Thursday, December 30, 2010

ஒரு தேசமும் தேசிய கீதமும்....

          சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தர மாட்டார் என்பார்கள். இலங்கையின் நிலைமை அந்த நிலையில்தான் தடுமாறிக் கொண்டிருக்கிறது . முப்பது வருட கால யுத்தம் தமிழர்களை சொல்லொண்ணாத் துயரத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. யுத்தம் முடிந்து விட்டது, இனி யாவரும் ஒரு தாய் மக்கள் என அரசும் ஓயாமல் பாடிக் கொண்டிருக்கிறது.  


         தமிழர்களுக்கு மூச்சு விடக் கூட அவகாசம் தரப் படவில்லை. மாறாக அவர்களை மேலும் நோகடிக்கும் நிகழ்ச்சிகளே அரங்கேறுகின்றன.  மனிதாபிமான நடவடிக்கை என்று நடந்து முடிந்த யுத்ததிற்கு பெயரும் சூட்டப் பட்டுள்ளது. பயங்கரவாதத்தில் இருந்து  நாட்டை காப்பாற்றியதை மார்தட்டும் அதே வேலை, இது தமிழர்களை வெற்றி கொண்டு தங்கள் காலடியில் போடு விட்டதை  மார்தட்டும் சிலரும் இல்லை என கூற முடியுமா? அதுவும் அரசு தரப்பினரே இந்த கூச்சலை போடும் போதும் அதனை கண்டிக்கவும் நாதி இல்லை. 


          இனி நடக்கப் போவது ஜனநாயக ஆட்சி இல்லை. பக்கச் சார்பான ஆட்சிதான் என கோடிட்டுக் காட்டும் பல நிகழ்வுகள் இலங்கையில் நடந்தேறுகின்றன. தமிழ் பேசும் மக்களையும் அவர்களின் உணர்வுகளையும் மிதிக்கத்தான் போகிறார்கள். அதைத் தட்டிக் கேட்பது நடக்கப் போவதுமில்லை. 


         தமிழர்களின் உணர்வுகளை நசுக்கும் பல நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்ட முடிந்தாலும் இப்போது அதற்கு மகுடம் வைத்தாட் போல் பேசும் விஷயம்தான் இந்த தேசிய கீதப் பிரச்சனை. 


         தெளிவாக சில விஷயங்களை சுட்டிக் காட்டி விடுகிறேன். 
இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் நடை பெற்றது. அதில் இனி இலங்கையில் தேசியகீதம் சிங்களத்தில் மட்டுமே பாட வேண்டும் என ஒரு யோசனை முன்வைக்கப் பட்டது. இந்த யோசனைக்கு ஏதாவது பயன் உண்டா? நாட்டில் தலை விரித்து ஆடும் விலைவாசி பற்றி,தறி கேட்டு போன பொருளாதாரம் பற்றி எந்த யோசனையும் ஏன் முன்வைக்கப் படுவதில்லை? 


        தவிர மிக்க மரியாதை தரப் படும் கீதத்தில் இருந்து கூட தமிழர்களை அன்னியப் படுத்த வேண்டுமா? நாட்டின் ஒருமைப் பாட்டை குலைக்கும் இந்த யோசனை எதற்கு? தமிழர்களை அடக்க நினைக்கும் இனவாதத்தின் துடிப்பே இது! 


        பௌத்த பிக்கு ஒருவர் ஒரு படி மேலே போய் இது வரை தமிழில் தேசியகீதம் பாடியது தேசத்துரோகம்  என்று பேசி இருக்கிறார். எந்த நாட்டிலும் பெரும்பான்மை மொழியில்தான் , ஒரு மொழியில்தான்  தேசியகீதம் பாட வேண்டும் என விளக்கம் கூறி உள்ளார். அமைச்சர் விமல் வீரவன்ச காட்டியுள்ள உதாரணம் இந்திய. அவரின் போது அறிவு அவ்வளவுதான். இந்தியாவின் பெரும்பான்மை மொழி ஹிந்தி. தேசியகீதம் பாடப் படும் மொழியோ வங்காளம். ஆனால் இந்த விடயம் அப்பாவி சிங்கள மக்களுக்கு விளங்கப் போவதில்லை. மாறாக தொடர்ந்தும் நச்சு விதை அவர்கள் மத்தியில் விதைக்கப் படும். இந்த நியாத்தை விளக்கி தமிழில் மட்டுமே பாடச் சொனனால் என்ன என்று கேள்வி கேட்கப் பட்டால் அது தேசத்துரோகம், பிரிவினைவாதம். 


        யோசனைக்கு கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர் தமிழ் நாட்டிற்கு  மட்டும் முதல்வர் என்று கோபம் கொப்பளிக்க கூறி உள்ளார் பிக்கு. பாவம் ஒரு சில வாக்குகளிட்காக தமிழின் காவலனாக நடிக்கும் பெருந்தலைவரின் பெருந்தன்மை பற்றி அவருக்கென்ன தெரியும்? 


        நல்லவேளையாக இந்த யோசனை நிராகரிக்கப் படு விட்டது. ஆனால் கட்டாயமாக எதிர் காலத்திலும் இவ்வாறான இனவாத சிந்தனைகள் முன்வைக்கப் படும். அதற்கு நாட்டுப்பற்று என்று சாயம் பூசப் படும். சில முறியடிக்கப் படும். சில நிறைவேற்றப் பட்டு சிறுபான்மை இனத்தினரை காயப்  படுத்தும். என்ன செய்வது? தவறுகளை மறைக்கத் தான் பௌத்தம் என்றொரு கவசம் இருக்கிறதே? 




Saturday, October 16, 2010

'சில்லறை' புத்தி

பல்கலைக்கழக வார விடுமுறைக்காக வீடு வந்து கொண்டிருந்தேன். வழமையான சாகசம்  நிறைந்த பஸ் பயணம்தான். தனியார் வண்டி என்பதால் தன தாராள மனதுடன் பயணிகளைத் திணித்துக் கொண்டிருந்தார் நடத்துனர். 

அழுக்கு உடையுடன் பொலிதீன் பை சகிதமாக உள்நுழைந்தார் அந்த அரைக் கிழவன். முகத்தை வியர்வை ஆக்கிரமித்து இருந்தது. லேசாக குடித்து இருந்தது போலவும் இருந்தது. ஒரு பாண், சில மரக்கறிகள் வகையறாக்கள் பையில் இருந்திருக்கலாம். 

" ஐயா, காசு எடுங்க .." கூட்டத்தில் நீந்தினான் கண்டக்டர். மனிதர் தடுமாறி இருபது ரூபாயை நீட்டினார். 
"இறங்குரப்ப ரெண்டு ரூவா தாரேன்" 

பின்னால்  வந்த அரசுப் பேருந்துடன் ஒரு பந்தயம் காட்டி விட்டு அவசரமாக கிழவனை கழுதைப் பிடித்து தள்ளினான். 
"மிச்சம்..? " 
"பிறகு எடுங்க .. டக்குனு இறங்குங்க..  இறங்குங்க..  "
அந்த  மனுஷர் விடாப் பிடியாய் நின்றார். பின்னால் வரும் பஸ் நெருங்க கண்டக்டர் வேறு வழி இல்லாமல் ஒரு ரெண்டு ரூபாயை முகத்தில் விட்டெறிந்தான்  . கிழவன் எதோ தூஷணம் பேசி விட்டு நகர்ந்து கேட்டது. 

" குடிகாரன், இவனையெல்லாம் ஏத்தவே கூடாது. ரெண்டு ரூபாய்க்கு அலையுறான். " அவனை ஆமோதிப்பது போல சில சிரிப்புகள். 

இந்த சம்பவம் உங்கள் அனுபவத்தை சுட்டுச் சொன்னது போலக் கூட இருக்கலாம். சாதாரண விடயமாய் மறைந்து போயும் விடலாம். ஆனால் சம்யுதாய பிழைகளை எதிர்த்த ஒருவன் ஏன் அவமதிக்கப் படவேண்டும்? 

அந்த  இரண்டு ரூபாய்க்கு ஒரு இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளி படும் பாடு கொஞ்சம் இல்லை. பிச்சைக் காசு என அவமான படுத்தும் இவர்கள் அந்த சில்லறைக் காசுகளில் தானே பிழைக்கிறார்கள்? ஒரு ருபாய் குறைந்தாலும் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? 

குறை இவர்கள் மீது மட்டுமல்ல. அவர்களை ஆமோதித்து சிரிக்கும் நாங்களும் தான் குற்றவாளிகள். 
பள்ளித் தோழிகளின் நமுட்டு சிரிப்புக்கு பயந்து நாகரிகமாக two rupees  இணை விட்டு விடும் இளைஞர்களும் பெற்றவனின் ரெண்டு ருபாய் வேதனை பற்றிப் புரிந்து கொள்வதில்லை. 

படித்தவர் முலாம் பூசிய நாம் போலி கௌரவத்தை உதறித் தட்டிக் கேட்டால் மட்டும் தான் தினக் கூலிகளின் முகத்தில் சேறு பூசும் இவர்கள் திருந்துவார்கள்.  

Thursday, October 7, 2010

த்ரீ இடியட்ஸ் : 2 முட்டாள்களும் ஒரு அதிபுத்திசாலியும்

ஒருவாறாக  த்ரீ இடியட்ஸ் படம் முடிவாகி இருக்கிறது. ( தலை முழுகுதல் அல்லது நேர்ந்து விடல் என்று சொல்லலாம். ) 
அனைவரின் விருப்பத்துக்கமைய (??). விஜய் நாயகனாக நடிக்கிறார். எல்லாம் நன்மைக்கே என விதியை நொந்து கொள்வோம். படம் எப்படி இருக்கலாம் என ஒரு முன்னோட்டம் பார்க்கலாம். 

படத்தின் தலைப்பே கதையை சொல்லும். தளபதியை முட்டாள் என்று சொல்ல எந்த கொம்பனுக்கும் அருகதை இல்லை என்பதால் இந்த பெயர் என்பதை கருத்தில் கொள்ளவும். தமிழ் வளர்க்கும் செம்மலின் ஆலோசனை, வரிவிலக்கு என்பவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ் பெயர். தமிழுக்கேற்ற ( தளபதிக்கேற்ற?) மாற்றங்களும் உண்டு என்பதை கருத்திட் கொள்க. 

தலைவர்  get -up  மாறாமல் வந்து திரையில் நின்றாலும் அவரை இருபது வயது கல்லூரி மாணவன் என நம்ப வேண்டிய கடமை ரசிகர்களாகிய எமக்கு உண்டு என்பதை ஒரு காலும் மறக்க வேண்டாம். (இதை வாசிக்க முன்பு ஹிந்தி படத்தை மறவாமல் ஞாபகப் படுத்திக் கொள்ளவும். ஏனெனில் தமிழில் பார்க்கும் போது படத்தையே வெறுத்து விடலாம்.) 

பட   போஸ்டரில் விஜய் ஆஜானுபாகுவாய் நிற்க பக்கத்தில் ரெண்டு பாவப் பட்டவர்கள் பரிதாபமாய் நிற்கிறார்கள். படம் முழுக்க தளபதியே வருவதால் அவர்களை விட்டு விடலாம், பாவம். 

அமீர் கான் போலவே ராக்கிங் நேரத்தில் என்ட்ரி கொடுக்கிறார் விஜய். ஆனால் அந்த கணத்தில் ஐந்து பேர் தோன்றி ஒன்னாக இணைகிறார்கள். அங்குதான்பா தலைவர் நிற்கிறார். ராக்கிங் தொல்லையால் கஷ்டப் படும் எல்லோரும் " இதுகெல்லாம் முடிவு கட்ட யாரும் இல்லையா என அலறும் காட்சி இருப்பதாக ஒரு கொசுறுத் தகவல். 

அந்த  நேரத்தில் சீனியர் முகத்தில் கரி பூசி விட்டு அவர்களோடவே ஒரு opening சாங் பாடி ஆடுகிறார். அதில் வழக்கம் போலவே எமக்கெல்லாம் அறிவுரை மழை உண்டு. அப்படியே தலைக்கு " மிரட்டல் மெசேஜ் உண்டு. தன்னோடு நடிக்க வராத ஒருத்தருக்கு விடுறாரு பாருங்க டோஸ்! அதற்குப் பின் அடுத்த படத்துக்கு அவரே சான்ஸ் கேட்டு கெஞ்சுவார் பாருங்க. 


 பேப்பர் திருடி அகப் பட்ட பின்பு professor அடிக்க வாரார். " மேல கை வைக்க முன்ன ஒரு தடவைக்கு ......" பேசுறாரு பாருங்க . விசில் மழை.. 


நிச்சயம் பண்ணப் பட்ட தமிழ் கரீனா கபூர் இற்கு பொண்ணுன்னா எப்படி இருக்கணும்னு lecture அடிக்கிறார். ( ஏற்கனவே பல படங்களில் நிச்சயம் பண்ணப் பட்ட பெண்களை கவர் பண்ணிய அனுபவம் இருப்பதால் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை. ) 


ஒரு    தனி டூயட் சாங், ஒரு குத்து உண்டு. மிகுதி ஒரு பாட்டில் விஜய் காலை வளைத்து வளைத்து ஆடுவதை வியப்புடன் பார்க்க மற்ற இருவருக்கும் சான்ஸ் வழங்கப் படும். 


நண்பன் அடி பட்டவுடன் ஆம்புலன்ஸ் மக்கர் பண்ண highway இல் தூக்கிக் கொண்டு ஓடுகிறார். முடிந்தால் சிகிச்சையும் பண்ணுகிறார். படத்தில் ஏராளமான நல்ல கருத்துகள் தெளித்து விடப் படும். நண்பனின் வறுமை கட்டும் இடத்தில அரசியலும் உண்டு. ( மேலிடத்துக்கு கோபம் ஏற்படாத வகையில்!)


படத்தில்   ஒரே குறை. சண்டைக் காட்சி இல்லையே. ஆனால் கரீனாவை ரௌடி  கும்பலை விட்டு கிண்டல் பண்ண விடலாம். ஆனால் அதில் ஒரு பெரிய ரிஸ்க் உண்டு. கதை மாறி விஜய் 
ரௌடி  கும்பலை வதம் செய்ய புறப் பட்டு விடலாம். சோ அந்த ஐடியா கான்செல். ஆகவே காமெடிக்கு கொடுப்பது போல தனி track கொடுக்கலாம்.


 காமெடி பற்றி கவலையே இல்ல. அவரின் நடிப்பைப் பாத்தாவே போதும். 


சொன்னது கொஞ்சம் தான். திரையில் பாருங்க அசந்து போய்டுவிங்க. முடிந்தால் உங்கள் சீன் களையும் அனுப்பி விடுங்கள். புண்ணியமாய்ப்  போகும்.  


பி.கு. 
என்னைத் திட்டும் நண்பர்களே! 
இந்த கட்டுரையின் ஒரே நோக்கம் தளபதியை உசுபேற்றியாவது நடிக்க சொல்லத் தான். அவரின் திறமை பழைய படி வெளிக் காட்டப் படத் தான். நல்லா வந்த சந்தோஷமாப் பாக்கப் போறது நானும்தான்.  



Wednesday, October 6, 2010

ஆசியர்கள் காட்டுமிராண்டிகளா?

கிரிக்கெட் மறுபடி ஒரு சூடான சர்ச்சைக் களமாகி விட்டது. முதலில் பாகிஸ்தான் சூதாட்ட விவகாரம். பின்பு பந்து சுரண்டும் படலம். இவற்றையெல்லாம் தட்டிக் கேட்கும் நாயகன் டேரல் ஹெயார். சாட்ஷாத் முரளிக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த அதே நாயகன் தான். 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முறைகேடாக நடந்ததை யாரும் மறுக்கவோ மன்னிக்கவோ முடியாது. ஆனால் அதற்கு ஹெயார் கூறியிருக்கும் விளக்கங்கள் அற்புதமானவை. 

" பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நாகரீகம் தெரியாதவர்கள். அவர்கள் விளையாட்டை சரியாக விளையாடத் தெரியாதவர்கள். மற்ற அணியை எதிரிகளாகப் பார்ப்பார்கள்.எதிரணி வீரர்களை வசை பாடுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. :" இப்படியெல்லாம் தொடர்கிறது ஹெயாரின் செய்யுள். 

சொல்பவரின் அணியின் லட்சணம் உலகே அறியும். எதிரணி வீரர்களை மிக மோசமாக வசை பாடுவதில் ஆஸ்திரேலியர்களை மிஞ்ச முடியுமா? நிறவெறியின் உச்சம் அல்லவா அவ்வணி? மற்ற அணியின் பலத்தை குறை கூறுதல், தோற்று விட்டால் நொண்டி சாக்கு சொல்லுதல் இதற்கேல்லாம் ரிக்கி பாண்டிங்கை விட ஒரு சிறந்த உதாரணத்தை சொல்ல முடியுமா? கடந்த போட்டியில் கூட ஆட்டமிழந்து விட்டு அநாகரிகமாக பாட்டை தூக்கி சேட்டை செய்தவர். இதெல்லாம் ஏன் ஹெயாருக்கு தெரியவில்லை? 

Ricky Ponting exchanges words with India's fielders after his dismissal 


யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப் பட வேண்டும். ஆனால் அதற்காக ஒருகுறிப்பிட்ட அணியை அல்லது நாட்டை எப்படி குறை கூறி தாக்க முடியும்?  இவரின் வெறி பாகிஸ்தான் அல்லது குற்றங்கள் மீதல்ல. ஆசியர்கள் மீது. 
முரளியின் விடயம், இந்திய வீரர்களைத் தூற்றுதல் இந்த விடயங்களால் எதை வெளிக் காட்டுகிறார்? விளையாட்டு உணர்வு மக்கிப் போய் கிடப்பது ஆசிய மண்ணில் அல்ல. 


Tuesday, October 5, 2010

எந்திரன் எப்படி இருக்கிறான்?

மற்றுமொரு நீண்ட உழைப்புக்குப் பின் ஷங்கரின் படைப்பு ஒன்று வெளிவந்து இருக்கிறது.
"ஷங்கரின் படைப்பு ", என்றவுடன் ரஜினி ரசிகர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம், அதற்கு காரணமும் சொல்கிறேன்.

ஷங்கர் ஒரு தனித்துவமான இயக்குனர் என்பதில் எனக்கு எந்த மாறுபட்ட கருதும் இல்லை. தமிழ் சினிமாவில் பல புதிய விடயங்களை புகுத்தியவர். ஆனால் அவர் பற்றிய விமர்சனங்கள் பல உண்டு.அவரது படங்களில்  முன்னைய படங்களின் சாயல் தெரியும். லாஜிக் மீறிய தன்மை, நடைமுறை யதார்த்தத்துக்கு ஒத்து வராத நியாயங்கள்.... இப்படி எல்லாம். எந்திரன் இதில்  சில தன்மைகளைக் கொண்டிருக்கிறான். ஆனால் விஷயம் என்னவென்றால் திரைப் படத்தின் பலமே அதுதான்.

ஒரு தரமான அதியுயர் தொழில்நுட்பப் படைப்பைப் பார்த்த அனுபவம் கிடைக்கிறது. ஹாலிவுட் படமல்ல. ஏனெனில் நம்மவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்.

 ஷங்கரின் கனவுப் படம். கொஞ்சமும் அலுக்க வைக்காத திரைக்கதை ஓட்டம். வேகமான தடங்கல் இல்லாத entertainer . இடத் தெரிவுகள் பற்றி சொல்லத் தேவையே இல்லை. சலித்து எடுத்திருக்கிறார். ஆனால் எல்லாவற்றையும் விழுங்கித் தின்றிருக்கிறது, கிராபிக்ஸ். செயற்கை என்று சொல்லவே முடியல. அதில் கூடுதல் கவனம், ரிஸ்க் எடுத்திருக்கிறார். ஏனென்றால் சில அருமையான விஷயங்கள் இதற்கு முன் கார்டூன் ஆன சந்தர்பங்கள் இருக்கின்றன.

பின்னணி இசை தனியாகத் தெரியவில்லை. கதையோடு ஒட்டி விட்டது. ஆஸ்கார் நாயகர் புகுந்து விளையாடிவிட்டார். கிலிமாஞ்சாரோ அரங்கை விட்டு வந்த பின்பும் காதிலேயே ஒட்டிக் கொண்டு விட்டாள்.

சண்டைக் காட்சிகள் இது வரை பார்க்கவே இல்லை. தமிழ் பட சண்டையா அது? Robot எப்படி மிரள வைக்கிறான்? + என்னவென்றால் வன்முறை வெறித் தனமாக ஒரு இடத்திலும் காணக் கிடைக்கவில்லை. மாறாக ஒரு வேகமான கால்பந்து ஆட்ட பார்த்த மாதிரி இருக்கிறது. கடைசி இருபது நிமிடங்கள் இருக்கையில் கட்டிப் போடுவது சண்டைக் காட்சிதான்.

திரைப் படத்தில் இன்னும் பலரின் உழைப்பு சுட்டிக்காட்டப் படாவிட்டாலும் , எல்லோருக்கும் ஒரு அருமையான படத்தைத் தந்ததற்கு நன்றிகள்.

படத்தில் ரஜினி, ஐஸ்வர்யா, ரோபோ ஆகிய மூவரும்தான் highlights . திரைக் கதையில் அது தேவையும் கூட. வில்லன் கொஞ்சம் மிரட்டி இருக்கிறார், கத்தாமல் அந்த mind game வில்லத் தனத்துக்கு ஒரு...... ஆனால் ரோபோ வில்லத் தனத்துக்கு முன்னாள் எல்லாம்.... "மே..மே..மே." ரசிகர்களை இப்படி மிரட்ட ரஜினிக்கு முடியுமா?
"இது எப்டி இருக்கு?"

ஐஸ்வர்யாவின்  வயது கொஞ்சம் இடிக்கிறது. ஆனால் உலக அழகிதான் என்பதை எந்த கொம்பனாலும் மறுக்க முடியவில்லை. மறுபுறத்தில் ஒரு இளைஞனோடு அல்லவா நடிக்கிறார்? ரோபோவுக்கு அல்ல... ரஜினிக்கு வயதே இல்லை.

கடைசியாக, "ஷங்கரின் படைப்பு " என்பதற்கு காரணம் சொல்கிறேன். சூப்பர் ஸ்டார் என்பதைத் தாண்டி ஷங்கரின் கனவே வாழ்ந்து கொடுத்திருக்கிறார். கலாபவன் மணியிடம் தப்பி ஓடுகிற காட்சியில் ..... இமேஜ் பார்த்தால் இப்படி நடிக்க முடியுமா? அதனால்தான்  சூப்பர் ஸ்டார் .
தன்னை அடுத்த ராஜாவாக பீற்றிக் கொள்ளும் தளபதிகளுக்கு ஏன் இது புரியவே இல்லை?

குறை என எனக்குத் தெரிவது இரட்டை அர்த்த வசனங்கள்தான். அது தமிழ் சினிமாவின் சாபக்கேடா எனத் தெரியவில்லை!
என்னைப் பொறுத்த வரை இலங்கையில் நீண்ட வரிசையில் இப்படி நின்று, பெரும் கூட்டத்துடன் படம் பார்த்து நெடுநாளாகிறது. மறக்காமல் ஒரு முறையாவது பார்த்து விடுங்கள்.

Friday, October 1, 2010

ஒரு யுகப்புரட்சியாளன், சே குவேரா

கம்பீரமான இந்த முகத்தை நீங்கள் பலமுறை கடந்திருக்கக் கூடும். இளைஞர்களின் மேற்சட்டை முதுகுகளில் அவர்களை அறியாமலே ஒரு மாவீரனை தாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கலாம். கம்பீரமான இந்த முகத்துக்கு சொந்தக்காரன், சே குவேரா. 


சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா .(Ernesto Guevara de la Serna)
ஆர்ஜெண்டினாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி. ஒரு போராளி. 


சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.


வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.


, மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.


1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெருநாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. 


பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார்.


சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம்  கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 இல் நாட்டை விட்டு வெளியேறினார். 


பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில்ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். விசாரணைகள் இன்றியே கொல்லப் பட்டார்.இறக்கும் போதும் கண்களை மூடவில்லை அம்மாவீரன். தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார். 


அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. 


(ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார். தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று !!!! மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்)


கட்சி பதவிகளுக்காக நாளொரு கொள்கை மற்றும் இன்றைய தலைவர்களுக்கு முன்னாள் சே ஒரு அமானுஷ்ய மனிதன். கொள்கையோடு கடைசி நிமிடம் வரை போராடித் தீர்த்த வீரர்களை உலகம் அரிதாகவே காண்கிறது.அவர்களின் உயிர் தற்காலிகமாக சரிந்தாலும் , நாளை வரலாறு அவர்களை அனைத்துக் கொள்ளும். 



Tuesday, September 21, 2010

ஒபாமாவும் ஒரு மசூதியும்

வெள்ளை மாளிகைக்குள் ஒரு புயல் வீசி இருக்கிறது. ஒபாமா சாவகாசமாக சொன்ன சின்ன விஷயம் சர்ச்சையைத் தோற்றுவித்துவிட்டது. செப்டம்பர் பதினொன்று தாக்குதலை யாரும் மறந்து விட முடியாது. இன்று பலி வாங்கப் படும் பல உயிர்களுக்கு அது முதல் விதை.  


அந்த இரட்டைக் கோபுர வளாகத்தில் ஒரு மசூதி கட்ட ஏற்பாடுகள் நடக்கின்றன. அதுதான் சர்ச்சை. ஆனால் ஒரு புறம் மன்னிப்பு என்ற மனித உணர்வை ஊட்டும் அற்புதமான தருணமாக இதைக் கருதலாம். ஆனால் மன்னிக்க நாம் யார்? யார்தான் தவறு செய்யவில்லை? தவிர பயங்கரவாதிகளின் தவறுக்கு உண்மையான முஸ்லிம்களை எப்படி புண்படுத்த முடியும்?  


ஆனால் நடப்பதென்னவோ அதுதான். யாரும் மன்னிக்கவில்லை. 
ஒபாமா மசூதி கட்ட ஆதரவு தந்த ஒரே காரணத்தால் அவரின் ஆதரவு வீழ்ச்சி அடைந்து விட்டதாம். என்ன கொடுமைடா இது? 


வளர்ச்சி பெற்ற, கருத்து சுதந்திரம் பெற்ற அமெரிக்காவில் இந்த நிலையா? 
அதுவும் Mr. President இற்கு. 


தவிர என் தனிப்பட்ட openion! 
நம்ம ஊர் அரசியல்வாதி மாதிரி  சந்தர்ப்பத்துக்கு ஏற்றாப் போல் பேச அவருக்குத் தெரியாதா? உண்மையே பேசினாலும் ஆதாயம் இருந்தா தானே பேசுவாங்க? 
பாவம் பச்சை புள்ளதான் போங்க... 

Monday, September 6, 2010

நான் எப்போது உன் தோழன் ஆகிறேன் ?

நாங்கள் ஒன்பதாம் ஆண்டில் படித்த நேரம் என்று நினைக்கிறேன். எங்கள் பாடத் திட்டத்தில் குழுச்செயன்முறை எனத் தனியாக ஒரு பாடம் உண்டு. ஆரம்பத்திலே நாங்களாக எங்கள் மைதான பிரவேசத்துக்கு பயன் படுத்திய பாடம் அது. அனால் எங்கள் சந்தோஷத்துக்கு முடிவு கட்டுவது போல திடீரென ஒரு ஆசிரியர் நியமிக்கப் பட்டு எங்கள் கோபத்துக்கும் ஆளானார். 


ஒரு முறை குழுவாக செயல் படுவதன் மகத்துவத்தைப் பற்றி விளக்கிக் கொண்டு இருந்தார். 
" குழு முறையாக இயங்குவதனால் ஏற்படும் அனுகூலங்களை பிரயோக ரீதியில் நீங்கள் புரிந்து கொள்வதற்காகவே உங்களை குழுக்களாக ஒன்று சேர்த்திருக்கிறேன். "
"டீச்சர், ஒரு சந்தேகம்! ஒண்ணா சேரும்போது வேலைகள் லேசாகுனு சொல்லிட்டு, இப்ப ஒரே கிளாஸ் ஆறாப் பிரித்து விட்டிங்களே?" 
ஆசிரியை ஒரு கணம் திகைத்து விட்டாலும் பிறகு எங்களை கண்டித்து உட்கார விட்டார். 
சிறுபிள்ளைத்தனமாக பாடத்துக்கு முழுக்குப் போட நாங்கள் கேட்ட கேள்வி பற்றி இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.  உலகம் முழுவதுமாக பரவிக் கிடக்கும் பிரச்சனையே அதுதானே?

மனிதனை நல்வழிப் படுத்த வேண்டிய மத நம்பிக்கைகள் எதைச் செய்து கொண்டிருக்கின்றன? தொடர்பாடலுக்கும் உணர்வுக்கும் , கலைத்துவத்துக்கும் அடிப்படையான மொழியினால் நாம் அனுபவிக்கும் விளைவு என்ன? 
'முரண்பாடுகள்'. 
இவற்றின் விளைவில் முக்கியமான சாராம்சத்தைக் கேட்டால் இதைத் தவிர மிகப் பொருத்தமான விடயமொன்றை சுட்டிக் காட்ட முடியாது. கலாசாரப் பன்முகத்தன்மை குறித்து நாம் பெருமிதம் அடைய வேண்டுமென நான் சிறு வயது முதலே ஊக்குவிக்கப் பட்டுள்ளேன். அதை உணர்வு பூர்வமாக அனுபவித்தும் இருக்கிறேன். 

ஆனால் இந்த பன்முகத் தன்மை எப்போது முரண்பாடுகளுக்கு அடிக்கல் இடுகின்றது என்பதுதான் கட்டாயமாக ஆராயப் பட வேண்டும், சமூக ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும். 
இலங்கையில் மட்டுமே இன ரீதியான பிளவு எவ்வளவு வடுக்களை விட்டுச் சென்றிருக்கிறது என்பது உலகுக்கே வெளிச்சம்! இன்றளவும் ஒருவரை ஒருவர் கை காட்டியது தவிர வேறு எந்த முடிவுக்குமே செல்லாத பிரச்சனை அது. 

சில விஷயங்கள் எனக்கு இன்றளவும் புரியாதவை.
சிறு வயது முதலே இஸ்லாம், கிறிஸ்தவ சகோதரர்களுடன் பழகி இருக்கிறேன். அவர்களின் வழிபாட்டுத் தளங்களுக்கு சென்று மகிழ்ந்தும் இருக்கிறேன். ஆனால் வழிபாடுகள் திருமணச் சடங்குகள் என்பவற்றின் பொது அவர்கள் நம்மவர்கள் அல்லர் என்ற எண்ணக் கரு நிச்சயமாக என்னுள் திணிக்கப் பட்டுள்ளது. முக்கியமாக சக மதத்தவர்களின் வழிபாடு முறை, சடங்குகள், சமயப் பெரியார்கள் இவர்களை மிகக் கீழ்த் தரமாக சாடக் கூடிய கருத்துகள் மிகச் சாதாரணமாக உலவுவதை கேட்டிருக்கிறேன். அவர்களும் அவ்வாறே பேசுவதை அறிந்திருக்கிறேன். நாம் எப்போது சகோதரர்/ எப்போது எதிரிகள்? எங்கள் புரிந்துணர்வின் மேல் விஷம் தூவப் படுகிறதா? அல்லது கசப்புணர்வோடு சகித்துக் கொண்டு வாழ்கிறோமா?  

எங்கள் ஊரில் சிங்களவர்கள் (பௌத்தர்கள்) அதிகமான பகுதிகளில் சகஜமாக நடமாடி இருக்கிறோம். அவர்களோடு நட்பு பாராட்டி இருக்கிறோம். அவர்களின் வெசாக் அப்ப தானத்தில் உண்டிருக்கிறேன். அவர்கள் பெரும்பாலும் எம் ஆலயங்களில் வழிபடுகிறார்கள். திருவிழாக்களில் கலந்து கொள்கிறார்கள். எவ்வளவு கண்ணியமான மனிதர்கள்? ஆனால் அதே ஒரு சிலர் பிணக்குகளின் போது, இன அடையாளத்தைச் சொல்லி (தமிழன்) வசை பாடி உள்ளதையும் கண்டிருக்கிறேன்.   

முடியாத கேள்விகளாக என்னை வாட்டி எடுக்கும் கேள்விகள் இவை.
மதத் தலைவர்கள் எவ்வளவோ காரணம் கூறட்டும். ஆனால் மனிதத் தன்மையைப் போதிக்காத மார்க்கம் எமக்குத் தேவை இல்லை. மற்றவர்களை மட்டம் தட்டிதான் எம் பெருமை வெளிப் பட வேண்டுமா? 
ஓஷோ சொன்னது போல ( அவரின் கருது பற்றி மட்டுமே கூறுகிறேன். அவர் பற்றிய ஆராய்ச்சிகள் இப்போது வேண்டாம்.) மதங்கள் இப்போது மார்க்கங்களாக இல்லை. மாறாக அவை கட்சிகளாகி விட்டன. யார் கட்சியில் ஆள் அதிகமென பொடி போடும் குழுக்களாகி  விட்டன.     

சாதிய ஒடுக்குமுறைகள் குறைந்து விட்டதாக மார்தட்டினாலும் திருமணச் சடங்குகளில் தலை காட்டி விடுகின்றனவே? நிறவெறி அடங்கிப் போய் விட்டதாகப் பேசினாலும் கேலிப் பேச்சுக்கள் அடங்கி விட்டனவா என்ன? (தமிழ்ச் சினிமாவைப் பார்த்தாலே போதும் )
மொத்தத்தில் ஆழ்மனதில் குப்பைகளை இட்டுக் கொண்டு எமக்கு முகத் திரை போட்டுக் கொண்டுதான் நடமாடுகிறோம். 

இப்போதும் கேட்கத் தோன்றுகிறது,
நான் எப்போது உன் தோழன் ஆகிறேன் ?

Friday, September 3, 2010

என் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள்

ஹட்டன் நகரச் சந்தியின் இரைச்சல் என் காதுகளை வழமையாகக் கிழிதெறிந்து விடும். ஏனோ அன்று ஏதோ வெறுமை மட்டும்தான் மனதை நிறைத்து வைத்திருந்தது. என் இயந்திர வாழ்கையில் இது எனக்குப் புதியதாகத் தெரியாவிட்டாலும் அன்றைய தினம் என் தன்மானம் முழுவதையும் விழுங்கி விட்டது போன்ற எண்ணம் ஊற்றெடுத்து இருந்தது.  


கேடுகெட்ட சமூகத்தின் மேல்தான் ஆத்திரம் பொங்கி எழுந்தது. அது எல்லாவற்றையும் அடகுவைத்து முடிந்த பின்பு இறுதியாக அடகு வைப்பது மானத்தைதான். அவன் நேற்று வந்த நாய்! என்னைப் பற்றி என்ன தெரியும் அவனுக்கு? ஏதோ அவன் வேலைக் காரனிடம் கதைப்பது  போலதானே கதைக்கிறான்? ஒரு கடாதாசியை இன்றே எழுதி அந்த வே.. மகனின் முகத்தில் வீசி எறிய வேண்டும். என் பட்டதாரித் திமிருக்கு வேலையா கிடைக்காது? என் வயதுக்காவது மதிப்பு தெரியுமா அவனுக்கு?  


நான் அவனைவிட அதிகம் படித்திருக்கிறேன். அந்த எரிச்சல்தான் அவனுக்கு. என் திறமைக்கு விலை போகாத எனக்கு எவ்வளவு எரியும்? அவனைப் போல சிபாரிசுக்கு உயர்மட்டத்தில் ஒரு ஆளும், ஒண்டிக்கட்டை வாழ்க்கையும் எனக்கிருந்தால் அவன் என் செருப்பைதான் நக்க வேண்டும். "போக விருப்பம் இருந்தா முன்னால போ, இல்லாட்டி  இறங்கு" பஸ் கண்டக்டர் சிங்களத்தில் கத்தினான். ஆத்திரம் பொங்கி எழுந்தது. 'ச்சே.. ஒரு பைக் வாங்கி இருக்கணும். ' காசு குடுத்துத்தானே போறோம்?  


அழுக்கு ஆடையோடு ஒரு மனிதன் வந்து நின்றான். சில்லறை போடுவது என் கடமை போல... எதுவுமே பேசாமல் என் மார்புக்கு முன்னால் கையை நீட்டிக் கொண்டு நின்றான். "இல்ல" அவன் எதுவுமே பேசாமல் நகர்ந்தான். பின்வரிசையில் உட்கார்ந்திருந்த மாணவன் ஒருவன் 2 ருபாய் போட்டு விட்டு பெருமிதப் பட்டுக் கொண்டான். 'அப்பன் காசுதானே' . பிச்சைக்காரன் என்னை ஏளனமாய் பார்ப்பது போல இருந்தது. பீறிட்ட கோபத்தை அடக்கிக் கொண்டேன்.  சிறுவனை அறைய வேண்டும் போல இருந்தது.     


"Tea ?"

"வேணாம்!" எதுவுமே சொல்லாமல் போய்விட்டாள். 
'ச்சே.. இவளால் தான் எல்லாம். பொறுமையாக நல்ல வேலை ஒன்று தேடி இருக்கலாம். இவங்கப்பன் தானே அவசரப் பட்டான். எங்கயாவது தள்ளி விட்டால் போதும் என்று நினைத்திருப்பான். '
அந்தாளைச் சொல்லிக் குற்றம் இல்லை. இவள் இல்லாவிட்டால் வாழ்க்கையா போய்விடும்? அப்போது உயிரே அவள்தான் என்றல்லவா இருந்தது ? தன் சாதித் திமிரெல்லாம் விட்டுவிட்டு அந்த மனுஷன் தியாகம் செஞ்சது மாதிரிதானே பெருமை?    

நான் வேண்டாம். என் பிள்ளைகள் மட்டும் சொந்தம்! என்ன ஜென்மங்கள்? யார் மீது கோபம் என்றே தெரியாமல் தவித்தேன். 
நான் விட்டது சின்ன பிழைதான். கணக்கு சரிபார்க்கையில் ரெண்டு digit  மாறி விட்டது. அதை அழகாய் சொல்லி இருக்கலாம். திரும்ப ஒரு file save பண்ண எவ்வளவு நேரமாகி விடும்? 
அமில, புதிதாய் வந்த பொறுப்பதிகாரி. என்னை விட ஏழெட்டு வயது குறைய இருக்கும். ஒரு பிழை கண்டு விட்டு நாய் போலக் கத்தினான். 

"It's not even a hard work, Mr.Kugan. கம்ப்யூட்டர் முன்னாடிப் பாத்து type பண்ண graduate qualification தேவை இல்ல. எங்க வீடு tommy  செய்யும். " அவனுக்குத் தெரிந்த தமிழில் என்னெனவோ கத்தினான். பியுன்கூட 
 என்னை எகத்தாளமாகப் பார்த்தான். " கேம்ஸ் விளையாடவா வர்ரிங்க? "
' உன்னைப் போல ponography பாக்க வரல" என்று ஓங்கிக் கத்த வேண்டும் போல இருந்தது.  
"He is jealousy about you. You are smarter." மஞ்சுளா என்னைத் தேற்றினாளா, கிண்டல் செய்தாளா  தெரியாது. ஆனால் I was hurt. சக மனிதர்களை மதிக்கத் தெரியாத,  தகுதி அறிந்து பேசத் தெரியாத நபர்கள். 

பிரைவேட் கம்பனிகளில் வேலை செய்வது எதோ சுகவாசியாக இருப்பது போலதான் தெரியும். ஆனால் தான் தோன்றித்தனமாக ஏறிவரும் இலங்கையின் விலைவாசிக்கு முன்னால் எல்லாம் தூசுதான். செய்யும்  தொழிலின் கௌரவத்துக்கு போலி முகத்திரை போட வேண்டும். வீட்டில் உள்ளவர்களுக்கும் அழ வேண்டும். நடுத்தர வாழ்கையின் வானம் பார்த்த கனவுக்கு யார்தான் பலியாகவில்லை? கை ஏந்த முடியாது! ஆனால் rich ஆக சிரிக்க வேண்டும். பிள்ளைகளைப் பொறுத்தவரை , அவர்கள் வசதியான பிள்ளைகளாக காட்டிக் கொள்ளவாவது வேண்டும். 

கௌரவம்! அது ஒன்றுக்கு தானே இவ்வளவும்? அதை அடகு வைப்பதென்றால்?
'பேசாமல் அந்த tea garden இல் சேர்ந்து விடலாம்! 2000 குறைந்தாலும் ராகவன் எனக்குத் தெரிந்த மனிதர்தானே? மரியாதையான மனுஷன். ' மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டேன். 

மணி பத்தடித்தது. "ப்பா..." 
"என்னடா கண்ணா?" 
"காசு கொஞ்சம் வேணும்பா..' மனதுக்குள் எதோ சிரித்தது. 
"எதுக்குமா?" மழலைப் பேச்சு ஏதோ செய்தது. 
" நம்மட மொண்டிசொரில.. " , "ம்ம்" ... 
" கண்டி போறமே..." , "எதுக்குமா?"
  "பார்க் போறோம்.. தலதா போறோம்.. அப்புறம் ..." குட்டி விரல்களை எண்ணிக் கொண்டான். " magic ஷோ.. ஹையா.. " கைகளை ஆனந்தமாய்த் தட்டிக் கொண்டான். 

எவ்வளவு என்று கேட்கத் தோன்றவில்லை. இந்த இங்க்லீஷ் pre -school  பற்றி எனக்குத் தெரியும். சிரித்த முகத்துடன் அன்பாய்க் கறந்து விடுவார்கள். ஆனால் எங்களுக்கு நல்ல respect உண்டு. என் சம்பளத்தில் ஒரு கால் பங்கை நேர்ந்து விட்டுக் கொண்டேன். குட்டி அப்படியே நெஞ்சில் தூங்கிவிட்டான்.
அமிலவை நினைத்தால் முதுகில் ஏதோ ஊர்வது போல இருந்தது. 'வேலைனா அப்படிதான். ' 
இன்னொரு தடவை உங்களிடம் குறைப் பட்டுக் கொண்டால், என் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள் .

நன்றி! 

  

Thursday, September 2, 2010

ஹிட்லரின் ஒற்றை விதை...

சமீபத்தில் படித்து நான் மிகவும் வியந்த, ரசித்த புத்தகம், " மனிதனுக்குள் ஒரு மிருகம்". சந்தேகமே இல்லாமல் மதன் தனது முத்திரையினை பதித்து இருந்தார். மதனுடன் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு. அவர் எழுத்துகள் மூலமாக. அனைத்து  தரப்பினரையும் கட்டிப் போடக் கூடிய லாவகம் அவருக்கு உண்டு.  
எல்லா மனிதர்களுக்குள்ளும் மிருகம் உறங்கிக்கொண்டு இருப்பதை தெளிவாக நிறுவி இருக்கிறார். வாசித்த அனைவரையும் தம் ஆழ்மனதை ஒரு தடவை தடவிப் பார்க்க வைத்து விட்டார். 




வரலாற்றில் வர்ணிக்கப் படும் கொடுரர்களாக நாமும் மறைமுக முகத்திரையினை கொண்டிருப்பதை சுட்டிக் காட்டிவிட்டார்.
மீண்டொரு தடவை உங்களைச் சந்திக்கையில் இப்புத்தகம் தொடர்பான விடயங்களை மறக்காமல் பகிர்ந்து கொள்வேன். 


சரி விடயத்துக்கு வருகிறேன். சமகாலத்திலும் மனித உணர்வு சிதைக்கப் பட்டு, மிருகத் தனம் வெளிப்படையாக உலவுவதைக் காணவும், அவற்றுக்கு காரணமாகவும் நாம் இருப்பதை அறிந்தோ அறியாமலோ இருந்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் மனிதநேயம் பற்றி பேசுவதும் நாங்கள்தான். 
அன்றாட பத்திரிகைச் செய்திகள் கூட இதை காட்டிக் கொடுக்கின்றன. வாரப் பத்திரிகை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். முழுப் பக்கம் ஒன்று ஹிட்லருக்காக ஒதுக்கப் பட்டிருந்தது. சர்வாதிகாரி ஹிட்லரின் விறைப் பையில் ஒரு விதை மட்டும் இருந்ததாம். ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து இருக்கிறார்களாம். சாதாரண செய்திதான். ஆனால் அதன் பின்னணி என்ன? கொடூர ஹிட்லரை பரிகாசப் படுத்துவதுதான் நோக்கம். ஹிட்லரின் குற்றங்கள் ஜீரணிக்கவே முடியாதவை. யாராலும் நியாயப் படுத்தவே முடியாதவை. ஆனால் இவ்வளவு ஆண்டுகள் முடிந்த பின்பும் , இறந்த ஒருவனை பழிவாங்கத் துடிக்கும் வன்மத்தை என்னவென்பது? 


இது புதிய விடயம் அல்ல. ஹிட்லர் நரமாமிசம் உண்பவர், இறந்த உடல்களுடன் உறவு கொள்பவர் என்றெல்லாம் ஏராளமான கதைகள் உண்டு. என்னெனவோ சொல்லி எம் வன்மத்தைத் தீர்த்துக் கொள்கிறோம். ஆனால் ஏறத்தாழ எம் மிருகம் வெளிவருவதைத் தானே அது காட்டுகிறது?
மறப்பதை விடுத்து நாம் புழுங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். மதன் சொல்வது போலவே "வன்முறையாளனுக்கும் எமக்கும் ஓர் அங்குல இடைவெளிதான். 


தோல்வி அடைந்த ஹிட்லர் இறந்த பிறகும் தூற்றப் படுவது இருக்கட்டும். 2 அணுகுண்டுகளால் ஜப்பானியர்களை அழித்த அமெரிக்கா, விஎட்நாமியர்களை அழவைத்தவர்கள், விஷவாயுக் கசிவுக்குக் காரணமானவர்கள், இன்றும் முஸ்லிம்களைக் கொள்பவர்கள், இப்படி அடுக்கிக் கொண்டே போகக் கூடிய குற்றங்களை செய்தவர்கள் இந்தளவு வெறுக்கப் படுவதில்லையே? கீழ்த்தரமாக விமர்சிக்கப் படுவதில்லையே?


இன்னொரு சம்பவம்! தமிழ் என இணையத்தில் தேடும்போது விடுதலைப் புலிகள் பாலியல் குற்றவாளிகள் என ஒரு செய்தி. இடி அமீன் மனைவி இறந்த பின்பும் கொடூரமாக உடலை சிதைத்த கட்சிதான் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு சக மனிதனை கொன்ற பின்பும் அவனைக் சித்ரவதை செயத் துடிக்கிறோம். யாரும் தவறானவர்களாக இருக்கட்டுமே! ஆனால் ஒரு தனிமனிதனின் தன்மானத்தை எவ்வளவு சுரண்டுவது? 


மறுபுறம் சிங்களவர்களை, சிங்களக் காடையர்கள் என அடையாளப் படுத்தும் தமிழ்நாட்டு  மக்களும் உண்டு. அவர்கள் அனைவரும் தமிழர்களுக்கு எதிரானவர்களா? அப்படியெனில் அவர்கள் எம் அனைவரையும் (தமிழர்களை) எதிரிகளாக அடையாளப் படுத்தினால் என்ன தவறு? இரு மொழி என பேசி நின்ற இடதுசாரித் தலைவர்கள் அவர்களயும் உண்டு. சம உரிமை , மனிதம் இதெல்லாம் தாண்டி நாம் விலகிப் போவதாக தென்படுகிறது. 

மனிதன் எவ்வளவு தூரம் வன்மம் படைத்வனாகிப் போகிறான் என்பதற்கு நான் கண்ட இரு சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டேன். தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுக. வலையில் என் கருத்துகளைச் சொல்ல உங்கள் மேலான கருத்துகளை மறக்காமல் விட்டுச் செல்லுங்கள்.
நன்றி..