்திரிகைகளில் , புத்தகங்களில் நல்ல பெயரை பெற்றுள்ளது. படம் பணத்தை அள்ளிக் கொடுக்காவிட்டால் பரவாயில்லை நண்பா... நமைப் போன்றவர்களை இன்னும் பேச வைக்கிறதே... அது போதும் . எதிர்காலத்திலும் நல்ல படைப்புகளின் சேகரிப்பில் இதுவும் அடங்கி இருக்கும்.

   Delete
 6. பார்க்க நினைத்து தவிர்த்த படங்களில் இதுவும் ஒன்று.. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பார்கிறேன்.. உங்க பதிவின் ஓபினிங் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. பார்க்க நினைத்து தவிர்த்த படங்களில் இதுவும் ஒன்று//
   இது ஏன் பார்க்காமல் விட்டீர்கள்?

   Delete
 7. முத பாரவை பார்த்து மிரண்டு விட்டேன்..அப்புறம் நீங்க சொல்ல வந்த குட்டி என்னவென்று தெரிந்து நிம்மதி வந்தது.. :)
  நல்ல விமர்சனம்.. ரொம்ப அனுபவித்து எழுதி உள்ளீர்கள். எனக்கு மிகவும் பிடித்த படம் இது..

  ReplyDelete
  Replies
  1. அதுவா? அந்த " குட்டி" என்று நினைத்து வந்தவர்கள் ஓடிவிடக் கூடாது என்று நினைத்துதான் அப்படி ஒரு முன்னறிவித்தல் ராஜ்... மிக நல்ல படம் ராஜ் , ஆனால் பல நல்ல ரசிகர்கள் கூட இந்த படத்தை பற்றி இப்போதான் அறிகிறார்கள் என்று தெரிய வருகிறது .தோல்விப் படம் எப்று கேட்டால் கவலையாக உள்ளது .

   Delete
 8. பார்த்த படம் என்ற போதும் விமர்சனப் பதிவு அருமை .. சிறுவர்கள் படம் என்றால் எனக்கு அலாதிப் பிரியமுண்டு .. குட்டி, மல்லி, முதலைப் போன்ற படங்கள் யதார்த்தம் தாங்கிய சிறுவர் வாழ்வை சித்தரிக்கும் படங்களாகும்.. பல இரானிய படங்களும் இப்படி சிறுவர் வாழ்வை பிணைந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றையும் பலர் காண வேண்டிக் கொள்கின்றேன் . நன்றிகள் !

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் இக்பால். தமிழில் இவ்வாறான நல்ல சிறுவர் பற்றிய திரைப்படங்கள் புறக்கணிக்கப் படுவதால்தான் நாம் அயல் சினிமாவை சுட்டிக் காட்டும் நிலைக்கு ஆளாகி உள்ளோம்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

   Delete
 9. ஈரானியத் திரைப்படங்கள் குறைந்த செலவில் தயாரிக்கப் படுகின்றன . ஆனால் தரம் குறைவதில்லை. Children of Heaven போன்ற படங்கள் மிகச் சிறந்த உதாரணங்கள் . சிறுவருக்கான படங்கள் உண்மையிலேயே தமிழில் மிகக் குறைவு. அது போல சிறுவர்கள் பற்றிய திரைப்படங்களும் மிகக் குறைவு. அப்படியே வரும் படங்களுக்கும் வணிக சாயம் பூச வேண்டி உள்ளது. அஞ்சலி, பசங்க போன்றவை அந்த ரகம்தான்

  ReplyDelete
 10. குட்டி என்றதும் தனுஷ் படத்திற்கு திரைப்பட விமர்சனம் எழுதும் அளவிற்கு நண்பர் வளர்ந்து விட்டாரா என்று நினைத்தேன்.( ஹ ஹா) அப்புறம் தான் கேழே பார்த்தேன். நன்றாக விமர்சனம் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள், நேரம் கிடைக்கும் பொது பார்த்து விட வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. தனுஷ் படத்திற்கு திரைப்பட விமர்சனம் எழுதும் அளவிற்கு நண்பர் வளர்ந்து விட்டாரா என்று நினைத்தேன்.//
   ஹா.. ஹா... கட்டாயம் பார்த்து விடுங்கள் நண்பா... நல்ல ஒரு திரைப்படம்

   Delete
 11. தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்.நண்பர் ராஜ் வலையில் உங்களை கண்டு இங்கு வருகிறேன் நண்பா..வந்ததும் தனுஷ் இருக்கும் படத்தை பார்த்து அதிர்ந்துட்டேன்.கீழே இருந்து இன்னொரு படம் எனது நினைவுகளை தட்டியது.சில வருடங்களுக்கு முன்பு பார்த்த படம்..அநேகமாக மறந்து போய்விட்ட ஒரு சிறந்த படத்தை திரைப்பார்வையாக தந்த தங்களுக்கு எனது நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை நண்பா... நட்பு தாமதமாகக் கிடைத்தாலும் இனிமை தருவதுதானே? நண்பர் ராஜ் இற்கு நன்றி...

   Delete