Sunday, October 14, 2012

தமிழில் " ஒன்பது " என்ற சொல்லின் விதிவிலக்கு



தமிழின் குறியீடுகள் பற்றி ஒரு சிறிய அறிமுகத்தை மட்டும் பார்த்தோம் . இப்போது ஒரு சிறு தகவலை மட்டும் விட்டுச் செல்கிறேன் .

தமிழில் இலக்கங்களுக்கான பெயர்கள் தனித்துவமானவை.
பாருங்கள்:
ஒன்று - ஒரு
இரண்டு - இரு
மூன்று - மு
நான்கு - நா ....

இவ்வாறு தொடரும் பெயர்களுக்கு தனித்துவமான ஒழுங்கும் அடிச் சொற்களும் உள்ளன. ஆனால் இந்த வரிசையில் சற்று வேறு பட்டு நிற்பது ஒன்பது மட்டும்தான். எப்படி?

' பது ' என்பது பத்தின் பெருக்கத்தை குறிக்கும் விகுதி. உதாரணமாக
இரு- பது = இரண்டு * பத்து
இவ்வாறே முப்பது , நாற்பது எல்லாமே...

எனவே ஒன்பது என்பது ஏதாவது ஒரு எண்ணின் 10 பெருக்கமாக அல்லவா இருக்க வேண்டும்?

இது தற்செயலாக இருப்பினும் தொடரும் இலக்கங்களை பாருங்கள் .
தொண்ணூறு 90,
தொள்ளாயிரம் 900

என் இந்த மாற்றம் அல்லது  முரண்பாடு ?
ஆய்வாளர்கள் அதற்கு இப்படி விடை தருகிறார்கள்.
ஏழு, எட்டு என்ற வரிசையில் 9 ஐக் குறித்த உண்மையான பெயர்

" தொன் " என்பதாம். ( சிலர் தொள் என்று கூறுகிறார்கள். )
இதன்படி 90= தொன்பது , 900 தொண்ணூறு, 9000 தொள்ளாயிரம் என வழங்கியதாம் .

காலப் போக்கில் எதோ ஒரு காரணத்தால் இது மருவி இன்றைய பெயர்கள் வந்து விட்டனவாம். என்ன ஏற்றுக் கொள்ளும் படியாக இருக்கிறதா?

எது எப்படியோ உங்கள் குழந்தைகள் இனி இந்த கேள்வியை கேட்டால் இந்த விளக்கத்தை சொல்லுங்கள் . மேலும் தமிழில் இந்த தகவலும் எனக்குத் தெரியும் என மார் தட்டிக் கொள்ளலாம் அல்லவா? இந்த விஷயத்தை உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

Saturday, October 13, 2012

தமிழர் எண்முறை

தமிழில் எண்கள் பற்றிய அறிவு மிகத் தாராளமாக இருந்தது. இன்று உலகத்துக்கே வழங்கும் இந்து ( இந்திய) எண் முறையை வழங்கியவர்கள் நம் இந்தியர்கள்தான்.

மற்ற மொழிகளை விட சற்று மாறுபட்ட வளமான எண்  கணித முறைமை நம்மிடம் இருந்தது. மற்ற இந்திய மொழிகளினின்றும் சற்று வேறுபட்ட முறை.
இன்று நாம் பாவிக்கும் எண்மானம் 10 ஐ அடியாகக் கொண்ட நடைமுறைமை. நம்முடைய தமிழர் முறைமையும் அவ்வாறானதே. ( சீனர் 6 ஐ அடியாகக் கொண்ட எண்முறை பயன்படுத்தினர்)

123456789101001000
பார்த்தீர்களா ? நாம் எவ்வளவு வளமான முறையை கொண்டிருக்கிறோம்? இங்கும் சிறப்பாக 10, 100,1000 என்பவற்றை  குறிக்க நாம் சிறப்பு குறியீடுகளை  கொண்டுள்ளோம். மற்ற எந்த இந்திய மொழிகளிலும் இது இல்லை.

தமிழுக்கு இருந்த குறை தமிழில் சுழியம் (0) இருக்கவில்லை என்பதுதான். ஆனால் அதற்க்கு குறியீடு இருந்ததாக சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் .
ஆனால் 1825 இல் கணித தீபிகை என்ற நூல் மூலம் தமிழுக்கு 0 அறிமுகப் படுத்தப பட்டது.

வெறும் எழுத்துகள் மட்டுமல்ல .  எண்முறை சார்ந்த  நடைமுறைகளுக்கும் நம்மிடம் இருந்தன,
daymonthyeardebitcreditas aboverupeenumeral

ஆங்கிலத்தில் சுருக்கக் குறியீடுகள் போலவே இவையும் பயன் படுத்தப் பட்டன . நாம் at என்பதை @ என குறிப்போம் அல்லவா? அதற்கு சற்றும் குறையாத குறியீடுகள் தாம் இவை..துரதிருஷ்டவசமாக இவற்றை நாம் பயன்படுத்தத் தவறிவிட்டோம்.

பாருங்கள் ரூபாய்க்கு இந்தியாவில் குறியீடு அறிமுகப் படுத்த முன்னமே நாம் குறியீட்டைப் பயன் படுத்த தொடங்கி விட்டோம். ஆனால் தமிழர் ஒருவர் அமைத்த அந்த வடிவம் ஹிந்தி எழுது போல தமிழ் சாடை கொஞ்சமும் இல்லாது போனமை மிக்க வருத்தம்தான். ( அது ஹிந்தி போல இருந்தமையால்தான் இந்தியாவில் தெரிந்தெடுக்கப் பட்டது என்பது உண்மைதான். )


Rank1/41/23/41/51/81/101/161/201/401/80
Characterகால்அரைமுக்கால்நாலுமாஅரைக்கால்இருமாமாகாணி, வீசம்ஒருமாஅரைமாகாணி


முழு ,எண்கள் பற்றிய அறிவு மட்டுமல்லாது பின்ன எங்களுக்கும் நம்மிடம் பெயரீடு இருந்துள்ளது. தமழர்களின் எண் அளவை முறை என்று தனியாக நாம் கற்க வேண்டிய அம்சங்களும் உள்ளன.

தமிழ் எண்களை பயன்படுத்துமாறு நான் இங்கு கேட்க காரணமும் உள்ளது. பொது  வழக்கில் நம்முடைய முறையை பயன்படுத்துவது சாத்தியப் படாது. ஆனால் தமிழ் பற்றிய தமிழர் ஆக்கங்களில் இதனை பயன்படுத்துவோமானால் நமது தமிழ் ஆர்வம் பெருகும் . இன்று தமிழ் படிக்கும் பலருக்கு இந்த குறியீடு முறைமை தெரியாது. நாமே அதனை தெரிந்து கொள்ளாவிட்டால் யார் தெரிந்து கொள்வது?

ஒரு மொழியில் அளவை முறை காணப் பட்டது, எண் முறை தனித்துவமானது என்று இருப்பது அம்மொழியின் வழமையை ஆய்வாளர்களுக்கு புலப் படுத்தும். எனவே பயன்படுத்தாவிடினும் நமது முன்னோரின் சில விழுமியங்களை அறிந்தாவது வைத்திருப்போம்...


நன்றி விக்கி

Update:

பதிவின் நீளம் கருதி சுருக்கமாக சொல்லி விட்டேன். இதோ தனித்தனியாக கூறுகிறேன். 

இது உங்களுக்கு பரிச்சயமான பிள்ளையார் சுழி. இந்தக் குறியீடு நாளைக் குறிக்க பயன்பட்டது. 

௳ 

மாதம் -   

வருடம் - 

பணம் - 

ரூபாய் - 

மேற்கூறியவாறு - 

இலக்கம் - 

இவ்வாறு நிறைய குறியீடுகள் பயன்பட்டுள்ளன. அனைத்தும் தமிழ் மொழியின் எழுத்துகளை அடிப்படையாக கொண்டு கட்டி எழுப்பப் பட்டுள்ளன . எங்கும் கடன் வாங்கப் படவில்லை. 

உதாரணமாக NO என்பது ஆங்கிலத்தில் number என்பதை குறிக்கும். இது Numero  என்ற சொல்லில் இருந்தது வந்தது .இது ஆங்கிலமே அல்ல . மாறாக நம் அணைத்து குறியீடுகளும் நமக்கே உரிய சொற்கள் இதனை தொடர்ந்து பயன் படுத்தி இருந்தால் சுருக்கத்துக்கு   மிக உபயோகமாக இருந்திருக்கும் . மேலும் பலவற்றை நாமே உருவாக்கி இருக்கலாம் ... மாறாக நாம் இன்று பிற மொழிகளில் கடன் வாங்க வேண்டியிருக்காது. 
 ...

Update 2


நண்பர் கலாகுமரன் அளித்த முகப் புத்தக படத்தை பாருங்கள் ... தமிழரின் பெருமையையும் உணருங்கள்... 

நன்றி... 

http://www.facebook.com/photo.php?fbid=478097962224610&set=a.433127040055036.101038.433124750055265&type=1&theater


Tuesday, October 9, 2012

" குட்டி " என்று ஒரு அருமையான திரைக்காவியம்

" குட்டி " திரைப்படம் ஒரு கண்ணோட்டம்

தமிழ் சினிமாக்கள் பலவிதம்,.. ஒரு சில திரைப்படங்கள் வந்து ஒரு சிலநாளில் காணாமல் போய்  விடுகின்றன. சில மனதில்  பதிந்து அழியாத இடம் பிடிக்கின்றன .அப்படி  மனதில் நீங்காத இடம் பிடித்த திரைப்படம் குட்டி.



ஐயோ ....
சத்தியமாக இந்த குட்டி அல்ல....
////////



இந்தக் குட்டி...

தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு போக்கு காணப் படும். ஒரு வெற்றிப் படம் வந்து விட்டால் அதே சாயலில் தொடர்ச்சியாக பல திரைப்படங்கள் குவியும். ஹாலிவூட் திரைப்படங்களுக்கும் நமக்கும் இது தான் பாரிய இடைவெளி. அங்கும் குப்பைத் திரைப்படங்கள் எக்கச்சக்கமாக உண்டு. ஆனால் நான் சொல்ல வந்தது அதை அல்ல...'

அங்கு திரைப்படங்களில் variety நிறையவே உண்டு. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள், முழு வணிக ரீதியிலான படங்கள், சண்டைப்படங்கள், சூப்பர் ஹீரோ கதைகள் என்று விதவிதமாக வரும், பார்க்கும் ரசிகனின் ரசனையை பன் முனைகளை உடையதாக மாற்றும். ஆனால் துரதிருஷ்டவசமாக நமது படங்களில் இந்த ஹீரோ இதான் பண்ணப் போறார்னு முடிவெடுத்து விட்டே போகின்ற நிலைமை.

( இப்போது நிறைய விதிவிலக்கான திரைப்படங்கள் வருகின்றன... அதனை நிச்சயமாக வரவேற்போம்)

*******

ம்ம்.. இப்போ நம்ம விஷயத்துக்கு வருவோம். சினிமா என்பது ஒரு பிரமிப்பு இலக்கியம்... அந்தக் கலை நம்மை 2 மணிநேரம் மெய்மறக்க வைத்து கதையோடு  ஒன்ற வைத்து விட்டால் அந்தக் கலை வென்று விட்டது என்றுதான் அர்த்தம்... எனவே நல்ல படம், குப்பைப் படம் என்பது அவரவர் மனப்பாங்கைப் பொறுத்தது. எனவே அந்த முடிவுகள் உங்கள் கையிலேயே விட்டு விடுகிறேன்.

2001 இல் வெளிவந்து என் மனதில் அழுத்தமாக பதிந்த குட்டி திரைப்படத்தைப் பற்றிதான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

*******

தமிழ் சினிமாவில் நான் பெரும் வருத்ததோடு பார்க்கும் ஒரு விடயம் சமகால பிரச்சனைகளை மையப் படுத்திய திரைப்படங்கள் மிகக் குறைவு.  வன்முறை,காதல், இளைஞர் பற்றிய திரைப் படங்களோடு ஒப்பிடுகையில் சமூக பிரச்சனைகள் பற்றிய திரைப்படங்கள் சார்பளவில் மிகக் குறைவு. அதிலும் கூட காதல், வன்முறைகள் மிகைப் படுத்தியே காட்டப் படுகின்றன.

( அல்லது கதாநாயகர்கள் ஆயுதங்களை தூக்கிக் கொண்டு உலகை மாற்றப் புறப்பட்டு விடுகிறார்கள். இதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும் ,ரசிகர்களுக்கும் தெரியும். அதைப் பற்றி  இங்கு பேசினால் ரசிக உள்ளங்கள் கொதிப்படைந்து பதிவின் நோக்கமே  மாறிவிடும். ஆகவே அது நமக்கு வேண்டாம்.)

திரைக்கதை 

கிராமத்தில் சுதந்திரமாக திரியும் குட்டிப் பட்டாம்பூச்சி அவள் ... உழைப்பாளிகளை பீடித்த வறுமை மட்டுமே அவளை தத்தெடுக்கிறது .
வெறுமையாகிக் கிடக்கும் பணத்தை ஈடு செய்ய மனம் நிறைய அவள் மீது அன்பைப் பொழியும் தந்தை.  தன அன்பு முழுவதையும் குட்டி மீது கொட்டும் தந்தை. அவளது உலகை சிரியதாக்குகிறான் ... சொர்க்கமாக்குகிறான்.







வறுமை அவள் கண்களுக்கு தெரிவதே இல்லை. அவள் வாழ்க்கையில் அவளின் பிஞ்சு ஆசைகள் கனவாகவே இருப்பதை அவள் உணருவதும் இல்லை. கிராமத்து சூழல், இயற்கையோடு அவள் ஒன்றி விடுகிறாள். மொத்தத்தில் அவளுக்கு எந்தக் குறையுமே இல்லை. அந்த நாள் வரை...

இடியென வந்து விழுகிறது தந்தையின் இழப்பு. அவளை சுமந்த அவனின் இழப்பு அவளது வாழ்வை திசை மாற்றுகிறது .

அவளின் குழந்தை உள்ளம், கிராமிய வாழ்க்கை , மகிழ்ச்சி அனைத்துமே அவளிடமிருந்து முற்றாக பறிக்கப் படுகின்றன. நகரத்தின் ஒரு பணக்கார வீட்டுக்கு வேலைக்கு அழைத்து வரப்படுகிறாள். அவள் இது வரை கேள்விப் படாத புதிய உலகத்தில் நுழைகிறாள் ...

நகரத்தின் வேகம், வளர்ச்சி, பிரமிப்பு அனைத்தும் அவளுக்கு புதியவை. வானுயர நிற்கும் கட்டிடங்களை அவள் அண்ணாந்து பார்க்கிறாள் ... அவள் இது வரையில் கனவிலும் கண்டிராத பொருட்களைப் பார்க்கும் பொது அவளுக்குள் இனம் புரியாத ஆச்சரியம் .

வேறு ஒரு குழந்தையாக இருந்தால்  இந்த புதிய சூழலை பெரும் ஏமாற்றத்தோடு  எதிர்கொண்டு இருப்பாள். ஆனால் அவள் காட்டுச் செடி . வலிகளை சுகமாக ஏற்கும் மனப் பக்குவம் அவளுக்கு உண்டு. ஏராளமான ஏழைகளைப் போலவே அந்த புதிய இடத்தில் அனுபவமாக ஏற்கும் பக்குவத்தை  ஏற்கிறாள்.






அந்த குடும்பம் பணத் தேடல்களுக்காக நேரத்தை அடகு வைத்து விட்ட ஒரு சராசரி நகர்ப்புறக் குடும்பம். வீடு வேலைகளை முடிப்பதட்கோ குழந்தைகளை கவனிக்கவோ நேரமில்லாத அக்மார்க் மேல்தட்டு வர்க்கம் . ஆனால் அந்தக் குடும்பம் குட்டியை தங்களின் ஒருத்தியாகவே ஏற்றுக் கொள்கின்றனர் .

புதிய ரோஜாவில் மலரை மட்டுமே பார்க்கிறாள் குட்டி. தன வயதுக்கு மீறிய பெண்மையை , முதிர்ச்சியை அவளாக ஏற்றுக் கொள்கிறாள். அதுவும் விரும்பி ஏற்றுக் கொள்கிறாள். இந்த குடும்பம்  என்ற உணர்வை அடைகிறாள் . புதிய உடைகள் , நல்ல உணவு என்ற புதிய அனுபவத்தில் பூரிப்பு கொள்கிறாள்.  நன்றாகவே போகிறது . அந்த குடும்பத்தின் வயதான் பாட்டி வந்து சேரும் வரை.





முதன் முதலாக தான் ஒரு அடிமை என்பதை குட்டி உணர்கிறாள் , பிஞ்சு உள்ளம் வாடும் வரை கொடுமைப் படுத்தப் படுகிறாள் .
பொறுத்துப் பார்க்கும் குட்டி எப்படியாவது தன தாயுடன் சேர்ந்து விடவேண்டும் என தன மேல் அன்பு காட்டும் கடைக்காரனிடம் கெஞ்சுகிறாள் . தன ஊர் பேர் கூட தெரியாத அவள் வழி தெரியும் வண்டியேற்றி மட்டும் விடுங்கள் என வேண்டுகிறாள் .

மறுநாள் அந்த கடைக்காரனை காணாமல் முன்கடை மனிதனிடம் உதவி கோருகிறாள். அவனும்  வண்டியில் ஏற்றி விடுகிறான்.
ஆனால்...????

விருதுகள் 

2002 ஆம் ஆண்டு கெய்ரோ சிறந்த சிறுவர் திரைப்படத்துக்கான விருதைப் பெற்றுக் கொண்டது.

இரண்டு தேசிய விருதுகள். 2002
சிறந்த குழந்தை நட்சத்திரம்   குட்டியாக நடித்த ஸ்வேதா.
சிறந்த இயக்குனர் சிறப்பு ஜூரி விருது ஜானகி விஸ்வநாதன் .

முக்கிய அம்சங்கள் 

கதையின் இசை இளையராஜா . படத்தில் அது எவ்விதமான தாக்கத்தை  இருக்கும் என சொல்லவே வேண்டாம்.

கதையில் எனக்கு மிகப் பிடித்த விஷயம் , கதை யதார்த்தத்தை விட்டு துளியும் அசையவில்லை . கதையின் போக்கிலும் சரி, முடிவிலும் சரி.

அன்றாடம் கதையில் வரும் அத்தனை  கதை மாந்தர்களையும் நாம் கடக்கிறோம் . எத்தனை சிறுவர் தொழிலாளிகள் ? அவர்கள் அவர்களின் வயதுக்கு மீறிய பொறுப்புகளால் திணிக்கப் படுகிறார்கள். ஏற்றுக் கொள்ளவும் செய்கிறார்கள். குட்டி கதாப் பாத்திரம் உருவாக்கப் பட்டது அன்று . நம் முன் நடமாடுவது வளரும் நாடுகளின் சாபக்கேடு.

அந்தப் பாட்டி கொடுமைக்காரியாக வில்லியாக தெரியலாம் . ஆனால் நமது எத்தனை வீடுகளில் அவ்வாறான பாத்திரங்களை சுமக்கிறோம்? வயது கூடிய மாமியார்கள் , பாட்டிகள் சர்வாதிகாரிகளாக உலவுவதை நாம் சற்று ஆராயப் போனால் ஒரு புத்தகமே போடலாம் , மனோ தத்துவம் பற்றி....

குழந்தை தொழிலாளிகள் என்ற எண்ணக்கருவே தப்பு .. அதில் நாம்  அவர்களை நன்றாகத் தானே பார்க்கிறோம்? கொடுமைப் படுத்தவில்லை என்ற பேச்சு பிழை .... சிறுவர் உழைப்பு சந்தேகமே இல்லாமல் ஒழிக்கப் பட வேண்டும் ,....

சமீபத்தில் அங்காடித்தெரு என்று ஒரு சமூகப் பிரச்சனை பற்றி பேசும் நல்ல சினிமா.. ஆனால் அதில் கூட வணிக ரீதியாக சில விஷயங்களை நுழைக்க வேண்டிய தேவை நமக்கு இருப்பது வேதனையான விஷயம்தான் .

குட்டி இப்படி எந்த வணிக அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை .
குறுகிய நேரப் படம். வெறும் 118 நிமிடங்கள்தான். ஆனால் நமது வழமையான 3 மணி நேர படங்கள் தராத மன நிறைவை முழுமையாக தருகிறது.

பங்களிப்பு

குட்டி வேடத்தில் ஸ்வேதா எனும் தேவதை . அசத்தி இருக்கிறாள் . மகளாக பாசம், கிராமத்துக் குழந்தையாக வெகுளித்தனம் , ஏழையாக ஒரு முதிர்ச்சி என முகபாவங்களில் அசத்தி விட்டாள் .

தந்தை வேடத்தில் நாசர் . குறைந்த நேரத்தில் மனதில் நிற்கிறார் . கடையில் பொறுப்பாளராக குணச்சித்திர வேடத்தில் விவேக்.  மனிதாபிமானம் மிக்க ஒரு சராசரி பாத்திரம் ... அது சமூக அவலங்களை ஏக்கத்தோடு பார்க்கும் . ஆனால் அதனால் எதையும் சாதிக்க முடியாது... மனதைத் தொட்டு சொல்லுங்கள் , அது நீங்கள்தானே? அல்லது நான்தானே?

அந்தக் குழந்தையின்  கஷ்டத்தை  சகிக்கவும் முடியாமல் , எதுவும் செயவும் முடியாமல் தடுமாறும் போது புதிய தளத்தில் விவேக்.  இரட்டை அர்த்த வார்த்தைகளோடு  வருபவரா இவர்?

 பாட்டியாக எம்.என்.ராஜம் . அப்பப்பா.... கதையோட்டத்தை தூக்கி நிறுத்துபவர் இவர்தான் . கதையில் மிகக்  குறைவான பாத்திரங்கள்தான். ஆனால் அவை போதும் இந்த நல்ல கதைக்கு. படம் முழுவதும் அவர் மீது  வெறுப்பு வருமளவு தன நடிப்பை அள்ளிக் கொட்டி உள்ளார் ராஜம்.

கதை எழுத்தாளர் சிவசங்கரி அவர்களுடையது. இவ்வாறான சமூக பிரச்சினையை ஆழமாகவும் அழுத்தமாகவும் தந்த அந்த படைப்பாளிக்கு நன்றிகள் .

ஜானகி விஸ்வநாதன் இந்த திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார். அருமையான ஒரு திரைகாவியத்தை தந்த அவருக்கு வாழ்த்துகள்.

********

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது இந்த திரைப்படம். பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த நான் அதே நினைவோடு மீண்டும் பார்க்காமல் விமர்சன செய்கிறேன். அது அந்த திரைகதையின் எவ்வளவு பெரிய வெற்றி?

வசூல் பற்றி தெரியவில்லை . தெரிந்தால் கோடிட்டுக் காட்டுங்கள் . ஆனால் இப்படி ஒரு நல்ல முயற்சியை அறிமுகப் படுத்தும் பொது அது தேவை இல்லை என நினைக்கிறேன்.

இந்த திரைப்படம் பார்க்கும் பொது எனக்கு 13 வயது இருக்கலாம் .
" ஏம்பா? குட்டியை இன்னொரு வீட்டுக்கு வேலைக்கு அனுபிட்டானா அந்த கடைக்காரன்?"

அதற்கு குட்டி எங்கு செல்கிறாள் என அப்பா சொன்ன போது மனதில் ஏற்பட்ட வலி .... அன்று  முழுதும் குட்டியை நினைத்து நான்  தூங்காததும் என் தலையணை நனைந்ததும் இன்னும் ஞாபகம் இருக்கிறது. இன்னொரு குழந்தைக்காக குழந்தையாக நான் முதல் தடவை அழுதது அன்றுதான் ....



நீங்கள் இந்த படத்தை தவற விட்டிருந்தால் மறக்காமல் ஒரு முறை பார்த்து விடுங்கள். 
********





பின்குறிப்பு:

உனக்கு தமிழ் படம்  பாக்க வராதோ ? இங்கிலீஷ் விமர்சனம்  எழுதுற அளவுக்கு அப்படக்கரோ நீ? அப்டின்னு ஒரு நண்பன் கேட்டதாலோ , அல்லது...

நீ ரெண்டு தரம் அதும் subtitle போட்டு இங்க்லீஷ் படம் பாத்துட்டு எதோ உலக சினிமாவை கரைச்சு குடிச்சவன் மாறி விமர்சனம் எழுதுறியா? அப்டின்னு இன்னொரு நண்பன் சிரிச்சதாலோ இந்த விமர்சனம் அவசர அவசரமாக எழுதப் பட்டது என்று நீங்கள்  நினைத்தால் அதற்கு  நிர்வாகம்  பொறுப்பல்ல,,,
ஹீ.. ஹீ....