Friday, August 31, 2012

மலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....

பதிவின் முன்னைய அத்தியாயங்களுக்கு இங்கு செல்க...
கடல் கடந்து வந்த கள்ளத்தோணிகள் 
சாதி அடிப்படையில் இழுத்து வரப்பட்ட தமிழர்கள்
மண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3

மிஞ்சி இருந்த தமிழர்கள் என நான் சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டது மிகைப் படுத்தப் பட்ட ஒன்று அல்ல.. 
மன்னாரில் இருந்து மாத்தளை நோக்கி சென்ற அவர்களுக்கு தகுந்த வசதிகள் எவையுமே அளிக்கப் படவில்லை. சுகாதார வசதிகளும், இயற்கைக் கடன்களை தகுந்த விதத்தில் பூர்த்தி செய்யும் வசதிகளும் அறவே இல்லை. இலங்கையின் வெப்ப வலயத்தின் எத்தனையோ தடைகளை அவர்களால் தாண்டி வந்திருக்க முடியும். ஆனால் ஒன்றை மட்டும் அவர்களால் தாண்டி வர முடியவில்லை. 
அது : மலேரியா... 

பிழைப்புக்காக வந்த மக்களை அந்த ஆட்கொல்லி நோய் ஆட்கொள்ளத் தொடங்கியது. அவர்கள் என்ன சொந்தமா அல்லது  பந்தமா, ஆங்கிலேயர்களுக்கு?  கூலிக்கு வந்தவர்கள்தானே? 
ஆரம்ப நிலையில் அழைத்து வரப் பட்ட தமிழர்களில் நாற்பது சதவீத மக்கள் மட்டுமே மாத்தளைக்கு முழுதாய் வந்து சேர்ந்ததாக புள்ளிவிபரம் சொல்கிறது. ஆட்கொல்லி நோய்க்கு விருந்தாக  மக்கள் மடிந்து விழுந்தனர்...  மீதம் இருந்தவர்கள் தங்களுடைய உறவுகளின் இழப்பை மனதுக்குள் தேக்கி விட்டு தோட்டங்களுக்கு புறப் படுகிறார்கள். 

மாத்தளை அவர்களின் தரிப்பிடம் மட்டும்தான். அவர்கள் மத்திய மலைநாட்டின் பகுதிகள் முழுவதற்கும் பிரித்து அனுப்பப் படுவார்கள். அங்கு அடர்ந்து கிடக்கும் காடுகளை அழித்து கோப்பி பயிரிட வேண்டும். அது ஒன்றும் அவ்வளவு சுலபமான வேலை கிடையாது. 
ஆங்கிலேயர்க்கு முன்பு இலங்கையை கைப்பற்றிய போர்த்துக்கேயர் , ஒல்லாந்தர் ( டச்சுக்காரர்) இருவருக்குமே மத்திய மலை நாட்டை  கைப்பற்ற முடியவில்லை. இலங்கையின் மன்னன் அப்போதெல்லாம் கண்டியில் ( மலைநாட்டின் தலைநகரம்) ஒளிந்து கொள்வான். அது சிங்களவர்க்கு பாதுகாப்பாக இருக்க மிகப் பெரிய அரண் இந்த மலைகள் மற்றும் காடுகள்தான். 

சிங்களவர்களுக்கு இடையில் உள்ள சாதி அமைப்பில் முக்கியமான பிரிவு இந்த உயர்நாட்டு ( கண்டி) சிங்களவர் , தாழ்நாட்டு சிங்களவர் என்பதுதான். கண்டி சிங்களவர்கள் தங்களை உயர் சாதியினரை பெருமையடிக்கக்  காரணம் தாங்கள் கடைசி வரை சுதந்திரமாக இருந்த வீரர்கள் என்பதுதான். 

ஆனால் அதற்க்கு முக்கியமாக காரணம் மலையகத்தில் காணப் பட்ட இந்த கடுமையான தடைகள். ( இறுதியாக இலங்கையை ஆண்ட மன்னன் கண்ணுசாமி என்ற தமிழன். அவனால்தான் நாங்கள் நாட்டை ஆங்கிலேயரிடம்  இழந்தோம் என இனவாதம் பேசுபவர்கள் இன்றும் உள்ளார்கள். " கண்டி ராச்சியத்தில் இறுதி மன்னன் மக்களிடயே செல்வாக்கு இழக்க முக்கிய காரணம் அவன் சிங்களவன் இல்லை என்பதுதான் " என வரலாறு பாடப் புத்தகங்களில் எவ்வித தயக்கமும் இல்லாமல் போதிக்கப் படுகிறது) 

இத்தகைய கடுமையான இடர்களைக் கடந்து அந்த மலைகளில் பயிர் செய்யத் தொடங்கினார்கள்.
இந்த வரலாறுகளை தெளிவாக எடுத்து சொல்ல மலையக மக்களிடம் முறையான ஆவணம் இல்லை என்பதே உண்மை. ஆதாரம் அற்றவை என்பதோ அவர்கள் விரும்பவில்லை என்பதோ இல்லை. அதற்கான துளி வசதியும் அவர்களிடம் இருக்கவில்லை என்பதே அதற்கான காரணம். புத்தக இலக்கியங்களை எழுதி வைப்பதற்கான கல்வியறிவோ, பணவசதியோ அவர்களுக்குக் கிட்டவில்லை. 
எனவேதான் ஈழத்து இலக்கியத்தில் மலையக இலக்கியம் மிகவும் பிற்பட்ட காலத்திலேயே ஆரம்பமாகிறது. 

மலையக இலக்கியம் என்று தேடத் தொடங்கினால் அவர்களின் சமூகம் சார்ந்த படைப்புகளின் தொடக்கம் 1950 களைத் தாண்டித் தேடப் படவேண்டியுள்ளது. பெரும்பாலான படைப்புகள் அவர்களின் வஞ்சிக்கப் பட்ட வரலாறு தொடர்பானது. சில பெருந்தோட்ட மக்களின் கதாநாயகர்களின் வரலாறு தொடர்பானது. 

( என் கைவசம் ஏராளமான நூல்கள் உள்ளன. அவற்றை எனது வாசகர்களுக்கு சுட்டிகள் மூலமாக தர விரும்புகிறேன். அதற்க்குப் போதுமான வரவேற்பு கிடைக்குமா தெரியவில்லை. ஆனால் தனியுரிமை விடயங்கள், ஆக்கிகளின் சம்மதம் என்பவற்றை சரிசெய்து விட்டு அதனை செய்யவுள்ளேன். அதிஷ்டவசமாக பல மூத்த மலையக இலக்கியவாதிகளை நேரடியாக நான் அறிந்து வைத்துள்ளேன். )

அந்த இலக்கியங்களின் சுவை எழுத்து நடை சார்ந்து இராது. மாறாக அவர்களின் துன்பியல் வாழ்வை  சார்ந்து இருக்கும். 
வரலாறு என்று நோக்கும் போது ஆங்கிலேயரின் பதிவுகள் சில உள்ளன. ஆனால் அவை மக்கள் வாழ்வைப் பிரதிபளிப்பதில்லை . ஆனால் வாய்மொழி இலக்கியம் மட்டுமே அதற்கு சான்று. நாங்கள் தமிழ் இலக்கியம் படித்த போது வாய்மொழி இலக்கியங்களில் மலையக நாட்டார் பாடல்களுக்கு தனியிடம் வழங்கப் பட்டது. 

நாட்டார்பாடல்கள் கவித்திறன் மிக்கவர்களால் இயற்றப் பட்டவை அல்ல. மாறாக உழைக்கும் மக்களால் களைப்பு தெரியாமல் இருக்கப் பல்வேறு காலங்களில் பல்வேறு மக்களால் மாற்றங்களுடன் பாடப் பட்டவை. அவற்றில் பல ஏட்டு வடிவம் பெறாமல் அழிந்துபட்டுப் போயிருக்கக் கூடும். கரடு முரடான மலையகம் தமிழர் வருகையின் போது எப்படி இருந்தது என்பதற்கு இந்தப் பாடலின் ஆரம்பத்தைப் பாருங்கள்.

" அன்று இந்த மலைநாடு 
எங்கும் அது பெருங்காடு.....
ஆதவனின் நிழல் கூட
பூமிதனில் படராது............"

கோப்பி பயிர்ச் செய்கைக்கு பின்னர் மக்களுக்கு அந்த குடில்கள் தரப்பட்டன. இலங்கையின் மற்ற பகுதிகளை விட மலைநாட்டில் குளிர் அதிகம். அதற்கு மத்தியிலும் அதிகாலையில் வேலைகளுக்கு விரட்டப் பட்டார்கள். மலைகளில் நின்று கொண்டு வேலை செய்யவேண்டு. பொழுது சாயும்வரை. 
( இன்றும் அந்த நிலை மாறிவிடவில்லை... நான் பாடசாலை போகும் காலத்தில் அந்த காலை நேரத்தில் மழையோ, வெயிலோ மலைகளில் கொழுந்து பறிக்கும் பெண்களை கடந்துதான் பஸ்ஸில் சென்றுள்ளேன்) 

" கோண கோண மலையேறி 
கோப்பிப் பழம் பறிக்கையிலே     
ஒரு பழம் தப்பிச்சுன்னு 
உதைச்சானைய்யா  சின்னத் துரை...."

துரை எனப் பட்டவர்கள் ஆங்கிலேய மேலதிகாரிகள்...

A tea factoryஇவ்வாறான நாட்டார் பாடல்கள் மட்டும்தான் மலையக மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் இலக்கியங்களாக அமைந்தன. மாறாக எழுத்துருவில் தங்களுடைய கருத்துகளை வெளிப் படுத்த மிக நீண்ட காலம் எடுத்தது. 

மலையக மக்களின் வாழ்வை காட்டும் நாவல்கள், கட்டுரைகள் என்பன ஆங்கிலேய ஆட்சி காலத்தின் மிகப் பிற்பட்ட காலத்தில் தோற்றம் பெற்றன. நடேச அய்யர் முதலியவர்கள் இதற்கு முன்னோடிகள். 
அந்தனி ஜீவா, சாரல்நாடன், கணேசன் முதலியவர்கள் காத்திரமான படைப்புகளைத் தர அவர்கள் சுதந்திரத்துக்குப் பின்னும் மிக நெடும் காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. 

இந்திய வம்சாவளி தமிழர்களின் குரல், வரலாறு அல்லது பிரச்சினைகள் நிச்சயமாக சர்வதேச அளவில் முன்னெடுக்கப் படவில்லை. தமிழர்களின் உரிமைப் போராட்டம் எடுத்து சொல்லப் பட்ட அளவு கூட இந்த தமிழர்களின் வாழ்வியல் போராட்டம் எடுத்து சொல்லப் படவில்லை. இலக்கியங்கள், கல்வித்துறை என்பவற்றில் அவர்களின் பங்களிப்பு முன்னெடுக்கப் பட மிகநீண்ட காலம் எடுக்கக் காரணங்கள் என்ன? 

முதற்காரணி    வறுமை. 
தோட்டப் புற மக்களின் வாழ்வாதார சுமைகள் அதிகமானவை. குடியேற்றப் பட்டவர்களால் பூர்வீக சொத்துகளைக் கொண்டிருக்க முடியவில்லை. எனவே அவர்களின் பொதுபடையான தேவைகளுக்கு முன் வேறு விடயங்களை யோசித்துப் பார்க்கவில்லை. இலக்கியத்துக்கோ, கல்விக்கோ மூலதனம் எதுவும் இருக்கவில்லை. எனவேதான் மலையக  மக்களின் பிரச்சனைகள் இன்றளவும் ஒரு நிறுவனப் படுத்தப் பட்ட முறையில் வெளியே சொல்லப் படுவதோ புரிந்து கொள்ளப் படுவதோ இல்லை. அவர்களின் உண்மையான வரலாறும் பெரும்பாலும் மறக்கப் பட்ட நிலையிலேயே உள்ளது. 

கல்விநிலையோ நல்ல நிலையில் இருக்கவில்லை. கல்வி உரிமைகளும் முறையாக வழங்கப் படவில்லை. 
" உங்கள் மூலம் நாட்டுக்கு வருமானம் கிடைக்கிறது, அந்த ஒரே காரணத்துக்காகத்  தான் நீங்கள் வாழ முடிகிறது. நீங்கள் தோட்டத்திலிருந்து வெளியேறி உங்கள் பிள்ளைகள் படிக்கப் போய்விட்டால் அப்புறம் உங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது" என்று வக்கிரமாக தலைமைகள் சிலராலேயே அறிவுறுத்தப் பட்டனர். 

ஒரு சில உதாரணங்களை சொல்லிவிட்டு முடிக்கிறேன். 

ஆங்கிலேயர்களால் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு விடயம் கோதுமை. மலைகளில் 12 மணிநேர கடும் உழைப்புக்கு கோதுமையின் உட்பொருட்கள் கொஞ்சம் உதவியாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை. 
இலங்கையின் பிரதான உணவு அரிசி என பள்ளிப் பாடப் புத்தகத்தில் இருந்தாலும் மலையகத்தில் அது கோதுமைக்குப் பின்தான். 
உலக சந்தையில் கூடுகிறதோ இல்லையோ ஒவ்வொரு அரசாங்கமும் தேவைப் படும் போதெல்லாம் அதன் விலையை மலையளவு உயர்த்தி தன் தாகத்தை தீர்த்து அந்த சுமையை மலையக மக்களின் தலையில் போடும்.
இதனால் சிங்களவரின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டியதில்லை  . 

மலைநாட்டின் அதிகாரிகள் பெரும்பாலும் சிங்களவர்களாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளப் படுவர். அவர்கள் தாங்கள் தமிழ் கற்க வேண்டுமென ஒருபோதும் யோசிப்பதில்லை. தமிழ் மட்டுமே தெரிந்த தோட்டத் தொழிலாளிகள் தாங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய கடும் கஷ்டப் பட வேண்டியிருக்கும். அல்லது அந்த அதிகாரிகளின் அடிவருடிகளுக்கு கொஞ்சம் படியளக்க வேண்டும். 

கல்விச் சுற்று நிருபங்கள், முக்கியமான கிராம சேவைப் படிமங்கள் என்பன தமிழில் இருக்காது. வாக்காளர் பதிவு தொடக்கம் அத்தனை பதிவுகளுக்கும் அதனை நிரப்பவே பத்து இடங்கள் அலையை வேண்டி இருக்கும். 
பஸ் வண்டிகளின் பெயர் பலகையை வாசிக்கத் தெரியாமல் 
" தம்பி , எந்த பஸ்சுல மஸ்கெலியா போகணும் தம்பி.... " என்று பரிதாபமாக கெஞ்சும் வயசான அய்யா மார், பெண்களைப் பார்த்து எத்தனையோ முறை மனம் வெதும்பியதுண்டு. 


இதுவும் உதாரணங்கள்தான். இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. 
1800 களிலேயே மலைகளைத் தகர்த்து விட்டு பயிரிடத் தொடங்கி விட்டனர் , தமிழர்....
அவர்களின் பாரம்பரிய நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களை என்ன செய்தனர்? 

இன்னும் வருவேன். 

பயணம் ஒன்று குறுக்கிட்டதன் காரணமாக இந்தப் பதிவில் தாமதம் ஏற்பட்டு விட்டது. மன்னிக்க வேண்டும் தோழர்களே......   

Monday, August 20, 2012

அரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....


இணைய உலகத்தில் டிராபிக் என்பது ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. நம்முடைய வலைத் தளத்தின் நிலை, எமக்குக் கிடைக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, நமக்கு கிடைக்கும் விளம்பரங்கள் முதலிய அனைத்தும் டிராபிக் சார்ந்தே அமைகின்றன. எமது தளத்துக்கு கிடைக்கும் வருகைகளை பல விதங்களில் அதிகரிக்கலாம். அந்த வழிகள் நேர்வழிகளாகவும் இருக்கலாம். அல்லது  குறுக்கு வழிகளாகவும்  இருக்கலாம்.

நான் எதைப் பற்றிப் பேசப் போகிறேன் என்பதை அனேக அன்பர்கள் புரிந்து கொண்டிருபீர்கள். ஆம். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைத்து அதனைக் கொண்டு ஹிட்சுகளை அதிகரித்துக் கொள்வதைப் பற்றிதான் கூற நினைக்கிறேன். சமீபத்தில் ஒரு பதிவுலக அன்பர் இதைக் கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் என்னளவில் அப்படிக் கடுமையாக விமர்சனம் செய்ய முடியவில்லை. அதற்கான காரணத்தையும் நிச்சயம் சொல்கிறேன். 

அறிமுக இசையமைப்பாளர் அனிருத் பற்றிய செய்தி புகைப்படங்களாக இணையத்தில் வலம்வருவதை யாவரும் அறிவீர்கள். இப்போதைய நிலைமையில் இதைப் பற்றிப் பேசினால் பரபரப்பு பதிவாக மாறும் என்று நினைத்து நான் இந்தப் பதிவை இடுவதாக நினைக்க வேண்டாம். இந்தப் பதிவில் இது ஒரு செய்தி மட்டுமே; நான் ஆராயப் போவது ஒரு பரந்து பட்ட நோக்கில்.  இது பற்றிக் கருத்துகளை இது வரை எனது பதிவில் நான் வெளியிட்டதில்லை. தற்போதைய நிலைமையில் இந்த நிகழ்வு இதை பற்றிப் பேசஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அவ்வளவுதான். 

முதலாவதாக இந்த சூடான விஷயங்களைப் பற்றிப் பேசிவிடுவோம். அந்தப் புகைப்படங்களுக்கு ஒருபுறம் ஹிட்ஸ் மழை பொழிந்தது. மறுபுறம் எதிர்ப்புகளும் அலைமோதின. நான் அதைப் பற்றி மட்டும் பேசினால் எனது பதிவு பத்தோடு பதினொன்றாக , கண்டனப் பதிவாக அல்லது " பொறாமையில்" எழுதிய பதிவாக மாறிவிடும். 

முதலில் இந்த புகைப்படங்களின் விளைவுகளைப் பார்ப்போம். இன்னும் சில நாட்களில் அந்த நடிகையின் பெயரை தேடும்போது ( அவரின் பெயர் வேண்டாம்.) இந்தப் புகைப்படங்களும் இணைந்து கொள்ளும். அவர் நல்ல படங்களில் நடிக்கலாம், அல்லது இன்னும் நல்ல பங்களிப்புகளை வழங்கலாம். ஆனால் இந்த புகைப்படங்கள் அங்கு முன்னிலைப் படுத்தப் பட்டால் அது  அவரது சுயமரியாதைப் பாதிக்காதா? நடிப்புத் துறை சார்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக அவரது சொந்த விடயங்களில் தலையிடும் உரிமையை நாம் பெற்றுவிட்டோமா? இதே போன்று சிலவருடங்களுக்கு முன்பு தமிழின் மிகப் புகழ் பெற்ற நடிகையின் அந்தரங்கமும் துகிலுரிக்கப் பட்டது. அது இதை விடவும் அநாகரிகமான வக்கிர புத்தியுடைய செயல். அதையும் மறந்திருக்க மாட்டீர்கள். 

அந்த நடிகை அதற்குப் பின் நிறைய பங்களிப்பை வழங்கிவிட்டார். நல்ல  நடிகை என்றும் பெயரெடுத்துவிட்டார். ஆனால் அவரைப் பற்றிய தேடலில் இந்த செயலும் வருவதை தடுக்க முடியாது. இதே நிலைமைதான் நாளை இவர்களுக்கும் ஏற்படும். 

சில காலத்துக்கு முன்பு இன்னொரு போலிச் சாமியாரின் முகத்திரை கிழிந்தது. பெரும்பாலான மக்களின் உயர் நிலையில் போற்றப் படும் ஒரு " துறவி" என்ற நிலையில் இருப்பவர் என்ற முறையிலும் மத உணர்வுகளைப் புண்படுத்திய குற்றத்துக்காகவும் கட்டாயம் அந்த முகத்திரை கிழிக்கப் படத்தான் வேண்டும். நானும் அவரை என் பதிவில் எள்ளி நகையாடி இருக்கிறேன். ஆனால் அந்த நடிகையைக் காட்சி படுத்தி இருக்கக் கூடாது. ஏனென்றால் அவர் பெண் என்பது மட்டுமல்ல காரணம் . அவர் துறவு நிலை ஏற்றவர் அல்லர். 

ஆனால்  அந்த செயலை ( திரை படங்களில் கூட தணிக்கை செய்யப்பட வேண்டிய அந்த காட்சிகளை) தமிழ் தொலைகாட்சி உலகம் ( குழந்தைகள், சிறுவர்கள் பார்க்கக் கூடிய) ஒளிபரப்பி அழகு பார்த்தது. அவ்வளவும் ஆகட்டும். அந்தத் துறவியாவது நாம் ஒதுக்கினோமா ?  இல்லை . உயர் பீடத்துக்கு அனுப்ப முயற்சியை வெட்கம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ( அந்த காட்சிகளைப் பார்த்தது போல்) இந்தப் பிழைகள் யாருடையவை? எம்மால் புறக்கணிக்கப் பட வேண்டியவை எவை? 

நடிகர் கமல் பற்றி ஒரு  நண்பர் பதிவை வெளியிட்டு இருந்தார். நான் அப்பதிவை வாசித்துவிட்டு , என் தளத்துக்கு வருமாறு அழைப்பு மட்டும் விடுத்து விட்டு வந்துவிட்டேன். அந்த பதிவுக்கு என்ன மறுமொழி கொடுக்க வேண்டும் என அப்போது யோசிக்கவில்லை  . அப்பதிவு பரபரப்பு பதிவாகவும் அமைந்தது. பிறகு அப்பதிவுக்கு மறுமொழி இட சென்ற போது நிறைய நண்பர்கள் விளக்கமாக, தெளிவாக மறுமொழி இட்டு இருந்தார்கள். 

அவரின் நடிப்பை பற்றி விமர்சிக்க, திட்ட எல்லாவற்றுக்கும் எமக்கு உரிமை உண்டு. " Because that is what he presents to us". மற்ற படி அவருடைய தனிப்பட்ட  வாழ்கையை விமர்சிக்க எமக்கு உரிமை இல்லை. அவரே இதை நேரில் சொல்லி இருக்கிறார். நானும் விஜயின் நடிப்பை எனது தளத்தில் ஒரு முறை விமர்சித்தேன்  . ஆனால் அவருடைய   தனிப்பட்ட  வாழ்கையை விமர்சிக்க எனக்கு உரிமை இல்லை.
பிரபலங்களின் நல்ல குணங்களைப் பற்றி கூற எமக்கு உரிமை உள்ளது, அது மனித மாண்பு. ஆனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்கையை துழாவாமல் இருப்போம். 

நான் இங்கு சொன்ன விஷயங்கள் கொஞ்சம் தான், எல்லாவற்றையும் கூற ஒரு பதிவு போதாது. எல்லாவற்றையும் மேற்கோள் காட்டியுள்ளேன். அவ்வளவுதான். ஏனெனில் நமக்கு மறதி அதிகம். இப்போதைக்கு இதை பற்றிப் பேசுவோம். பிறகு மறந்து விட்டு அப்போது வரும் பரபரப்புக்கு அடிமையாகி விடுவோம். அதனால்தான் இது முதல் தடவை அல்ல என்று சில உதாரணங்களை சொன்னேன்.    

இப்போது நம்ம ஸ்பெஷல்க்கு வருவோம். இதெல்லாம் கேட்டுட்டோம். நீ புதுசா ஏதாவது சொல்லுனு நீங்க சொல்றது கேட்குது. 
இதைப் பற்றி காரமாக விமர்சிக்க முடியவில்லை என நான் ஏன் சொன்னேன்? நானும் இப்படி சில் மேட்டர்களை பிறகு வெளியிட தடையாக அமையும் என்று நினைத்தா? அல்லது நானும் இந்த வேலை செய்கிறேன் என்ற குற்ற உணர்விலா? இல்லை, பொறாமைப் பட்ரவன்னு பெயர் வருமேன்னா? எதுமே இல்லை. 

காரணம்  என்னன்னா ஒரு அறிவியல் உண்மை.. 
அதான் நம்ம ஸ்பெஷல்.

முதலில் இந்தப் பதிவுகள், புகைப்படங்கள், விடியோக்கள், பத்திரிகை செய்திகள் எப்படி பிரபலம் அடைகின்றன? நாம் பார்ப்பதால் தானே? எத்தனை காலத்துக்கு நாம் மற்றவர்களைக் குறை கூற முடியும்? நம் மீது குறைகள் இல்லையா..? நாம் அந்த பதிவுகளை, செய்திகளை, படங்களைக்  கண்டதும் நாம் என்ன கண்ணை மூடிக் கொள்கிறோமா? இல்லையே! ஏன்? 

போதை தரும் வஸ்த்துக்கள் உலகில் ஏராளமாக உள்ளன. கஞ்சா, அபின், இப்படி ஏராளமாக.. பெயர்கள் வேறு, உற்பத்தியும் வேறு என்றாலும் செயற்பாடு என்னவோ எறத்தாழ ஒரே மாதிரியானவை. 
முக்கியமாக அவை வலி நிவாரணங்கள்.  இது மருத்துவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. 
இரண்டாவது முக்கியத்துவம்தான் தெரியுமே .. அது நம்ம " பிறவிப்பயன்" .
நல்லதை விட கெட்டதை நாடுவதுதானே நம்ம இயல்பு? 

opioids எனும் போது இனங்கள் நம்ம வலி தொடர்பான சிக்னல்களை மூளைக்கு அனுப்புவதை தடுப்பது மட்டுமல்ல .. மைய நரம்புத் தொகுதியின் சில இரசாயன / வேதிப் பொருட்களையும் தூண்டி விடுகின்றன.. இவை பொதுவாக என்டோர்பின் எனப் படுகின்றன. endo என்றால் உள்ளே என்று அர்த்தம். இவை தான் ஆசாமி போதை ஏறியதும் அடையும் பரவச நிலைக்கு காரணம். 

யோவ் ! கிசு கிசு பத்தி சொல்லுனா போதை பதியா பேசுறியானு கேக்குறிங்களா? இருங்க வரேன். 
இந்த என்டோர்பின் தவிர உடலின் உள்ளேயே அதனைத் தூண்டக் கூடிய விஷயங்கள் நிறைய உள்ளன. அவற்றைத் தூண்ட பரபரப்பு, இரகசிய விடயங்கள் , அந்தரங்கம் இதெல்லாம் உதவுகின்றன. அதனால்தான் இந்த விஷயங்களில் நமக்கு இவ்வளவு ஆர்வம். 

பத்திரிக்கைகள் கிசுகிசு போட்டு தாகம் தீர்த்துக் கொள்வது ( அடப் போங்க நம்ம இரவின் புன்னகை நம்ம பதிவையும் நடுப் பக்க நடிகை படத்துக்கு ஒப்பிட்டு போட்டார் .). , ஜோதிட மாமணிகளிடம் போய் நம்ம எதிர்கால மனைவியைப் பற்றித் தெரிந்து கொள்வது ..
( அந்த கொடுமைய அறிஞ்சுக்க அவ்வளவு ஆர்வம்) . 
பெண்களைப் பொறுத்தவரை இந்த அகக் காரணிகளை தூண்ட இந்த அடுத்தவர் சங்கதி தேவை படுவதால் ( அதிகமாக) அவர்கள் gossip செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறர்கள். 
( அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா? .... இதெல்லாம் அதான்.) 

நம்மதான் இப்படியா? இல்லை. உலகம்  பூரா இப்படிதாம்பா... 
டயானா, டோடி ஞாபகம் இருக்கிறதா? அவர்களின் மரணத்துக்கு முக்கியப் பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு உண்டு. 


சரி சரி... கொஞ்சம் சீரியஸ் ஆகிடுவோம். 
இந்த விஷயங்களுக்கு எல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால்தானே அவற்றை எழுதுகிறார்கள்? அவற்றை மறுத்துவிட்டால் என்ன? அது கொஞ்சம் கஷ்டம்தான் இல்லையா? 

எல்லாம் போகட்டும் . ஆனால் இந்த விஷயங்களை  வெளியிடுகையில், ஊடகங்கள் கவனமாகக் கையாள வேண்டும். அறிவியல் ரீதியான கதைகளை விட்டு விட்டு உணர்வு ரீதியாக கொஞ்சம்  யோசிப்போம்.  இதே நிலைமை நமக்கு நேர்ந்தால். ? நமது அந்தரங்க விடயங்களை நாம் விட்டுத் தருவோமா? எனவே அந்த அடிப்படையில் இது  வேண்டாம் தோழர்களே...

நான் " அந்த " அரசியல்வாதி பற்றிய பதிவில்கூட குடும்ப அரசியல் என்ற ( குடும்ப வளர்ப்பு) என்ற சொல் பாவனைக்கு மிக யோசித்தேன். பிறகு போது வாழ்கையில் மக்கள் நலனை விழுங்கும் அந்த செயல் தனிப் பட்டதல்ல என்ற நியாயத்தைக் கற்பித்துக் கொண்ட பிறகுதான் வெளியிட்டேன்.  
எனவே நண்பர்களே இத்தனையும் யோசிப்போம். மற்றபடி இதுதான் சரி எனத் தீர்மானிக்கும் உரிமை எனக்கு நிச்சயம் இல்லை. நான் கருத்துகளுக்கு முதலிடம் கொடுப்பவன், எனது நிலை இதுதான். 

ஏன் ? இந்தப் பதிவு கூட டிராபிக் தேடி எழுதப் பட்டதுதான். ஆனால் நோக்கம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக உள்ளேன். புகழ் எல்லார்க்கும் பிடித்த ஒன்றுதான். அதுவும் என்டோர்பினை கூட்டக் கூடும். ஆனால் அதை சம்பாதிக்க நாம் எதை நாடுவது? 
அனிருத் ஒரு நல்ல இசையமைப்பாளர் .. முடியும் வரை அவரின் இசையை மட்டும் விமர்சிப்போமே?


பதிவு பிடிச்சுருக்கா? ரெண்டு மெசேஜ் சொல்லிருக்கேன். 
அது சரி... மற்ற திரட்டிகளில் நிறைய வோட்டு விழுது ஆனா தமிழ்மணத்துள் கமெண்ட் வருது, வருகையும் இருக்கு ஆனால் வோட்டு மட்டும் விழ மாட்டேன்குதே  ?  அதுலயும் வோட்டு போடுங்க நண்பர்களே...

( இந்தப் பொழைப்பு பொழைக்குறதுக்கு நீ அப்படி பதிவு போட்டே பிழைக்கலாம் அப்படினு சொல்றது விளங்குது .. ஆனால் பப்ளிக் பப்ளிக்.....) 

Tuesday, August 14, 2012

" தி சைலன்ஸ் ஒப் த லேம்ப்ஸ் " - திரைப்படம் ஒரு கண்ணோட்டம்


" தி சைலன்ஸ் ஒப் த லேம்ப்ஸ் " திரை படத்தைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். உலகின் மிகப் புகழ் பெற்ற சைகொலாஜிகல் த்ரில்லர்களில் இதுவும் ஒன்று. அத்திரைப்படத்தைப் பற்றிய கண்ணோட்டம்தான் இது. 

1991 இன் ஒரு காதலர் தினத்தில் வெளிவந்த திரைப்படம்   " தி சைலன்ஸ் ஒப் த லேம்ப்ஸ் ". காதலர் தினத்தில் வெளிவந்ததே ஒழிய காதலின் மறு உருவமான வன்முறை தொடர்பான கதைக்களத்தைக் கொண்டிருந்தது. வெறும் த்ரில்லர்தானே என நினைக்க வேண்டாம். 1991 இன்  சிறந்த படத்துக்கான விருது இதற்குதான் கிடைத்தது. 

இப்படம்  பற்றிய எனக்கான அறிமுகம் மதன் எழுதிய " மனிதனுக்குள் ஒரு மிருகம் " என்ற புத்தகத்தின் வாயிலாகக் கிடைத்தது. அந்நூலின் ஊடாக இப்படம் ஒரு புகழ் பெற்ற திரைப்படம் என அறிந்துகொண்டேன். நெடுநாட்களாக இத்திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அண்மையில்தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது.  

 திரைக்கதை:
  
" சீரியல் கில்லர்கள்" பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ( சீரியல்களில் தோன்றி எம் உயிரை எடுப்பவர்கள் அல்ல) 
இந்த  மனநோயாளிகள் தங்களுக்கு எதோ ஒரு காரணத்தால் ஏற்பட்ட பாதிப்பினால் கொலைகாரர்களாக மாறி விடுவார்கள். அதுவும் கொலை செய்வது அவர்களுக்கு ஒரு தாகமாக மாறிவிடும். அவர்களைப் பற்றிய ஒரு திரைப்படம். மனோ தத்துவவியல் டாக்டர்களைப் பொறுத்தவரை ஒரு ஆய்வு ரீதியிலான திரைப்படம். 


அமெரிக்காவில் " buffalo bill " என்ற கொடூரமான கொலையாளி வலம்வருகிறான். மனிதர்களை  கொலை செய்து அவர்களின் தோலை தைத்து ஆடையாக அணியக் கூடிய கொடூரன் அவன். அவனைக் கண்டு பிடிப்பதற்காக FBI இல் பயிலும் நிலை மாணவியான ஒரு இளம் பெண் நியமிக்கப் படுகிறாள். ( ஸ்டார்லிங்) எந்தவொரு தடயமும் இல்லாத நிலையில் அவள் உதவிக்கு நாடுவது, டாக்டர் . லெக்டர். 

டாக்டர். லெக்டர் ஒரு முன்னால் மனநோய் மருத்துவர்... இந்நாளில்? 
ஒரு தொடர் கொலையாளி, மனநோயாளி... 

கடும் காவலுக்கு மத்தியில் உள்ள லெக்டரை , ஸ்டார்லிங் சந்தித்து உரையாடுகிறாள். அவனின் வன்மம் கொண்ட மன நிலையினூடாக கொலையாளியைக் கண்டு பிடிக்க முயல்கிறாள். அதற்கு லேக்டரின் நம்பிக்கையை அவள் பெறவேண்டும். அதற்காக அவள் அவனை விடுவிப்பதாக வாக்களிக்கிறாள். 

இதற்கிடையில் அமெரிக்க செனட்டரின் மகள் அடுத்து கடத்தப் படுகிறாள். அவளை உடனடியாகக் கண்டுபிடிக்க லேக்டரிடம் உதவி செய்யுமாறு கெஞ்சுகிறாள் ஸ்டார்லிங். ஆனால் பதிலுக்கு லெக்டர் கேட்பது ஸ்டார்லிங் இன் கசப்பான கடந்த காலத்தை.... 
லெக்டர் கொலையாளியின் மனநிலை, இடம், பெயர் யாவற்றையும் ஒவ்வொன்றாக சொல்கிறான்.... ஆனால் அனக்ராம் ( Anagram ) வடிவில். ( எழுத்துகளைக் குழப்பிய வடிவில்) 

ஸ்டார்லிங் அனைத்து புதிர்களுக்கும் விடை தேடி கொண்டு புறப்படுகிறாள்.. இதற்கிடையில் சிறையிலிருந்து கொடூரமாகவும், மிக புத்திசாலித்தனமாகவும் தப்பிக்கிறான் லெக்டர். இதன் பிறகு என்ன நடக்கிறது? கொலையாளி பிடிபட்டனா, லெக்டர் என்ன ஆனான் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த திரைப்படம். 
படம் முழுவதும் சுவாரசியம், விறுவிறுப்பு என்பவற்றுக்கு பஞ்சமே இல்லை.  

டாக்டர் லெக்டர் , கடும் காவலைத் தாண்டி தப்பிக்கும் காட்சி.... அப்பப்பா! அபாரமாக இருக்கும். பல ஹிந்தி, தமிழ் படங்களில் காப்பி அடித்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.  


ஸ்டார்லிங் லேக்டரின் பழைய அறைக்குள் போய் ஆய்வு செய்யும் போது ஒண்ணுமே இல்லாத சீனில் சும்மா மிரட்டி இருப்பார்கள். அறைக்குள் செல்லும் போது ஆணி ஒன்று அவளின் காலைப் பதம் பார்க்கும் போது நமக்குள் எதோ செய்கிறது. அப்படிக் காட்சி அமைத்து இருப்பார்கள். 

எல்லாவற்றுக்கும் மேலாக லேக்டரின் அனக்ராம். வார்த்தைகளை சுழற்றி, படிப் படியாக பொடி வைத்து ..... அப்பாடா! எவ்வளவு கஷ்டம்? 
ஸ்டார்லிங் இன் கடந்த காலத்தை தனியாக காட்டி கடுப்பேற்றவில்லை. மாறாக காட்சிகளோடு நகர்த்துகிறார்கள்.


மகளை இழந்த தாயின் பரிதவிப்பு, டாக்டரின் திமிர், எல்லாவற்றையும் அசலாகக் காட்டி உள்ளார்கள். 
ஸ்டார்லிங் ஏன் இந்த வழக்கில் இவ்வளவு அக்கறை காட்டுகிறாள்? அவள் மனத்தைக் காயப் படுத்தியது என்ன? 
எல்லாவற்றுக்கும் விடை பிணைந்து உள்ளது.

விருதுகள்
அடிப்படை விருதுகள் ஐந்திலும் அகாடமி விருது பெற்ற திரைப்படம் இதுதான். 
1 . சிறந்த திரைப்படம் 1991

2 . சிறந்த நடிகை : ஸ்டார்லிங் ஆக நடித்த  Jodie Foster
ஒரு இளம் அதிகாரியாக மிரட்டுகிறார். துணிச்சல் நிறைந்த பெண்ணாக, மனிதாபினம் மிக்க பெண்ணாக என பல உணர்சிகளையும் கைவசம் வைத்துக் கொண்டிருக்கும் இவருக்கு இவ்விருது கிடைத்ததில் ஆச்சரியம் இருக்க முடியாது. 

3 . சிறந்த நடிகர் : டாக்டர் ஹனிபல் லெக்டர் ஆகா நடித்த Anthony Hopkins
படத்தில் மொத்தம் 16 நிமிடங்கள்தான் வருகிறார். ஆனால் மனநோய் கொண்ட டாக்டராக இவர் மிரட்டுவதைக் கண்டால் வியக்காமல் இருக்க முடியாது. 

4 . சிறந்த இயக்குனர்: Jonathan Demme
படத்தின் முக்கியமான பலமே திரைக்கதைதான், ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு வார்த்தையிலும் விறுவிறுப்புடன் நகர்கிறது. 
காட்சியமைப்பு ஒவ்வொன்றும் தனித்துவமானவை. கதையில் சொற்ப களங்களே காணப்படுகின்றன.பிரதானமாக pittsburgh , பென்சில்வானியா , மேற்கு வர்ஜீனியா போன்ற இடங்களில் படமாக்கப் பட்டுள்ளது. 

5 . திரைக்கதை  : Ted Tally  
இக்கதை 1988 இல் வெளிவந்த இதே  தலைப்பிலான   நாவலை தழுவி எழுதப் பட்டது. எழுதியவர் தாமஸ் ஹாரிஸ் .

1973 இல் வெளிவந்த The Exorcist திரைப்படத்துக்கு பின்னர் ஹாரர் திரைப்படங்களில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப் பட்ட ஒரே திரைப்படம் இதுதான். 
சிறந்த ஒலியமைப்புகும், எடிட்டிங் இற்கும் பரிந்துரைக்கப் பட்டது. 

போதாக் குறைக்கு கோல்டன் க்ளோப் விருதுகளையும் அள்ளிச் சென்றது.  

வசூல்:
வசூல் விஷயத்திலும் சளைக்கவில்லை.. 
படத்தின் தயாரிப்பு செலவு 19 மில்லியன் அமெரிக்க டாலர். 
வசூல் 272 மில்லியன் அமெரிக்க டோலர்களை அள்ளிக் குவித்தது. 

விமர்சனங்கள் :
விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. காட்சியமைப்பில் காணப் பட்ட வன்முறை காரணமாக சில எதிர்ப்புகளையும் சம்பாதித்தது,. 
IMDB rating : 8 .7 /10   

இவ்வளவும் சொல்லியாயிற்று ஒரு முறை கட்டாயம் பார்த்து விடுங்கள். ஏனென்றால் போன நூற்றாண்டின் சிறந்த படங்களுள் ஒன்று என அமெரிக்க பிலிம் அகாடமி ஆல் தேர்ந்தெடுக்கப் பட்ட படம். 
இன்னொன்றையும் சொல்ல மாறந்து விட்டேன். 
இது கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான  திரைப்படம்.   பாலியல் வக்கிர உணர்வு கொண்ட காட்சிகள் திரைப் படத்தில் இல்லை ; ஆனால் சொல் பாவனை, வன்முறை, போன்ற காட்சிகள் நிச்சயம் சிறுவர்களுக்கு உகந்ததல்ல.  

ஆனால் வன்முறையை கொப்பளிக்கக் காட்டவேண்டும் என்ற நோக்கம் படம் முழுக்க இல்லை. (I Saw the Devil , Saw ...) சில காட்சிகள் படத்துக்கு  நிச்சயம் தேவைப் பட்டவைதான். 

உதாரணத்துக்கு ஸ்டார்லிங் முதன்முதலில் மனநோயாளிகளின் இடத்துக்கு செல்லும் போது ஏற்படும் அவமானம், கொலைகாரன் இறந்த பெண்ணின் முதுகிலிருந்து தோலை உரித்தெடுத்த காட்சிகள், பிரேத பரிசோதனை முதலிய காட்சிகளைக் காண சகிக்காது. இளகிய மனம் உள்ளவர்கள் கட்டாயம் தவிர்த்துக் கொள்ளுங்கள்.  

கவனிக்கத் தக்கவை:
ஒரு த்ரில்லர் எப்படி இருக்க வேண்டுமோ அதற்கான அத்தனை விடயங்களும் இருக்கும். ( நன்றாக கவனித்துப் பாருங்கள் வேட்டையாடு விளையாடு " திரைப் படத்தில் இப்படத்தின் பாதிப்பை காணலாம். அதே கௌதம் மேனன் " நடுநிசி நாய்கள்" மூலம் காமெடி பண்ணினார்) 

நடிகர்கள் அத்தனை பெரும் தமது காட்சிகளை சரிவரப் பொருந்தி நடித்திருப்பார்கள்.

ஹோப்கின்சின் நடிப்பு பெரிதும் புகழப் பட்டது. ஒரு தொடர் கொலையாளியின் மன நிலையை பிரதிபளிப்பதட்காக கடும் முயற்சி, பயிற்சி மேற்கொண்டுள்ளார்.  
அவரது மட்டுமல்ல, இந்த திரைப் படத்தின் பல வேடங்களும் முன்னணி நடிகர்களால் நிராகரிக்கப் பட்டது. அதற்காக நிச்சயம் வருந்தியிருப்பார்கள். 

மனதை ஒரு வித படபடப்போடு கதையுடன்  ஒன்றச்  செய்யும் இசை....
பின்னணியில் ஓடும் மெல்லிய இசை எப்போதும் மனதுக்குள் அந்த பய உணர்வை மாற்றாமல் பார்த்துக் கொள்கிறது. சிறந்த இசைக்கான விருதுக்கும் பரிந்துரை செயப்பட்டது. ஆனால் டேர்மினட்டர் பாகம் 2 அந்த விருதை அவ்வாண்டில் பெற்றுக் கொண்டது. 

psycho பற்றிய படங்களில் இன்றளவும் பேசப் படும் இரண்டு படங்களுள் ஒன்று. 
ஒன்று கருப்பு வெள்ளையில் வெளிவந்த " psycho " . மற்றது இது. 


எனது முதல் திரை விமர்சனம் .. பிடிச்சிருக்கா? 
பிடித்திருந்தால் திரட்டிகளில் வாக்களியுங்கள்... அப்படியே உங்கள் கருத்துகளையும் சொல்லிவிட்டு போங்களேன். 
நன்றி....


கண்டிப்பாக மிஸ் பண்ணிடாதீர்கள்... 
         மண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3   
         காயத்துக்கு மருந்து போடும் " சோபாலபுரம்"

தி சைலன்ஸ் ஒப் த லேம்ப்ஸ் " - திரைப்படம் ஒரு கண்ணோட்டம் ........................ ........................ ........................ அருண்பிரசாத் வரிக்குதிரை Rating: 4.5/5

Monday, August 13, 2012

நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள்....


என்னுடைய முந்தய சூடான இடுகை இங்கே........


25 இடுகைகளை கடந்து வந்து விட்டேன். அந்த பெருமையில் இந்த இடுகையை இடவில்லை... அதற்குக் காரணமான உங்களை நோக்கி நன்றிப் பெருக்குடன் எழுதுகிறேன். 

தமிழ் பதிவுகள், எனக்கு அறிமுகமானது 2009 இல். வாசிக்கத் தொடங்கி இருந்தாலும் பதிவுலகம் பற்றி அதிகம் தெரியாது. திரட்டிகளுக்கு சென்று பல்வேறு பதிவுகளைப் பார்வையிடுவேன். கருத்துரைகள் இடுவது பற்றி அதிகம் தெரியாது. ஒரு பார்வையாளனாக மட்டுமே எனது பயணத்தைத் தொடர்ந்தேன். 

ஆனால் 2010 இல் எனக்கு வலைப் பதிவுகளை யார் வேண்டுமானாலும் இலவசமாக உருவாக்கலாம் என எனக்கு அறிமுகப் படுத்தியவன் எனது அன்பு நண்பன் " அருண் பிரசாத் " ( ஆம், அவனும் எனது பெயரையே உடையவன்.) முதலாவதாக நான் பதிவுலகில் நன்றி கூற விரும்புவது அவனுக்குதான். அவன் எனக்கு முன்னதாகவே பதிவுகளை இட்டுக் கொண்டிருந்தான். என்ன காரணத்தாலோ இப்போது பதிவுகள் எழுதுவதை நிறுத்திவிட்டு வாசகனாகத் தொடர்கிறான்.

ஆரம்பத்தில் ஒரு சாதாரண பதிவனாக தொடங்கினேன். திரட்டிகளில் இணைவது, பதிவுகளை இணைப்பது போன்ற விடயங்கள் அந்தளவுக்கு எனக்கு பரிச்சயமாக இருக்கவில்லை. எனது ஆரம்ப கால பதிவுகளுக்கு வருகைகள் அதிகமாகவும் இருக்கவில்லை. ஒரு சில தளங்களில் எனது கருத்துகளைப் பதிவு செய்த போது அத்தளத்தின் பதிவர்கள் சிலர் எனது பதிவுகளை பார்வையிட்டு கருத்தும் வழங்கிச் சென்றனர். பல்கலைகழகம் சென்ற பின் பதிவிடுவதட்கு  நேரம் இருக்கவில்லை. எனவே பதிவுகளை விட்டு விலகி வாசகனை வலம் வந்தேன். 

மீண்டும்  பதிவுகளை இட வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் ஆறாமல் இருந்தது. 
மீண்டும் ஒரு பதிவினை இட்டு பதிவுகளுக்குள் நுழைந்தேன். இம்முறை வாசகர் வட்டம் இன்னும் விசாலமாக இருப்பதை உணர்ந்து கொண்டேன். குறுகிய காலத்தில் நல்ல மறுமொழிகள் வரத் தொடங்கின. என் எழுத்துகளை ரசிக்கும் நண்பர்கள் இருப்பதை உணர்ந்து கொண்டேன். 

என் வலைத்தளத்துக்கு பல அன்பர்கள் உறவுகளாக இணைந்து கொண்டார்கள். கூகிள் மூலமாக புதிய நண்பர்களைப் பெற்றேன். அதிலிருந்து இதுவரை புதிய விடயங்கள் பலவற்றையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். 

எனது தளத்துக்கு தனது தளத்தில் தனியாக ஆதரவு திரட்டி தந்த என் அன்பு நண்பன் சிகரம் பாரதிக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும். 

மேலும் வருகை தந்த பின் தமது கருத்துரைகளால் எனக்கு நீங்காத ஆதரவு அளித்து வரும் திண்டுக்கல் தனபாலன், அதிசயா, ஹாரி, இன்னும் பெயர் குறிப்பிடாத இன்னும் பல அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது நன்றி... மேலும் எனது தளத்தில் என்னைப் பின் தொடர்வதன் மூலமாக எனக்கு பலம் சேர்த்துக் கொண்டிருக்கும் உறவுகள் அனைவருக்கும் எனது நன்றிகள்.... 

எனது பதிவுகள் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் அமைந்து விடுவதை என்றும் நான் விரும்பியதில்லை. பல்வேறு பட்ட வாசகர்களையும் கவர வேண்டும் என்பது எனது நோக்கம். 
ஆரம்பத்தில் " என் மேல் உங்களின் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள் " என்ற சிறுகதை வெளியிட்டேன். அந்த சந்தர்ப்பத்தில் எனது வாசகர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம், ஆனாலும் அதற்க்கு நல்ல கருத்துரைகள் கிடைத்தன...
அந்த சிறுகதை இங்கு காணுங்கள்......

அதற்குப் பின் என் திருப்திக்கமைய ஓரிரு பதிவுகளை வெளியிட்டு வந்தேன். ஆனால் குறைந்த மறுமொழிகளையே பெற்றேன். அதற்குக் காரணம் திரட்டிகளில் நான் இடுகைகளை சரியாகக் கொண்டு சேர்க்கமையே என்பதை நீண்ட இடைவெளிக்குப் பின்னர்தான் அறிந்து கொண்டேன். 

பின்னர் திடீரென்று ஒருமுறை நான் அதிக வரவுகளைப் பெற்ற பதிவு
" த்ரீ இடியோத்ஸ் " பதிவு மூலம்.. அப்பதிவை இங்கு காணுங்கள்.
அப்பதிவு ஒரு கிண்டல் பதிவு. விஜய் தனது ஒரே மாதிரியான படங்களால் ரசிகர்களின் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்த கட்டம் அது. அதனைக் கிண்டல் பண்ணி அப்பதிவை வெளியிட்டேன். நானே எதிர் பார்க்காத அளவு ஹிட்சுகளை அள்ளியது. பிறகுதான் புரிந்தது விஜய் பற்றிய பதிவுக்கு ஏன் அதனை மவுசு என்று... 

அதனைத் தொடர்ந்து அதே போன்ற பதிவுகளை வெளியிட ஆசை இல்லை. எனவே வெவ்வேறு பிரிவுகளில் எழுதி வந்தேன் திடீரென்று ஒரு பிரேக்.... அதற்குப் பின் அண்மையில்தான் மீண்டும் நுழைய முடிந்தது.... அதற்குப் பின் திரட்டிகளில் சென்று முறையாக பதிவுகளை இணைத்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.


என்னைப் பொறுத்தவரை நான் சாதித்து விட்டேன் என்ற எண்ணம் எனக்கு இல்லை.. ஆனால் பதிவுலகில் இனி நிறைய சாதிப்பேன் என்ற நம்பிக்கை நிச்சயம் இருக்கிறது. அதற்கு தேவை உங்கள் அன்பும் ஆதரவும்தான். என் ஆக்கங்கள் நிச்சயமாக தரம் மிக்கவையாக இருக்கும். அதற்கு நான் நிச்சயம் பொறுப்பேற்கிறேன். 

எனக்கு நிச்சயமாக இன்னும் பெரிய வாசகர் வட்டம் வேண்டும். அதற்காக நான் எப்போதும் கேட்பது போல என் வலைத்தளத்தில் நண்பராக இணைந்து கொள்ளுங்கள். எனது பதிவுகளை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். திரட்டிகளில் எனக்கு வாக்களிப்பதன் மூலமாக எனது ஆக்கங்கள் இன்னும் பலரை சென்றடைவதற்கு ஒத்தாசை செயுங்கள்.

என்னுடைய ஆரம்ப பதிவுகள் கூட தரமானவையே என நம்புகிறேன், எனவே இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன். சிரமம் பார்க்காமல் தயவு செய்து அவற்றைப் பார்வையிட்டு உங்கள் மேலான கருத்துகளைத் தந்துதவுங்கள். 


நீங்கள் வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி கூறும் அதேவேளை தொடர்ந்தும் உங்கள் ஆதரவு எனக்கு இருக்கவேண்டும் என வேண்டுகிறேன். உங்கள் வருகையாலும், கருத்துரைகளாலும் என் மனம் பெருமகிழ்ச்சி அடைகிறது. 

நீங்கள் வாசிக்காத எந்த இடுகையானாலும் வாசித்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். நான் எப்போதும் அதனைக் கண்டு மகிழ்வேன். என்னோடு வலையில் இணைந்து கொள்ளும் அடுத்த நண்பராக/ நண்பியாக நீங்கள் கூட இருக்கலாம். 
எனவே எல்லாவற்றுக்கும் மேலாக 
உங்களுக்கு நன்றிகள் கோடி.................  

என்னுடைய முந்தய சூடான இடுகை இங்கே........

மண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3மண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3

இந்தக் கட்டுரையின் முன்னைய பகுதிகள் இங்கே....


தமிழர்கள் வந்து சேர்ந்த இடம் மன்னார் என்று சொன்னேன் அல்லவா? அவ்விடத்தை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது.. தமிழகத்தையும் இலங்கையையும் மிக அருகாமையில் இணைக்கும் இடம் அது.. இலங்கையின் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது இந்த நகரம்.

தமிழர்கள் வந்த வழி
மன்னாரில் இருந்து இலங்கையின் மத்திய  மலை   நாட்டை நோக்கி அவர்கள் " நடை பயணமாக" கூட்டிச் செல்லப் பட்டார்கள். ஆம். 
ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வரப் பட்டாலும் அடிமைகளுக்கு சமமான உரிமைதான் அவர்களுக்கு வழங்கப் பட்டது. அவர்கள் கால் நடையாக அனுராதபுரம் நகர் ஊடாகச் சென்றார்கள்.

அந்நகரம் சிங்களவர்களின் முதல் தலைநகரம் ... தமிழர்கள் இங்கு வந்த போது அவ்விடம் ஒரு காட்டுப் பகுதி. சிங்களவர்கள் இந்த " வந்தேறிகளை" அன்னியமாகப் பார்த்தார்கள். அல்லது ஆங்கிலேயர்களின் பலவந்தத் திணிப்பாகப்  பார்த்தார்கள். 

என்னுடைய ஒரே ஆதங்கம் இலங்கையில் ஏற்கெனவே இருந்த தமிழர்களாலும் இந்த வந்தேறிகள் " அன்னியமாகப்" பார்க்கப் பட்டதுதான். இந்த கடும் மனப் போக்கு சுதந்திரத்துக்குப் பின்னரும் தொடர்ந்தது. ( துரதிருஷ்ட வசமாக இன்றும் சில தமிழரூடாகத் தொடர்கிறது) 
சுதந்திரத்துக்குப் பின்னர் அவர்களை மனிதர்களாக  மதிக்கத் தெரிந்த " தந்தை செல்வா" போன்ற ஒரு சிலரே இருந்தனர்.  


அந்தக் காட்டுப் பகுதியில் இருந்து மலை நாட்டை நோக்கி " மிஞ்சி இருந்தவர்கள்" அழைத்து வரப் பட்டார்கள்.
இங்கு மிஞ்சி இருந்தோர் என நான் கூற காரணம் இருக்கிறது. காட்டுப் பகுதியூடாக அழைத்து வரப் படுகையில் பல பேர் இறந்து போயினர். பல காரணங்கள் இருந்தன. மந்த போஷணை,  களைப்பு, பாம்புக் கடி இப்படி... 
ஆனால் ஒப்பந்தத்தின்படி இவற்றையெல்லாம் ஆங்கிலேய அரசு பொறுப்பேற்காது என்றே கூறப் பட்டதாக வாய் வழியாக நான் அறிந்ததுண்டு. 

அந்த ஒப்பந்தம் உழைப்பாளிகளின் ஒப்பந்தம். அவர்கள் இங்கு வந்து இங்குள்ள கோப்பித் தோட்டங்களில் உழைக்க வேண்டும். 
தங்குவதற்க்கு இடம் ( நான் சொன்ன லைன் காம்பராக்கள்) வழங்கப் படும். அந்த ஒப்பந்த்ததில் பல தேன் தடவிய வார்த்தைகள் இருந்தன. ஆனால் இங்கு  வந்த பின் அவர்களுக்கு எஞ்சியது கடும் உழைப்பும் சிறிய சம்பளத் தொகையும் பெரிய ஏமாற்றமும்தான். 

இங்கு ஆசை காட்டப் பட்டு மோசம் போனது உண்மைதான். பல தரகு முதலாளிகள் இலங்கை பற்றி பல மனக் கோட்டைகளை கட்ட வைத்தனர்  .  இந்த பாவப் பட்ட வாழ்க்கைக்கு விமோசனம் என நம்பியே கண்டியை நோக்கிப் புறப் பட்டனர். ஆனால் அவர்களின் நரகம் இடம் மாற்றப் பட்டது, அவ்வளவுதான். 
" நிலத்துக்கடியில் மாசி ( காய வைக்கப் பட்ட மீன்) விளைவதாகவும், தேயிலைக்கடியில் தேங்காய் விளைவதாகவும்சொல்லி அழைத்து வரப் பட்டதாகவும் இந்த வந்தேறிகள் எள்ளி நகையாடப் படுவதுண்டு. வார்த்தை சுகத்துக்குச் சொல்லப் பட்டிருக்கலாம். இது எந்தளவுக்கு உண்மை என்பது அறியேன்.

ஆனால் இவ்வார்த்தைகள்   அவர்களின் காயப் பட்ட மனதை மேலும் வருத்த மட்டுமே உதவியது. மேற்சொன்ன அந்த வாக்கியத்தை என் பாடசாலைக் காலத்தில் ஒரு ஆசிரியர் ( அவர் ஒரு யாழ் தமிழர்) அடிக்கடி பயன் படுத்துவார். விளையாட்டை சொல்வது போல் கூறும் போது , அப்போது அதன் அர்த்தம் , அதற்குப் பின்னால் உள்ள ஒரு சமூகத்தின் ஏமாற்றம் எனக்கு அப்போது புரிந்ததே இல்லை. 

ஆனால் உண்மையில் அவர்களை ஏமாற்றியது எது? 
" வறுமை" .
அவர்கள் எல்லாத் துன்பங்களையும் சுமந்தவாறு இங்கு வந்ததற்கு ஒரே காரணம் வறுமைதான். 

நான் சென்ற பதிவில் தெளிவாக தெரிவித்திருந்தேன், இலங்கையை நோக்கிப் புறப்பட்ட தமிழர்களில் பெரும்பாலோனோர் சமூக, பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியவர்கள். இந்தியாவின் சாதிய அமைப்பின் படியே அவர்கள் அழைத்து வரப் பட்டார்கள். சென்ற பதிவில் ஆங்கிலேயர்களுக்குப் பின்னரே சாதியம் தலை தூக்கியதாக நான் எழுதியது போல ஒரு புரிதலுடன் பின்னூட்டம் வந்திருந்தது. இல்லை. நிச்சயமாக இல்லை . நான் அவ்வாறு கூறவில்லை. தமிழர்களிடையே புற்றுநோய் போல பரவி இருந்த சாதி முறையை வெள்ளையர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். 

இது எவ்வாறு உறுதியாகக் கூற முடிகிறதென்றால் அழைத்து வரப் பட்ட மக்களின் சாதிய அமைப்பிலான புள்ளிவிபரம் உள்ளது. ஆனால் எனக்கு தற்போது கிட்டவில்லை. 
கங்காணிமார் ( மேற்பார்வயாளர்  ), கணக்கப்பிள்ளைமார் முதலியவர்களாக நியமிக்கப் பட  ஆதிக்க இனத்தவர்களும் அழைத்து வரப் பட்டார்கள். சுதந்திரத்துக்குப் பின்னர் மலையகத்தில் பெருந்தோட்டத் துறையை விட்டு மிக ஆரம்பத்தில் வெளியே வந்தவர்களும் இவர்கள்தான். 
இன்றளவும் இலங்கையில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் இந்தியத் தமிழர்கள் பெரும்பாலும் தமது பெயருக்குப் பக்கத்தில் முதலியார், செட்டியார் முதலிய அடைமொழிகளை வைத்திருப்பதைக் காணலாம். 

மற்ற இனத்தவர்கள் முன்னால் வருவதற்கான வாய்ப்புகள்  மிக அரிதாகவும் தாமதமாகவுமே அமைந்தது. இன்றளவும் யாழ் தமிழர்களால் இந்திய தமிழர்கள் அலட்சியமாகப் பார்க்கப் படுவதற்கு இந்த ஆரம்ப கால சமூகப் பொருளாதார காரணிகளே காரணம் என்பது பொதுவாக வழங்கப் படும் கருத்து. 

மாத்தளை நகரத்துக்கு வந்து சேர்ந்த மக்கள் மலையகத்தின் பல்வேறு திசைகளை நோக்கியும் பிரித்து அனுப்பப் பட்டார்கள். அவ்வாறு சென்றவர்கள் தங்கள் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகளையும் கொண்டு சென்றனர். அதை பற்றிதான் அடுத்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

சுதந்திரத்துக்குப் பின்னர் திருத்தி அமைக்கப் பட்ட வீடுகள் கூட இப்படித் தான் இருக்கும். 
தமிழர்களுக்கு வழங்கப் பட்ட " லைன் காம்பராக்களின்" முதல் வரிசை வீடுகளில் கள்ளர், மறவர், அகமுடையார், நாயுடு முதலியோர் குடியமர்த்தப் பட்டனர். பிற்படுத்தப் பட்டோர் கடைசி வரிசை காம்பராக்களில் .... இந்த தொடர் வீடுகின் சுகாதார வசதிகளும், இட வசதிகளும் மிக மோசமானவை... ஐந்து வீடுகளுக்கு ஒரு கழிவறையே காணப் படும். இரு அறைகள் இருக்கும். அதில்தான் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

மலையக எழுத்தாளர்கள் இதனை "லாயக் ( குதிரை லாயம்) காம்பராக்கள் " என அழைப்பர். 

கொழுந்து பறிக்கச் செல்லும் பெண்கள் தங்களுடைய குழந்தைகளை " புள்ளை காம்பராவில்" விட்டு செல்வார்கள். கவனித்துக் கொள்ள ஒரு பெண்ணொடு... குழந்தைகள் நிறைந்த இக்கூடாரத்தில் பாதுகாப்பு ,வசதிகள் மிக சொற்பம். இதிலிருந்து ஆரோக்கியமான குழந்தையை எப்படி எதிர் பார்ப்பது? 

பி. கு. 
நான் இலங்கைத் தமிழர்கள் மீது அன்பு மிக வைத்திருக்கிறேன். இங்கு சொல்லப் படும் விடயங்கள் சில தமிழர்கள் நாம் ஏன் இப்படி நடந்து கொண்டோம் என கொஞ்சம் யோசித்துப் பார்க்கத் தான். நிச்சயமாக அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான், தவிர எவர் மனதையும் புண் படுத்த அல்ல.....

இந்த பதிவில் புள்ளிவிபரத்துக்காக சாதிகள் சிலவற்றை குறிப்பிட  வேண்டி உள்ளது , மற்றபடி அதனை குறிப்பிட எனக்கு விருப்பம் இல்லை. 

பதிவு நீளம் குறைவானது என சிலர் கேட்டனர்... ஆனால் எல்லா விடயங்களும் உங்களுக்கு நன்றாகப் பதிய வேண்டும். எனக்கு மிக நீளமான பதிவுகளில் நம்பிக்கை இல்லை. 

நல்ல சில குறிப்புகளுடன்
மீண்டும் வருவேன்.

Friday, August 10, 2012

காயத்துக்கு மருந்து போடும் " சோபாலபுரம்"


காயத்துக்கு மருந்து போடும் " சோபாலபுரம்"
( Silaignar  " Seernithi" - The wound healer


சோபாலபுரம் சோர்வடைந்து கிடக்கிறது. 
முத்தமிழ் , இனியதமிழ், அருந்தமிழ் என்று தொடர்ந்து வரும் அனைத்து இத்தியாதிகளையும் தன்னுடைய எழுத்தாணி கொண்டு வளர்த்து வைத்த ( அல்லது அப்படி சொல்கிற ) சிலைஞர் சீர்நிதி , தன்னுடைய கட்சிப் பொதுக் கூட்டத்தில் உட்கார்ந்திருக்கிறார்.  கட்சியில் ஆளுக்கொரு பக்கம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

சீர்நிதி தன் கைகளை உயர்த்தி எதோ சொல்ல முயல்கிறார். சலசலப்பு குறைய மாட்டேன் என்கிறது. தலைவரின் வாரிசுகள் இரண்டினதும் விசுவாசிகள் ஆளுக்கொரு பக்கம் கத்துகிறார்கள். 

தலைவருக்கு தான்தான் கட்சித் தலைவரா என்பது சந்தேகமாக இருக்கிறது. கட்சி நோட் பாடினை எடுத்துப் பார்க்கிறார். ஆமாம் , அவர்தான் தலைவர். 
எதோ முடிவுக்கு வந்தவர், தொண்டையை செருமுகிறார். 
" தண்ணி குடிங்க தலைவரே..!" பக்கத்திலிருந்த தொண்டர் கரிசனையோடு சொல்ல அவரை முறைக்கிறார். 
" அமைதியாக இருக்க சொல்லு..."
சில பல போராட்டத்துக்கு பிறகு ஒருவாறு கொஞ்சம் சத்தம் குறைகிறது. 

" கட்சி கடலுக்குள் மூழ்கி காலாவதியாகி விட்டது; காலமோ எமக்கு காலனாகி விட்டது , இந்நிலையில் உடன்பிறப்புகள் இப்படி உரத்த குரலில் கூச்சல் போடலாமா?"

' இப்படி ஒரு வரி செய்தியை ஒன்னரை மணி நேரம் நீட்டி நீட்டித்தான் "அந்தம்மா " ஜெயிச்சதும் இல்லாம எதிக்கட்சி நாற்காலி கூட குடி முழுகிப் போச்சு என யாரோ சொல்வது தெளிவாகக் கேட்டது... ஆனாலும் தலைவர் தொடர்ந்தார். 

" கட்சிக் கூட்டத்தில் இப்படி என் காலை வாரி பேசாமல் அதைத் தூக்கி நிறுத்த தூண்களாக நில்லுங்கள். உடைந்து போன என் செல்வாக்குக்கு உறுதி சேர்க்க உண்ணாவிரதம் செய்யுங்கள். "

' ம்ம்கும்... .. உங்க உண்ணாவிரதம் பத்திதான் ஊருக்கே தெரியுமே... ' மறுபடியும் ஒரு குரல்...


" ஆமாம். அது கொஞ்சம் உண்மைதான். சாயம் வெளுத்துப் போச்சு. அந்த நேரத்தில் பொங்கி வந்த மக்கள் சக்தியை முட்டுக் கொடுத்து நிறுத்த கொஞ்சம் சாணக்கியத் தனம் தேவைப் பட்டுச்சே.... " 

அது  சாணக்கியத் தனம் இல்லை தலைவரே ... சல்லித் தனம்..." இந்த முறை நேரடியாக.
" நடந்ததை விட்டு நடக்கப் போவதை பேசுவோமா?"

" நேசத் தலைவனுக்கு நேந்துக் கிட்டு எடுத்த விழா "ஏதாவது எடுக்கலாம் இல்லையா? "

" எங்க தலைவரே.... பஞ்சாயத்து நம்ம கைல இருந்தப்ப வராட்டி ஊரை விட்டு விலக்கி வச்சுடுவோனு மிரட்டலாம். இப்பதான் பஞ்சாயத்துல உட்காரவே நாதி இல்லையே! "  

" வழக்கமா பகுத்தறிவும் பேசுவிங்க. பக்கத்துல ஒருத்தர் உங்களுக்கு பல்லாண்டு பாடுவார். உங்க குடும்பத்துல உள்ளவங்க உங்க பிறந்த நாளுக்கு பால்குடம் தூக்குவாங்க. இந்த முறை அந்த பருப்பே வேகாது தலைவரே...." 

" என்னதான் இருந்தாலும் நம்ம மக்கள் அதெல்லாம் மறக்க ரொம்ப நாள் ஆகாது..  அவங்களுக்கு நம்ம ரெண்டு கட்சிய விட்டா என்ன கதி?  " தலைவர் முகத்தில் ஒரு நம்பிக்கை. 

' அதானே அந்த ஒன்னுதான்  நம்ம மக்களையும் எங்களையும்  பிடித்த பீடையும் ' ஒரு வேட்பாள சிகாமணி மனதுக்குள் பொருமிக் கொண்டார். 

" உன் மைன்ட் வாய்சை நான் கேட்ச் பண்ணிட்டேன். தலைவர் தொடர்ந்தார். 
" நம்ம காயத்துக்கு மருந்து போடும் ப்ராஜெக்ட் என்ன நிலைமையில் இருக்குது ? தமிழ் மக்கள் , உலக புலம் பெயர்ந்தவங்க என்ன சொல்றாங்க?"தன் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார். அவரும் டாக்டர்தானே? 

" ஆணியே ***** வேனாங்குறாங்க... "
"ஏன்?"
அடி பட்டப்ப பிடில் வாசிச்சுட்டு இப்ப ஏன் செத்த பிணத்துக்கு  எம்பாம் பண்ண வாரிங்கன்னு கேக்குறாங்க.... "

" அவங்க என்ன மடயன்களா தலைவரே? அடி பட்டப்ப சும்மா இருந்திங்க.... முதுமை காரணமா பயணம் பண்ணாம இங்க இருந்து கடிதம் அனுப்புனிங்க....  ஆனா உங்க மகள் எதோ பஞ்சாயத்துல மாட்டுனதும் சிட்டாப் பறந்துடின்களே.... இதெல்லாம் பாத்துக் கிட்டுதான் இருக்காங்க... பத்தாதுக்கு இந்தப் பதிவுப் பயல்களும் வாங்கு வாங்குன்னு வாங்கிடரானுன்களே   ...."

அது பிள்ளைப் பாசம், பெற்ற மனம் பித்துன்னு சொல்லிருக்கலாமே... நம்ம மக்களுக்கு சென்டிமன்ட் ரொம்ப பிடிக்குமே..."

" அது சொல்லிப் பாத்தாச்சு தலைவரே.... அதான் உங்களை சிறந்த குடும்பத் தலைவனா அறிவிச்சு பதிவர்கல்லாம் விழா நடத்துநாங்களே தெரியாதா? அதனால் குடும்பத்த நீங்க பாத்துக்கங்க எங்கள பாத்துக்க வேற யாரையும் நாங்க தேடிக்குரோங்கறாங்க... அந்தம்மா இந்தப் பஞ்சாயத்து எலெக்சன்ல ஜெயிக்க காரணமே நீங்கதான்னு ஒரு கதையும் இருக்குது. "
தலைவரின் பல்பு மறுபடி அணைகிறது?

" வேறு நல்ல செய்தியே இல்லையா? " 

" ஏன் இல்லாம? உங்க நடிப்பை பார்த்து வியந்து பக்கத்துக்கு நாடு தமிழர்கள் மயங்குரான்களோ இல்லயோ... பெரும்பான்மை மக்கள் நம்பிடுறாங்க. பெரும் வரவேற்ப்பு இருக்கு... உங்களையும் நம்பி எதிர்ப்பெல்லாம் இருக்கு ... புப்ளிசிட்டி தலைவரே.. பேசாம அங்க ஒரு வெப்சைட் தொடங்குவோம். ஹிட்சாவ்து கிடைக்கும். 

வேறு ஏதாவது நாடகம் எழுதி வச்சுருக்கின்களா  ? "
" இல்ல தலைவரே.... உங்க உண்ணாவிரத நாடகத்துக்கு ஏன் தேசிய விருது கிடைக்கலன்னு அங்க பட்டிமன்றமே நடத்துறாங்க... அதை தூக்கி சாபிடற மாறி எதாவது பண்ணனும் தலைவா....."

என்கிட்டே ஒரு ஐடியா இருக்கு ...... எல்லோர் பார்வையும் அந்தப் பக்கம் திரும்பின......
ஐடியா கமெண்டில் சொல்லுங்கையா.......     

இதை வாசிக்குறப்பவே தெரிஞ்சுருக்கும்  .   
யாவும் கற்பனை... 
சுபம்.

தொடரும்...

Thursday, August 9, 2012

புலியைப் பார்த்து பூனை சூடு வைத்துக் கொண்ட கதையா SLPL


இலங்கையில் தற்போது பரபரப்பாக பேசப் படும் விடயம்தான் ஸ்ரீலங்கா பிரீமியர் லீக். இந்தியாவில் வணிக ரீதியாக சக்கை போடு போடும் இன்டியன் பிரீமியர் லீகினை முன்னுதாரணமாகக்  கொண்டு  தொடங்கப் பட்டிருக்கும் கிரிக்கெட் விளையாட்டு தொடர்தான் இது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. 

இன்டியன் பிரீமியர் லீகிற்கு இது போட்டியாக இது அமையப் போவதில்லை என இந்தியாவுக்கு நன்கு தெரியும். ஏன்? இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கும் இது நன்கு தெரியும். பின்பு எதற்காக இந்த முயற்சி.? இன்னும் இலங்கை வீரர்கள் தொடர்பான சம்பளப் பிரச்சினையே தீரவில்லை. 


கிரிக்கெட் இந்தியாவில் ஒரு மதம். அதில் சச்சின் கடவுள் என பிரபலமான கூற்று ஒன்று உள்ளது. அது உண்மைதான். கடவுள் உள்ள இடத்தில பணம் கொழிக்கும் அல்லாவா? 
அந்த அளவுக்கு சந்தைப் படுத்தல் திறமை, வாய்ப்பு இலங்கையில் உண்டா என்பது சந்தேகமானதே...
புலியைப் பார்த்து பூனை சூடு வைத்துக் கொண்ட கதை ஆகி விடுமோ தெரியவில்லை. 

இலங்கையின் பல பாகங்களை வலயங்களாகப் பிரித்து அதற்கு உள்ளூர், வெளியூர் வீரர்களை இணைத்து நடத்தப் படப் போகிறது. அப்படியே இந்தியன் லீக் போல. 

உலகின் மிகப் பெரிய பலம் வாய்ந்த கிரிக்கெட் கட்டுபாட்டு சபை பிசிசிஐ தான். ஐசிசி கூட அதன் கைப்பாவை ஆகி விட்டதாக பல வீரர்களின் குற்றச் சாட்டும் அதன் மீது உள்ளது. அந்தளவுக்கு பலம் கொண்டதல்ல , இலங்கை கட்டுப்பாட்டு சபை. 

இது குறித்து பல தரப்புகளிலும் பல்வேறு பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. 
இலங்கை கிரிக்கெட் அரசியல் சார்ந்த விஷயமாகவும் மாறி விட்டது. இந்நிலையில் இது நாடு அணிக்காவது உபயோகமா அமையுமாக இருந்தால் சந்தோஷம்தான். ஏற்கெனவே இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நஷ்டத்தில் இயங்குகிறது. வீரர்களுக்கான ஒப்பந்தப் பணம் கூட முறையாக வழங்கப் படவில்லை. இந்நிலையில் இந்தப் போட்டிகள் லாபநோக்கம் கருதி மட்டுமே நடத்தப் படுவதில் சந்தேகம் எதுவுமில்லை.

ஏற்கெனவே இலங்கையின் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி பயணிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டி செலவுகள் விடியப் போவது யார் தலையில்? 
ஏற்கெனவே ஐ பீ எல் போட்டிகளின் சர்ச்சைகளே ஓய்ந்த பாடில்லை. 
இந்தப் போட்டிகளின் மூலகர்த்தா கபில் தேவ். இந்திய அணி கடுமையான வீழ்ச்சியில் இருந்த போது இளம் வீரர்களை உருவாக அவர் உருவாகியதுதான் ஐ சி எல் . காலத்தின் போக்கில் அவரையே ஒதுக்கி பன்பலதுடன் மிரட்டலாக உருவாக்கப் பட்ட அமைப்புதான் ஐ பீ எல். 

சூதாட்டம், பாலியல், போதை மருந்துகள் என எதற்குமே சளைக்காத போட்டித் தொடர்தான் இது. 
ஆனால் தொடர் ஆரம்பிக்கப் பட்ட நோக்கத்தை விட்டு அது எப்போதோ விலகிச் சென்று விட்டது. 

ஆனாலும் இந்திய அதை விடாமல் தொடர பணம் தவிர வேறு  என்ன காரணமாக இருக்க முடியும்?

இந்தப்  போட்டித் தொடரின் மூலம் பெரிய லாபத்தைப் பெற்று விடலாம் என்பதே இலங்கை கட்டுப்பாடு சபையின் கனவு. அந்த கனவு நனவாகுமா என்பது பொறுத்துதான் பார்க்க வேண்டும்...

ஆனால் இந்தியாவைப் போன்ற வர்த்தக வெற்றியை இலங்கையில் எதிர்ப் பார்க்க முடியாது. முதலாவது இந்தியாவின் சனத் தொகை, சந்தைவாய்ப்பு, பணபலம் பார்வையாளர்கள் அனைத்தும் பன்மடங்கு அதிகம். 
இந்தத் தொடர் சாதிக்குமா அல்லது சொதப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இந்திய வீரர்கள் யாரும் அனுமதிக்கப் பட மாட்டார்கள் என அறிவிக்கப் பட்டுள்ளது. பிசிசிஐ இந்த போட்டி தொடரை விரும்பவும் இல்லை. இதை தொடர்ந்து இலங்கையில் சிலர் பொய்யாக IPL போட்டிகளில் நமது வீரர்களை விளையாட விடக் கூடாது என்றாலும் அது நடக்கப் போவதுமில்லை. ஏனென்றால் அதனால் நட்டம் இலங்கைக்குத்தான். இது வெற்றுக் கே ஊசல் மட்டுமே! இலங்கையில் இந்தியா மீது வெறுப்பு கொண்ட சிலரின் உளறலே இது. 

சென்ற வாரம் நடந்து முடிந்த இலங்கை இந்திய சுற்றுலாவில் காயம் கொண்ட இலங்கை நட்சத்திரம் " குமார் சங்கக்கார " இந்தத் தொடரில் விளையாட மாட்டார் என்பது ஒரு உபரித் தகவல். 

பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பகிர்வுக்காக இடது பக்க கீழ் மூலையில் ஒரு முட்டையை வைத்துள்ளேன் பாருங்கள். அதில் போய் பகிந்து கொள்ளுங்கள்.


நன்றி: அருண். 

Monday, August 6, 2012

பிளாக்கர் follower விட்ஜெட்டை காணவில்லையா? அய்யகோ!
நல்லாத்தான் போயிட்டு இருந்தது. நேற்று முன்தினம் திடீரென என் பிளாக்கர் follower  விட்ஜெட்டை காணவில்லை. நானும் தேடாத இடம் இல்லை ( பிளாக்கர் layout உள்ளே தான். ) வேண்டாத தெய்வம் இல்லை. ம்ஹும். காணோம். இடியே விழுந்தாப் போல ஆகிவிட்டது. இப்போதான் வலைப் பதிவுகளில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். 
இப்போதான் என் பதிவுகளைப் பார்த்து ( அல்லது பரிதாபப் பட்டு) என்னை சில அன்பர்கள் தொடர ஆரம்பித்திருந்தார்கள். ( ஓபனிங் சீன்லயே அவமானமா?) 

 சரி போனால் போகட்டும் விடலாம் என்றால் ....டாஷ்போர்ட் போய் என்னை follow யாரும் செய்யும் அளவுக்கு நான் ஒர்த் இல்லையே!   
எல்லாத் திரட்டியிலும் பதிவை இணைத்து , இல்லாத மூளையை கசக்கி தலைப்பு வைத்து , வாசிக்கும் பதிவுகளின் பதிவர்களை எல்லாம் கூப்பிட்டு , விழி பிதுங்கி நின்றாலும் ஹிட்ஸ் 100 ஐத் தாண்டுவது குதிரைக் கொம்பாக அல்லவா உள்ளது? பின்பற்றுபவர்கள் என்றால் ரீடிங் லிஸ்டில் பார்த்து வாசிப்பார்கள் என்றால் இப்படி ஒரு சோதனையா? 

சில மணிநேரங்கள் தவித்து விட்டேன். கையும் ஓடல, காலும் ஓடல. எதோ என் அட்டுப் பதிவுக்குக் கூட நண்பன் ஹாரி உம் அண்ணன் தனபாலனும் நல்ல கமெண்ட் தந்தனர்.     ( மவ ராசங்கள் என் மனசு கஷ்டப் படக் கூடாதுன்னு ) அதுவும் போச்சா? டெம்ப்ளேட்டே மாத்தி, சில காட்ஜெட்டுகளை நீக்கி, ம்ஹும்....

சில நேரங்களில் மனசு விட்டுப் போனாலும் கொஞ்சம் தேற்றிக் கொண்டேன். கூகிள் சர்ச் பண்ணி ஏதேதோ ட்ரை பண்ணிட்டேன். ஏதும் ஒத்து வாறப் போல தெரியல. 
போலீஸ் கம்ப்ளைன் பண்ணலான்னு கூட தோணிச்சு. எங்க? நம்ம ஊர்ல ' வெள்ளை வான் " மூலம் காணாம போன புண்ணியவாங்கலையே வருஷ கணக்கா தேடுறாங்க .. தக்கனூண்டு விட்ஜெட் எந்த மூலைக்கு?! 

என் சந்தேகம் பலர் மேல் திரும்பியது. ( அரண்டு போனவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானே?). குருஜி பத்தி போட்ட பதிவால அவருடைய சிஷ்ய கோடிகளில் யாராவது? ச்சே ச்சே... அவருக்கு அது முடிஞ்சு அடுத்த பிரச்சனைல மும்முரமா இருக்காரே! 
(கிடைக்குற சந்துல விளம்பரம் தேடுவம்ல.....)
ஒருவேளை நம்ம வளர்ச்சி! பிடிக்காம யாரும் பண்ணிருப்பங்கனா நம்ம அந்த அளவா வளந்துட்டோம்?

ஒரு பிளாக்கர் இருக்குனு இவன் பண்ற அலப்பறை தாங்க முடியலன்னு யாராவது? இருக்கலாம். நாமளும் வர வர ஓவராத்தான் போறம். சரி எல்லாம் அவன் செயல்னு நம்ம ப்ளாக் எழுதுறத நிறுத்திடலானு முடிவும் பண்ணிட்டேன். ( இந்த இடத்துல நீங்க அப்பாடான்னு விடுற பெருமூச்சு விளங்குது). அப்பத்தான் ஒரு ட்விஸ்ட் . நம்ம நண்பன் சிகரம் பாரதி போன் பண்ணினான்.

" உன் பிளாக்கர் செட்டிங்க்ஸ்ல மொழி அப்டிங்குற இடத்துல தமிழ் வேணாம் ஆங்கிலம்னு மாத்து. அதான் உன் விட்ஜெட் மாயமான வரலாறு அப்டின்னான். "
 இது என்னடா மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு?? ( நாம இந்த டெக்னாலாஜி விஷயத்துல வீக் ). அஜித் படத்துல வார மாறி கண்ணாடிய திருப்பின உடனே எப்படி ஆட்டோ ஓடும்? 

சரி , நீ படிச்சவன் சொல்ற, பாரு. செட்டிங்க்ஸ்ல போய் மொழிய மாத்திட்டேன் . மாறாது பாரதி ....??????
அட மாறிடுச்சு. !!!!!

சிகரம் சிரித்துக் கொண்டே " உன் சேவை பதிவுலகத்துக்கு தேவை " அப்படினான். ( எல்லாம் பதிவுலகின் தலைவிதி) 
நன்றி சிகரம் பாரதி...  

இந்தப் பதிவின் நோக்கம் என்னவென்றால் மொழி என்ற இடத்தில தமிழ் என பதியும்போது குறித்த விட்ஜெட் காணாமல் போய்விடும். இதனை சரி செய்ய அல்லது இனி அதை செய்யாமலிருக்க உங்களுக்கு மெசேஜ் ஒன்று கிடைத்திருந்தால் மிக்க மகிழ்ச்சி. இதை சற்று சுவாரசியமாக சொல்ல நினைத்தேன். இந்த சந்தர்ப்பத்தை என் வலைப் பதிவுக்கு பல வாசகர்களை அறிமுகப் படுத்திய அன்பு நண்பன் சிகரம் பாரதிக்கு நன்றி கூறவும் பயன்படுத்திக் கொள்கிறேன். 

ஏங்க! ஒரு  சின்னூண்டு விட்ஜெட் விஷயத்தை வைத்து எவ்வளவு மொக்கை போட்டு விட்டேன். ? கொஞ்சம் பகிர்ந்துகொள்ள மாட்டிங்களா? சரி, சரி ..... follower விட்ஜெட் பத்தி சொன்னேன்தானே? அப்படியே இந்த தளத்தில் இணைந்து கொண்டு எனக்கு சப்போர்ட் பண்ணுங்களேன். மாட்டிங்களா! அச்சா பிள்ளை இல்ல!  

பி.கு. 
படு மொக்கைப் பதிவு அப்படின்னு கோபிக்க வேணாம். என் சீரியஸ் பதிவுகளை வாசித்து  கருத்து   சொல்லி விட்டு போங்களேன்.