Wednesday, September 5, 2012

தி பியானிஸ்ட் திரைப்படம்- ஒரு கண்ணோட்டம்


தி பியானிஸ்ட் திரைப்படம் பார்த்து விட்டீர்களா? பார்க்காவிட்டால் நிச்சயம் பார்க்கச் சொல்லி பரிந்துரை செய்வேன். உலக சினிமா பற்றிய எனது புரிதலை மாற்றி என்னை ஓரளவு தேர்ந்த ரசிகனாக மாற்றிய திரைப்படம். நான் முதன்முதலாக இரண்டாவது முறை உபதலைப்புகளை தேடி ரசித்த திரைப்படம். 
பெரும்பாலான நண்பர்கள் பார்த்திருப்பீர்கள்.. 

எனினும் பார்க்காத தோழர்களுக்கு ஒரு அறிமுகமாகவும் பார்த்தவர்களுக்கு ஒரு சுகமான மீட்பாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையில் பகிர்ந்து கொள்கிறேன்..

உலக சினிமாவை ருசிக்க நினைக்கும் கற்றுக் குட்டி யாருக்குமே பொதுவாக பரிந்துரைக்கப்படும் முக்கியமான திரைப்படங்களுள் ஒன்று இது... ( நானும் கற்றுக் குட்டி என்ற முறையில் பல்வேறு நல்ல விமர்சனங்கள் மூலமாகவே இந்த திரைப்படம் நோக்கி உந்தப் பட்டேன். )

இந்த திரைப் படம் உண்மை சம்பவம் ஒன்றை மையப் படுத்தி எடுக்கப் பட்ட பீரியட் பிலிம்.. பொதுவாகவே உலக சினிமாவில் வரலாற்றுக் கதைகள் நன்றாக இருக்கும். அதிலும் இது முதல் தரம். 
"இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப் பட்ட போலந்து யூத பியானிஸ்ட் ஒருவனின் கதை...ஒரு நகரத்தின் சாவு " என்ற தலைப்பில் அந்த யூதரால் எழுதப் பட்ட சுய சரிதையை மயமாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப் பட்டது. 

திரைக்கதை 
1939.
இரண்டாம் உலக யுத்தம் .
ஜெர்மானியப் படைகள் வெற்றிக்கனியை ருசித்துக் கொண்டிருக்கின்றன. அமைதியாக ஒதுங்கி நிற்கும் போலந்து மீதும் தாக்குதல் நடத்தப் படுகிறது. அந்த நாட்டின் ரேடியோ கட்டுப்பாட்டகம் குண்டு வைத்து தகர்க்கப்படுகிறது. அதில் பியானிஸ்ட்ஆக தொழில் புரியும் ஒருவன்தான் ஸ்பில்மான். ( Szpilman ) 


யூதர்கள் தங்கள் உடைமைகளை  விட்டுவிட்டு வெளியேறுவதற்கு சிறு அவகாசம் கிடைக்கிறது. தங்களால் முடிந்த அளவு பொருட்களை எடுத்துக் கொண்டு குடும்பம் வெளியேறுகிறது. யூதர்களின் மரணக் கிடங்கு ஒன்றுக்கு பலியிடப் படவே அவர்கள் அழைத்து செல்லப் படுகிறார்கள். பயணத்தின் வழியில் இந்த இசைக் கலைஞன் யூதன் அல்லாத   நண்பன்  ஒருவனால் காப்பாற்றப் படுகிறான். 

உறவுகள் அனைத்தும் அறுந்து விட்ட நிலையில் சபிக்கப் பட்ட வாழ்வை அடைகிறான். அடிமைத் தொழிலாளியாக ஒரு இடத்தில் வேலை செய்கிறான். அதே நேரத்தில் யூதப் புரட்சிக் குழு ஒன்று உருவாவதை அறிந்து சில ஆயுத கடத்தலிலும் உதவுகிறான். அதுவும் தோல்வி அடைகிறது. 

மீண்டும் ஒரு முறையும் யமனின் கருணை அவனுக்கு கிடைக்காமலே போகிறது. அவனின் பழைய தோழி, அவளது கணவன் மூலமாக யூதரல்லாத மக்கள் வாழும் பகுதிக்கு அழைத்து செல்லப் பட்டு தலைமறைவாக தங்க வைக்கப் படுகிறான்.


பயங்கரமான தனிமையில் வாடும் அவனுக்கு தனக்குள் ஒளிந்திருக்கும் கலைஞனின் வேதனை புரிகிறது. அவனது விரல்கள் துடிக்கின்றன. போதாக் குறைக்கு ஜான்டிஸ் வந்து விடுகிறது. 

வெகுவிரைவில் அந்த பகுதியும் யுத்தத்தால் அழிகிறது. சிதைவுகளுக்கு நடுவே உணவை தேடி ஓடுகிறான், பதுங்குகிறான். 
ஒரு முறை உணவைப் பிரித்தவாறு நிமிர்ந்தவன் நடுங்கிப் போகிறான். ஒரு ஜெர்மன் அதிகாரி நிற்கிறான். " நீ யார்?' என விசாரிக்கிறான். 
" நான் ஒரு பியானோ கலைஞன்" 

அந்த அதிகாரி அவனை நம்பாமல் ஒரு பியானோ அருகே அழைத்து செல்கிறான் . அதன் முன்னால் அமரும் அவன் தன்னை மறக்கிறான். நடுங்கிய அவன் கைகளுக்கு தீனி கிடைக்கிறது... தன்னை மறந்து வாசிக்கிறான். அந்த அதிகாரியையும் மெய்மறக்க வைக்கிறான். மாலையில் மீண்டும் வரும் அதிகாரி ப்ரெடும் , ஜாமும் தருகிறான். சில நாட்களுக்கு இது தொடர்கிறது. 

ஒரு நாள் மீண்டும் வரும் அதிகாரி தான் மாற்றலாகி செல்வதாக சொல்கிறான். 
" யுத்தம் முடிந்ததும் நீ என்ன செய்வாய்?" 
" எங்கள் நாட்டு ரேடியோவில் வாசிப்பேன்" 
" நான் அதைக் கேட்பேன்."
அந்த வாக்குறுதியையும் குளிருக்கு பாதுகாப்பாக தனது இராணுவ மேலங்கியையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறான். 

1945.
காட்சி மாறுகிறது. 
ஜெர்மன் போரில் தோற்கிறது. மீட்புப் படைகள் இவன் தங்கி இருக்கும் கட்டடங்களை அழிக்கிறது . ஜெர்மானிய மேலங்கியோடு இவன் வெளியே வருவதால் துப்பாக்கிகள் இவனை நோக்கி திரும்புகிறது. சிலையாகி நிற்கிறான். 
************************************************

விருதுகள் 
இத்திரைப்படம் 3 அகாடமி விருதுகளைப் பெற்றது.
சிறந்த நடிகர்: பியானிஸ்ட் - அட்ரியன் ப்ரோடி 
சிறந்த இயக்குனர்: ரோமன் போலன்ஸ்கி 
சிறந்த தருவிக்கப் பட்ட திரைக்கதை.. : ரோனலடு ஹாவார்ட் 

இது தவிர கேன்ஸ், பப்டா , கெய்சர் விருதுகளையும் அள்ளிக் குவித்தது. 

வசூல்.
35 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப் பட்ட இத்திரைப்படம் 120 மில்லியன் டாலர்களை குவித்தது. 

விமர்சனங்கள் 
விமர்சன ரீதியில் இத்திரைப் படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக ப்ரோட்யின் நடிப்பு... இசையும், இயக்கமும் பற்றி நல்ல கருத்துகள் வழங்கப் பட்டன.
இவர்தான் உண்மையான ஸ்பில்மான்
தனது சுய சரிதையில் அந்த அதிகாரி பற்றி நன்றியோடு கூறுகிறார்.... 
கவனிக்கத் தக்கவை...
படம் முழுவதும் வருவது ப்ரோடி..  ஒரு போதும் சலித்துப் போகவில்லை...  கண்களின் பின்னணியில் எப்போதும் நீர் நிறைந்திருக்க இவரின் நடிப்பு மிக அருமை. இன்னும் பல படங்களில் இவர் முத்திரை பதித்து உள்ளார். 

அதிகாரி தரும் ஜாமை கை நிறைய அள்ளி விரலை சூப்பி விட்டு கண்ணை மூடும்போது நமக்குள்ளும் அந்த அகோரப் பசியை உணர்த்தி விடுகிறார். எந்த இடத்திலும் மிகை நடிப்பை காட்டவில்லை. 
குடும்பத்தையே இழந்து நிக்கும் சோகம், கண்முன்னே இறந்து போகும் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போகும் அவலம், நன்றியுணர்வு... எல்லாம். 
உண்மையான பியானோ கலைஞனை போலவே அசத்தி விட்டார்... அவரது நடிப்பில் பல  இடங்களை குறிப்பிட்டு சொல்லத் தோன்றுகிறது. ஆனால் பதிவின் நீளத்துக்கு அது வேண்டாம்.

இரண்டாவது இயக்குனர்..
தனது உணர்வை அப்படியே வெளிப்படுத்தும் நடிகர்கள் கிடைத்து விட்டதால் அசத்தி விட்டார்.  காட்சியமைப்புகள் பாத்திரப் படைப்புகள் அனைத்தும் மிக நேர்த்தியாக இருந்தது .எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளவில்லை... ஸ்பில்மான் கதாநாயகனோ அல்லது விடுதலை வீரனோ அல்ல... அவன் ஒரு அதிருஷ்டசாலி அவ்வளவே. 

படம் மனித நேயத்தை வலியுறுத்துகிறது. கொடூரங்களுக்கு நடுவே சில நல்ல உள்ளங்கள்.... நட்புக்காக தனது நண்பனைக் காப்பாற்றும் ஒரு போலிஸ்... அவனை தலை மறைவாக பாதுகாக்கும் அவனது இசையை நேசிக்கும் தோழி... இசைக்காக எதிரிக்கு உதவும் ஒரு இராணுவ அதிகாரி. 

ஜெர்மன் அதிகாரி அவனை விளிக்கும் பொது " ஏய்... யூதா.." என்றே அழைக்கிறான். சிறிதளவே வந்தாலும் அக்கதாப்பாத்திரம்  நிறைந்து விடுகிறது..  
இறுதியாக அந்த அதிகாரி யுத்தக் கைதியாக ஒரு முகாமில் கிடக்கிறான். அவர்களை நோக்கி  செய்யப் படுகின்றன... 
அவர்களில் ஒருவனிடம் தான் ஒரு  யூதனுக்கு உதவியதாக சொல்கிறான்.. 

சொல்லியே ஆக வேண்டிய இன்னொரு விஷயம் இசை... 
இசைக் கலைஞன் பற்றிய படம் என்பதால் படம் முழுக்க நிறைந்து மனதை வருடுகிறது.
பல புகழ் பெற்ற கலைஞர்களின் இசை பயன்படுத்தப் பட்டது. 

அந்த உடைந்த சிதைவுகளுக்கு மத்தியில் அவன் மனதில் ஒலிக்கும் இசை மாமேதை பீத்தோவன் உடையது...

ஆகா மொத்தத்தில் நல்ல நடிப்பு, இயக்கம், திரைக்கதை, இசை...
இந்த நான்கிற்காக ஒரு முறை கட்டாயம் பார்த்து விடுங்களேன்.....

கொசுறு 
அந்த ஜெர்மன் அதிகாரி  ஹோசன்பெல்ட்.
1952 இல் ஒரு கைதியாக இறந்து போனார்...
உண்மையில் அந்த அதிகரி ஒரு பியானிஸ்ட்... இது பின்னாளில் தெரிய வந்தது. இசை எப்படி மனிதனை மாற்றி இருக்கிறது பார்த்தீர்களா ? 

பியாநிச்டின் கைகள் வாசிப்பது ப்ரோடி அல்ல... அந்த க்ளோஸ் அப் ஒரு உண்மையான போலந்து பியானிஸ்ட் உடையது.  உண்மைத் தன்மைக்காக இயக்குனர் எவ்வளவு உழைத்து இருக்கிறார் பார்த்தீர்களா? 

நாம் அனைவருமே வரலாறு கற்றுக் கொடுப்பதை மறந்து விடுகிறோம். அவ்வளவு அடிபட்ட யூத இனம் இன்று இன்னொரு இனத்தினரை வதைக்கின்றனர் அல்லவா ?அங்குதான் மனது உறுத்துகிறது. 

நன்றி.....


தி பியானிஸ்ட் திரைப்படம்-  ஒரு கண்ணோட்டம் 

........................
........................
........................
அருண்பிரசாத் வரிக்குதிரை   Rating: 4.5/5



25 comments:

  1. Yes -- Very nice movie.
    No one can forgot the eyes of pianist in the "Jam eating scene"

    ReplyDelete
    Replies
    1. Yes ofcourse Bro.... You also remember? Thank you very much for your first visit and comment.

      Delete
  2. ரோமன் பொலான்ஸ்கியின் மாஸ்டர்பீஸ் பியானிஸ்ட்டை பதிவில் பகிர்ந்தமைக்கு நன்றி.

    உங்களை தொடர்வதில் மகிழ்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.... உலக சினிமா ரசிகனா? நீங்கள் தொடருவதால் நான் அல்லவா மிக்க பெருமை கொள்ள வேண்டும்!!!!!
      அழைப்பை ஏற்று வந்த உங்கள் அன்பு உள்ளத்தால் பெரிதும் மகிழ்கிறேன்.

      Delete
  3. சுருக்கமான விமர்சனம்... நிறைய தகவல்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி தோழரே.....

      Delete
  4. மனதைத்தொட்ட விமர்சனம். எனக்கு தமிழ் படங்களைத்தவிர மற்ற படங்கள் பிடிக்காது, அதுவும் தமிழ் நாட்டில் தயாரிக்கப்படுகிற தமிழ் படங்களை மட்டுமே விரும்பிப்பார்ப்பேன். உங்களின் இந்த விமர்சனமும் இங்கே சில ப்ளக்கர்கள் எழுதுகிற உலக திரைப்படங்களைப்பற்றிய விமர்சனங்களும் என்னை ஆங்கிலப்படங்களின்பால் நாட்டம் கொள்ளவைக்கிறது.நன்றி

    ReplyDelete
    Replies
    1. நல்ல விடயம்தான் தோழி... தமிழ் திரைப்படங்களும் நல்ல விடயங்களை சொல்லும்போது மகிழ்ச்சிதான். ஆனால் உலகத் திரைப்படங்களில் ஒரு பரந்துபட்ட ரசனை நமக்கு உண்டாகும். இது உண்மையில் ஹாலிவுட் படமல்ல. பிரிட்டன்,பிரான்ஸ் உட்பட 4 நாடுகளின் கூட்டு முயற்சியில் வெளிவந்த திரைப்படம். உங்கள் மனதுக்கு பிடித்தமையால் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி...

      Delete
  5. மீண்டும் ஒரு அருமையான திரைப்படத்தை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி. தொடருங்கள் நண்பா...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் இரவின் புன்னகை ... உங்கள் கருத்துக்க்காகவும் காத்திருந்தேன்... எங்கே முன்னைய பதிவைப் போல விமர்சிப்பீர்களோ என நினைத்தேன்.... நிச்சயம் நல்ல விடயங்களை நோக்கியே எனது பதிவுகள் இருக்கும்.... என்னை நம்பலாம் தோழா...

      Delete
    2. இல்லை. அனைத்தையும் எப்படி விமர்சிப்பேன் நண்பா. தங்கள் உழைப்பு, வெற்றி பெறட்டும்... இன்னும் நல்ல படங்களை அறிமுகப் படுத்துங்கள்...

      The First Love பாத்துட்டீங்களா!!! எனக்கு ரொம்ப புடிச்ச படம்...

      Delete
    3. மிக்க நன்றி நண்பா... இன்னும் பார்க்கவில்லை.. பார்த்துவிட்டால் ஆயிற்று... நிச்சயம் இன்னும் நல்ல திரைப்படங்களை மட்டுமல்லாமல் நல்ல நூல்கள், சாதனையாளர்கள் பற்றியும் பகிர்ந்து கொள்ளாலாம் என்று நினைக்கிறேன்.. கற்றது குழுவில் இணைந்து விட்டேன்.. ஆனால் நேரம் கிடைக்குமோ தெரியவில்லை...

      Delete
  6. இது சிறந்த படங்கள் வரிசையில் உள்ள படம், உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது, அத்துடன் யூதர்கள் பட்ட இன்னல்களை விபரிக்கும் படம். எல்லா ஜெர்மனியர்களும் கெட்டவர்களில்லை என்பதையும் சொல்லிச் செல்லும் படம்.
    நீங்கள் LIFE IS BEAUTIFUL பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் யோஹன்... சிறந்த திரைப்படங்களில் ஒன்று... எந்தவொரு இனத்திலும் எல்லோரும் நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ இருக்க முடியாது... மனித நேயம் எல்லோருக்கு உள்ளேயும் உள்ளது... அதனை வெளிக் கொண்டு வந்து விட்டால் போதும். எல்லாம் நலம்தான்... முதல் கருத்துக்கு நன்றி தோழா... தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டுகிறேன்...

      Delete
  7. யூதர்கள் பிரச்சினை தொடர்பில் எழுந்த திரைப்படங்கள் வரிசையில் "டிஃபன்ஸ்" திரைப்படத்துக்கு அடுத்ததாக எனக்கு மிகவும் பிடித்த படம். நல்ல விமர்சனம் தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. டிபன்ஸ் எனக்கும் பிடிக்கும். ஆனால் உலகப் படம் என்ற பார்வையில் எனக்கு முதன் முதலாக பிடித்த படம் என்பதாலோ என்னவோ எனக்கு இந்த படம் சற்று அதிகமாகவே பிடிக்கும். உங்கள் வருகையாலும் கருத்தாலும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தோழா...

      Delete
  8. வரலாற்றை மீண்டுமொரு முறை திரும்ப பார்ப்பதில் தவறில்லை.

    தி பியானிஸ்ட் பற்றி ஏற்கனவே பதிவுகளும் சிறந்த படம் சிபாரிசு பின்னூட்டங்களும் இருக்கின்றன.

    இரண்டாம் உலகப் போர் பற்றியும்,யூதர்கள் பற்றியும்,ஹோலகாஸ்ட் பற்றியும் நிறைய படங்களும் ஆவணப்படங்களும் இருக்கின்றன.யூதர்களுக்கு இருக்கும் பிரச்சார வசதி பாலஸ்தீனியர்களுக்கு இல்லையென்றே சொல்லலாம்.உங்களுக்கு சிபாரிசாக

    Paradaise now - திரைப்படம்

    Palestine Blues - ஆவணப்படம்

    ReplyDelete
  9. யூதர்களுக்கு இருக்கும் பிரச்சார வசதி பாலஸ்தீனியர்களுக்கு இல்லையென்றே சொல்லலாம்.///

    நூற்றுக்கு நூறு உண்மை... ஆனால் நல்ல படம் என்ற வகையில் பகிர்ந்து கொள்ள ஆசைப் பட்டேன்... முதல் கருத்துக்கு மிக்கநன்றி. நீங்கள் சொன்ன இரண்டு படங்களையும் நான் பார்க்கவில்லை... கட்டாயம் பார்க்கிறேன்... பகிர்வுக்கு நன்றி தோழா...

    ReplyDelete
  10. பகிர்வுக்கு நன்றி தோழா..
    எதிர்காலத்தில் சிறந்த சினிமா விமர்சகனாக வர வாய்ப்புக்கள் உள்ளது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies

    1. நல்ல விமர்சகனாக என்னை மாற்றிக் கொள்ள உங்களை போன்றவர்களின் கருத்துரைகளே உதவும் தோழா... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழா....

      Delete
  11. எனக்கு மிகப்பிடித்த தத்ரூபமான படம் எந்த இடத்திலும் மிகைப்படுத்துதல் இல்லாத படம். பசி கொடுமை; போரின் கோர ரூபம்; அநாதையின் தவிப்பு; இதனூடான காதல்; அதிலும் பசியை விட இசையை நேசித்து பியானோவை பார்த்து ஏங்கும் ஏக்கம்...இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம். பாராட்டுக்கள் அருண்பிரசாத்.

    ReplyDelete
    Replies
    1. தத்ரூபமான படம் எந்த இடத்திலும் மிகைப்படுத்துதல் இல்லாத படம்.//
      நூற்றுக்கு நூறு உண்மை... அதுதான் படத்தின் மிகப் பெரிய பலம்.... மிக்க நன்றி கலாகுமரன்... சென்ற இடுகையைப் பார்த்தீர்களா? உங்கள் கருத்தை எதிர்பார்த்தேன்.

      Delete
  12. விமர்சனம் மிக நன்று நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வரவாலும் கருத்தாலும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் தோழா... நன்றிகள் நண்பரே...

      Delete
  13. @ Asuran
    Thank you so much for the comment on eegarai.net.

    ReplyDelete