Wednesday, July 10, 2013

சில்ட்ரென் ஒப் ஹெவன் - ஒரு திரைக்கண்ணோட்டம்





இரானியச் சிறுவன் அலி... தன்னுடைய தங்கையின் செருப்புகளை தைத்து முடிக்கப் பட்டபின் வீட்டுக்கு தூக்கிச் சென்று கொண்டிருக்கிறான். வழியில் கடையொன்றில் உருளைக் கிழங்குகளை காணும் அவன், அவற்றை வாங்குவதற்காக கடைக்குள் நுழைகிறான். 

உள்ளே நுழையும் அவசரத்தில் தன்னுடைய தங்கையின் செருப்புகளை வெளியே விட்டு விடுகிறான். தற்செயலாக அங்கு வரும் குப்பைகளை சேகரிப்பவன் அவற்றை தனது வண்டியில் போட்டு கொண்டு சென்று விடுகிறான். 

இப்படி ஆரம்பிக்கிறது அந்த இரானிய சினிமா....

வெள்ளைக்காரர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. தங்களின் படைப்புகள், முயற்சிகள் எதோ மிகச் சிறந்தவை என்றும் மற்றவர்கள் படைப்புகள் தமக்கு கீழே என்பது போன்ற மனப் பாங்குதான் அது. 

அந்த மனப்பான்மைதான் அவர்களை பல நூற்றாண்டுகள் உலகை ஆள வைத்தது. 
ஆஸ்கர் விருது அதற்கு நல்ல உதாரணம். நல்ல திரைப்படங்களை எடுப்பதில் தாங்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்று நினைத்துக் கொண்டு தங்கள்  படங்கள் போக சிறந்த வெளி நாட்டுத் திரைப்படம் என்று விருது கொடுத்து கௌரவப் படுத்தும் செயல் அதற்கு நல்ல உதாரணம். 

உலக சினிமாவை ஆழ்ந்து பார்ப்பவனுக்கு சில வெளிநாட்டுத் திரைப்படங்கள் முன் ஹாலிவூட் திரைப்படங்கள் தூ தூ என்றாகிவிடும் .... 

துரதிருஷ்ட வசமாக இதெல்லாம் சொல்லி கொண்டு திரியும் நம் அனைவருக்குமே அந்த விருதின் மேல் கண் உண்டு... ( ஹீ ஹீ....)

இவ்வளவும் எதற்கு சொல்கிறேன் என்றால் நான் சொல்லப் போகும் இந்த திரைப்படத்துக்கு நான் மேலே சொன்ன அத்தனை விஷயங்களும் சட்டென ஒத்துப் போகும். 

" Children Of Heaven " . என்ற திரைப்படம். 
உலக சினிமா பார்க்கும் அனைவருக்கும் வாய்ப்பாடமான ஒரு திரைப்படம். 

இனி நம்ம பாணியில் படத்தை அறிமுகப் படுத்தி விடுவோம். 

தமிழ் திரையுலகில் பிரபலமான ஒரு கூற்று உண்டு.

" தமிழில் ஒரு திரைப்படம் எடுக்கும் செலவில் இந்தியில் ஒரு பாட்டு தயாரிக்கப் படுகிறது. ஏனெனில் சந்தை வாய்ப்பு அப்படி. "

வர்த்தக நோக்கோடு குத்துப் பாட்டுகள், ஆபாச அம்சங்களைப் புகுத்துவதற்காக நம்மவர்கள் சொல்லும் நியாயமான சாட்டு இது. இதனை ஏற்றுக் கொண்டோம் என்றால் நாமெல்லாம் ரசனை கெட்டவர்கள் என்று பச்சையாக ஒத்துக் கொள்வதற்கு சமம்.

ஏன் ? குறைந்த செலவில் மனதை வருடும் படியாக திரைப் படங்களை தயாரிக்க முடியாதா?
யோசிக்க வேண்டிய விஷயம்தானே?

அதற்கு உதாரணமாக ஒரு நல்ல திரைப்படத்தை சுருக்கமாக அறிமுகப் படுத்துகிறேன். உலக சினிமா ரசிகர்களுக்கு இது பரம பரிச்சயம் என்றாலும் பார்க்காதவர்களையும் பார்க்க சொல்வோம்...



திரைக்கதை 

மிகவும் எளிமையான திரைக்கதை. ஆனால் அழகான ஒரு கதையம்சம் , தெளிவான கதையோட்டம் எல்லாம் உண்டு. தெஹ்ரானில் வாழும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தங்கையின் கதை. 

கதை முழுக்க இரு பிஞ்சு இதயங்களின் மனதைப் பற்றி பேசுகிறது. இயற்கையாகவே ஊன்றிப் போகும் சகோதரப் பாசம், பிஞ்சு வயதிற்கான பயங்கள் , ஆசைகள் எல்லாவற்றையும் காட்டுகிறது. 

தான் தவறித் தொலைத்து விட்ட தங்கையின் செருப்புகளை மீட்க  ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்கிறான் அலி. இறுதியில் அவன் வென்றானா, தனது தங்கையின் செருப்புகளை மீட்டானா என்பதே மீதிக் கதை. ஆனால் அந்த கதையில் மிகச் சுவாரசியம் உண்டு. 

படத்தை மஜீத் மஜீதி என்ற  அருமையான இயக்குனர் இயக்கி இருக்கிறார்.

விருதுகள்

 தேசிய விருதுகள் பலவற்றை அள்ளிக் கொண்டது. இதில் என்ன சிறப்பு என்றால் 1999 ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டது. இந்த விருதுக்கு பரிந்துரைக்கப் பட்ட முதல் இரானிய சினிமா இதுதான். 

அதே ஆண்டில் வெளி வந்த " Life is beautiful " என்ற திரைப்படம் மூலமாக அந்த விருது கிடைக்காமல் போனது. 

ஆனால் முதன்முதலாக இரானிய சினிமாவை உலகம் எட்டிப் பார்க்க வைத்தது இந்த திரைப்படம்தான். 
( எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது. இலங்கையில் வீரகேசரி வார இதழில் அலைவெளி பக்கம் மூலம் இரானிய சினிமா பற்றி எழுத தனித் தொடரே ஒதுக்கப் பட்டது. )

வசூல் 
படம் வசூலில் அள்ளிக் குவித்து விடவில்லை. 2 லட்சம் டாலர் செலவழிக்கப் பட்டு 16 லட்சம் டாலோர்களை வசூலித்தது . இந்த அருமையான திரைப் படத்துக்கு அது மிகக் குறைவே...

விமரிசனம் 

பொதுவாக நல்ல வரவேற்பைப்  பெற்றது. குறிப்பாக அருமையான கதை என்று புகழப் பட்டது. ஆனால் குறை கூற வேண்டும் என்று நினைத்தவர்கள் , கதை ரொம்ப சிம்பிள் ஆ இருக்கே என்று அங்கலாய்த்துக் கொண்டனர்....

ஆனால் சில விமர்சகர்கள் தி bicycle thieves திரைப்படத்துக்கு ஒப்பிட்டு விமர்சித்தார்கள்.

முன்பே கூறியது போல உலக அரங்கில் இரானிய சினிமா கவனிப்பை பெற்றுக் கொள்ள இந்தத் திரைப்படம் ஒரு துவக்கப் புள்ளி.

IMDB : 8.2/10

கவனிக்கத்தக்கவை 

திரைப்படம் பார்த்து விட்டு வரும் யாருக்கும் மறக்க முடியாத  அம்சம் அந்த இரு குழந்தைகளின் அற்புதமான நடிப்பு. யாருமே வியக்கும் வண்ணம் மிகைப்படுத்தாமல் அருமையாக நடித்து உள்ளார்கள்.

தன் தங்கையின் பாதணிகளை அணிந்திருக்கும் சிறுமியைப் பின் தொடர்வது, ஆனால் அந்த பாதணிகளை தவறாக எடுத்தவர் ஒரு குருட்டுக் கிழவன் என்பதையும் அந்த சிறுமியின் ஒரே உறவு அவர்தான் என்பதை அறிந்து இவ்விரு குழந்தைகள் தவிப்பதும் காட்டப் படும் காட்சி அப்பப்பா.... !

இருவரும் ஒரே பாதணிகளை மாறி மாறி பயன்படுத்துவதும் அதனால் அலி தாமதமாகி அலி தண்டிக்கப் படுவதும் மனதை

கதையில் வில்லன்கள் கிடையாது. எல்லோரும் சூழ்நிலைக் கைதிகள்.

படு இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக பல காட்சிகளை ரகசிய காமிராக்கள் மூலமாக எடுத்து இருக்கிறார்கள். அதனாலோ என்னவோ காட்சி அமைப்புகள் சில நமக்கு புதுமையாகவும்,  சில விநோதமாகவும் உள்ளன.

எல்லா சிறுவர்களும் வெற்றி பெரும் வெறியோடு ஓட அலி செருப்புகளுக்காக ஓடும் இறுதிக் காட்சிகள் அருமையாகப் படமெடுக்கப் பட்டிருக்கும். எத்தனையோ உச்சகட்ட காட்சிகள் ஓட்டப் பந்தயத்தில் முடிந்துள்ளன. ஆனால் இந்த திரைப்படத்தில் அதே பழக்கப் பட்ட சுவாரசியம்.

செலவுன்னு என்னத்தை கணக்கு காட்டினாங்களோ தெரியாது. ஆனால் எதோ போற போக்கில் உண்மையான குடும்பங்களை தான் காட்டுறாங்களோ அப்டின்னு தோணும். ரொம்ப சிக்கனம் தான்.
பின்குறிப்பு 

நீங்கள் டப்  பண்ணிய தெலுங்கு படங்களை மட்டுமே ரசித்து பார்ப்பவராக அல்லது " டேய்.. வண்டிய எடுடா..." ரகம் படங்களை மட்டுமே பார்ப்பவராக இருந்தால் சத்தியமாக இந்த படம் உங்களுக்கு பிடிக்காது . அல்லது சின்னப் புள்ளைங்க படம்னு ஒதுங்கிடுவிங்க..."

ஆனால்  பல துறைப் படங்களிலும் ஒரு ரவுண்டு வருபவராக இருந்தால் ம்ம் கிளப்புங்கள்....



7 comments:

  1. ரொம்ப நாள் கழித்து வந்துருக்கீங்க!!! வரவேற்கிறேன்...

    வாழ்த்துகள்... முழுசா படிச்சிட்டு பிறகு விமர்சனம் பற்றி கமென்ட் போடுறேன்...

    ReplyDelete
    Replies
    1. இடைவெளிக்கு மத்தியில்தான் நண்பா எழுத முடிகிறது . அன்புக்கு நன்றி...

      Delete
  2. வழக்கம் போலவே, உங்கள் திரை விமர்சனம் அழகாக உள்ளது. வாழ்த்துகள் நண்பா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா....

      Delete
  3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  4. நல்ல ரிவியூ.... வாழ்த்துகள்

    ReplyDelete
  5. நன்றி நண்பியே...

    ReplyDelete