Tuesday, November 26, 2013

இலங்கையில் திசை திரும்பும் இனவாதம்

இலங்கையின் யுத்தம் முடிவுற்ற பின்னர் வசந்தம் வீசும், பொன்மழை பெய்யும் என்றெல்லாம் பேசிய காலம் ஒருவாறு முடிவுக்கு வந்து விட்டது. அதுதான் தமிழர்கள் தோற்று விட்டார்களே ! இனி எதற்கு அவர்களுக்கு தீர்வு? என்ற பேச்சு வலுப் பெறத் துவங்கி உள்ளது.

உணர்வு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் காயமடைந்துள்ள தமிழர்கள், மௌனிக்கப் பட்டுள்ள நிலையில்; பேரினவாதிகளின் கழுகுக் கண் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்களை நோக்கித் திரும்பியுள்ளது .

கடந்த இரண்டு வருடங்களாகவே திட்டமிடப் பட்டு முஸ்லிம்கள் மீது திருப்பி விடப் பட்டுள்ள இனவாதம் பேரினவாதிகளின் வாக்குப் பெட்டிகளை நிறைக்கும் திட்டமாகத் தான் தோன்றுகிறது. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப் பட்ட நிலையில் இனவாத அரசியல் பேசியவர்களுக்கு கொஞ்சம் வேலை இல்லாமல்தான் போய் விட்டது.

இந்த நிலையில் பேரினவாதிகள் கையில் எடுத்துக் கொண்டுள்ள அடுத்த ஆயுதம், முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்ச்சி.

முஸ்லிம்கள் தங்களுடைய கலாச்சாரத்தை அழிக்க முயல்வதாக, சனத்தொகையை அதிகரிப்பதாக, அடிப்படைவாதிகள் என, மதமாற்றம் செய்வதாக என இவர்கள் கூறும் காரணங்கள் பல.

இந்தப் பிரச்சனையின் அண்மைய கூறுகளை கவனிப்போம். முதன் முதலாக இவர்களின் கையில் அகப் பட்டது, ஹலால்.
நாட்டின் சிறுபான்மையினருக்காக சிங்களவர்களும் ஹலால் உணவையே உண்ண வேண்டும் என முஸ்லிம்கள் கட்டாயப் படுத்துவதாக பிரசாரம் செய்யப் பட்டது. உண்மையில் அவரவர் விருப்பத்துக்கு விரும்பிய உணவுகளை கொள்வனவு செய்யவும் விரும்பிய இடங்களில் உணவைக் கொள்வனவு செய்யவும் யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் இனவாதம் கண்ணை கட்டிப் போடுகிறது.

இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெளிப்பட்ட பின்னர் ஹலால் முறை ஒழிக்கப் பட்டது. பல நிறுவங்கள் தங்கள் ஹலால் சான்றிதல்களை  பெற்றன. ( வியாபார நோக்கம் கருதி)
ஆனால் இனவாதிகளின் ஆசை முடிந்தபாடில்லை. முஸ்லிம்களின் வர்த்தகப் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்ற பிரச்சாரம் இன்றளவும் தாராளமாக நடக்கிறது.

அடுத்த கட்ட நடவடிக்கையாக முஸ்லிம் பள்ளி வாசல்களை ' புனிதப் பிரதேசங்களில் இருந்து அகற்றும் நடவடிக்கை முடுக்கி விடப் பட்டது. ஆனால் அரசில் தொங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் அமைச்சர்களோ மதில் மேல் பூனையாக மௌனம் காத்தனர்.
ஆனால் ரமழான் பெருநாள் அன்று கொழும்பில் நடந்த அசம்பாவிதம் முழு நாட்டையும் உலுக்கி விட்டது.

இவை போதாதென்று முஸ்லிம்களின் அபாயா எங்கள் அடுத்த இலக்கு என்று சவால் விடுக்கப் பட்டுள்ளது.

இதன் விளைவுகளை கவனிப்போம்.
சற்று அணைந்து போயிருந்த இனவாத நெருப்புக்கு தீனி போடுவதாக இச்சம்பவங்கள் மாறும்.

யுத்தம் முடிவடைந்த நிலையில் முஸ்லிம்களும் பட்டாசு வெடித்து அதனைக் கொண்டாடினர். அதன் எதிர் விளைவுகளை பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதில் சிக்குண்ட பல்லாயிரக் கணக்கான அப்பாவிகள் மனம் அதனால் பாதிக்கப் படக் கூடும் என்ற விடயம்  மனதுக்கு தோன்றாமல் போயிருக்கலாம். அதற்கு அவர்களின் கசப்பான / நியாயமான அனுபவங்களும் ஒரு காரணமே.

இந்நிலையில் முஸ்லிம்களின் கலாசாரத்துக்கு எதிராக இனவாதிகளால் அவிழ்த்து விடப் பட்டுள்ள வன்முறைக்கு தமிழர்கள் மெளனமாக துணை போவதையும் வங்குரோத்து மனப் பாங்கே வெளிக் காட்டும்.

சிறுபான்மை இனத்தவர்கள் பிரிந்து நிற்கும் வரை இனவாதிகளுக்கு கொண்டாட்டம்தான் என்பதை நாம் உணராத வரை சந்தோஷமாக அதனை அனுபவிக்கப் போகின்றவர்கள் சிறுபான்மை அரசியல்வாதிகள் மட்டும் தான். ( இந்த பிரிவில் ,அடிப்படைவாதம் பேசும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழ் இனவாத அரசியல்வாதிகளும் )

( முழுதாக எழுத நினைத்த பழைய பதிவு. ஆனால் சந்தர்ப்பத்துக்கு பொருத்தமாக அமைந்ததால் பதிவிட்டேன். குறைவுக்கு பொருத்தருள்க...)