Monday, August 13, 2012

மண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3

இந்தக் கட்டுரையின் முன்னைய பகுதிகள் இங்கே....






தமிழர்கள் வந்து சேர்ந்த இடம் மன்னார் என்று சொன்னேன் அல்லவா? அவ்விடத்தை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது.. தமிழகத்தையும் இலங்கையையும் மிக அருகாமையில் இணைக்கும் இடம் அது.. இலங்கையின் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது இந்த நகரம்.

தமிழர்கள் வந்த வழி
மன்னாரில் இருந்து இலங்கையின் மத்திய  மலை   நாட்டை நோக்கி அவர்கள் " நடை பயணமாக" கூட்டிச் செல்லப் பட்டார்கள். ஆம். 
ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வரப் பட்டாலும் அடிமைகளுக்கு சமமான உரிமைதான் அவர்களுக்கு வழங்கப் பட்டது. அவர்கள் கால் நடையாக அனுராதபுரம் நகர் ஊடாகச் சென்றார்கள்.

அந்நகரம் சிங்களவர்களின் முதல் தலைநகரம் ... தமிழர்கள் இங்கு வந்த போது அவ்விடம் ஒரு காட்டுப் பகுதி. சிங்களவர்கள் இந்த " வந்தேறிகளை" அன்னியமாகப் பார்த்தார்கள். அல்லது ஆங்கிலேயர்களின் பலவந்தத் திணிப்பாகப்  பார்த்தார்கள். 

என்னுடைய ஒரே ஆதங்கம் இலங்கையில் ஏற்கெனவே இருந்த தமிழர்களாலும் இந்த வந்தேறிகள் " அன்னியமாகப்" பார்க்கப் பட்டதுதான். இந்த கடும் மனப் போக்கு சுதந்திரத்துக்குப் பின்னரும் தொடர்ந்தது. ( துரதிருஷ்ட வசமாக இன்றும் சில தமிழரூடாகத் தொடர்கிறது) 
சுதந்திரத்துக்குப் பின்னர் அவர்களை மனிதர்களாக  மதிக்கத் தெரிந்த " தந்தை செல்வா" போன்ற ஒரு சிலரே இருந்தனர்.  


அந்தக் காட்டுப் பகுதியில் இருந்து மலை நாட்டை நோக்கி " மிஞ்சி இருந்தவர்கள்" அழைத்து வரப் பட்டார்கள்.
இங்கு மிஞ்சி இருந்தோர் என நான் கூற காரணம் இருக்கிறது. காட்டுப் பகுதியூடாக அழைத்து வரப் படுகையில் பல பேர் இறந்து போயினர். பல காரணங்கள் இருந்தன. மந்த போஷணை,  களைப்பு, பாம்புக் கடி இப்படி... 
ஆனால் ஒப்பந்தத்தின்படி இவற்றையெல்லாம் ஆங்கிலேய அரசு பொறுப்பேற்காது என்றே கூறப் பட்டதாக வாய் வழியாக நான் அறிந்ததுண்டு. 

அந்த ஒப்பந்தம் உழைப்பாளிகளின் ஒப்பந்தம். அவர்கள் இங்கு வந்து இங்குள்ள கோப்பித் தோட்டங்களில் உழைக்க வேண்டும். 
தங்குவதற்க்கு இடம் ( நான் சொன்ன லைன் காம்பராக்கள்) வழங்கப் படும். அந்த ஒப்பந்த்ததில் பல தேன் தடவிய வார்த்தைகள் இருந்தன. ஆனால் இங்கு  வந்த பின் அவர்களுக்கு எஞ்சியது கடும் உழைப்பும் சிறிய சம்பளத் தொகையும் பெரிய ஏமாற்றமும்தான். 

இங்கு ஆசை காட்டப் பட்டு மோசம் போனது உண்மைதான். பல தரகு முதலாளிகள் இலங்கை பற்றி பல மனக் கோட்டைகளை கட்ட வைத்தனர்  .  இந்த பாவப் பட்ட வாழ்க்கைக்கு விமோசனம் என நம்பியே கண்டியை நோக்கிப் புறப் பட்டனர். ஆனால் அவர்களின் நரகம் இடம் மாற்றப் பட்டது, அவ்வளவுதான். 
" நிலத்துக்கடியில் மாசி ( காய வைக்கப் பட்ட மீன்) விளைவதாகவும், தேயிலைக்கடியில் தேங்காய் விளைவதாகவும்சொல்லி அழைத்து வரப் பட்டதாகவும் இந்த வந்தேறிகள் எள்ளி நகையாடப் படுவதுண்டு. வார்த்தை சுகத்துக்குச் சொல்லப் பட்டிருக்கலாம். இது எந்தளவுக்கு உண்மை என்பது அறியேன்.

ஆனால் இவ்வார்த்தைகள்   அவர்களின் காயப் பட்ட மனதை மேலும் வருத்த மட்டுமே உதவியது. மேற்சொன்ன அந்த வாக்கியத்தை என் பாடசாலைக் காலத்தில் ஒரு ஆசிரியர் ( அவர் ஒரு யாழ் தமிழர்) அடிக்கடி பயன் படுத்துவார். விளையாட்டை சொல்வது போல் கூறும் போது , அப்போது அதன் அர்த்தம் , அதற்குப் பின்னால் உள்ள ஒரு சமூகத்தின் ஏமாற்றம் எனக்கு அப்போது புரிந்ததே இல்லை. 

ஆனால் உண்மையில் அவர்களை ஏமாற்றியது எது? 
" வறுமை" .
அவர்கள் எல்லாத் துன்பங்களையும் சுமந்தவாறு இங்கு வந்ததற்கு ஒரே காரணம் வறுமைதான். 

நான் சென்ற பதிவில் தெளிவாக தெரிவித்திருந்தேன், இலங்கையை நோக்கிப் புறப்பட்ட தமிழர்களில் பெரும்பாலோனோர் சமூக, பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியவர்கள். இந்தியாவின் சாதிய அமைப்பின் படியே அவர்கள் அழைத்து வரப் பட்டார்கள். சென்ற பதிவில் ஆங்கிலேயர்களுக்குப் பின்னரே சாதியம் தலை தூக்கியதாக நான் எழுதியது போல ஒரு புரிதலுடன் பின்னூட்டம் வந்திருந்தது. இல்லை. நிச்சயமாக இல்லை . நான் அவ்வாறு கூறவில்லை. தமிழர்களிடையே புற்றுநோய் போல பரவி இருந்த சாதி முறையை வெள்ளையர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். 

இது எவ்வாறு உறுதியாகக் கூற முடிகிறதென்றால் அழைத்து வரப் பட்ட மக்களின் சாதிய அமைப்பிலான புள்ளிவிபரம் உள்ளது. ஆனால் எனக்கு தற்போது கிட்டவில்லை. 
கங்காணிமார் ( மேற்பார்வயாளர்  ), கணக்கப்பிள்ளைமார் முதலியவர்களாக நியமிக்கப் பட  ஆதிக்க இனத்தவர்களும் அழைத்து வரப் பட்டார்கள். சுதந்திரத்துக்குப் பின்னர் மலையகத்தில் பெருந்தோட்டத் துறையை விட்டு மிக ஆரம்பத்தில் வெளியே வந்தவர்களும் இவர்கள்தான். 
இன்றளவும் இலங்கையில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் இந்தியத் தமிழர்கள் பெரும்பாலும் தமது பெயருக்குப் பக்கத்தில் முதலியார், செட்டியார் முதலிய அடைமொழிகளை வைத்திருப்பதைக் காணலாம். 

மற்ற இனத்தவர்கள் முன்னால் வருவதற்கான வாய்ப்புகள்  மிக அரிதாகவும் தாமதமாகவுமே அமைந்தது. இன்றளவும் யாழ் தமிழர்களால் இந்திய தமிழர்கள் அலட்சியமாகப் பார்க்கப் படுவதற்கு இந்த ஆரம்ப கால சமூகப் பொருளாதார காரணிகளே காரணம் என்பது பொதுவாக வழங்கப் படும் கருத்து. 

மாத்தளை நகரத்துக்கு வந்து சேர்ந்த மக்கள் மலையகத்தின் பல்வேறு திசைகளை நோக்கியும் பிரித்து அனுப்பப் பட்டார்கள். அவ்வாறு சென்றவர்கள் தங்கள் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகளையும் கொண்டு சென்றனர். அதை பற்றிதான் அடுத்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

சுதந்திரத்துக்குப் பின்னர் திருத்தி அமைக்கப் பட்ட வீடுகள் கூட இப்படித் தான் இருக்கும். 
தமிழர்களுக்கு வழங்கப் பட்ட " லைன் காம்பராக்களின்" முதல் வரிசை வீடுகளில் கள்ளர், மறவர், அகமுடையார், நாயுடு முதலியோர் குடியமர்த்தப் பட்டனர். பிற்படுத்தப் பட்டோர் கடைசி வரிசை காம்பராக்களில் .... இந்த தொடர் வீடுகின் சுகாதார வசதிகளும், இட வசதிகளும் மிக மோசமானவை... ஐந்து வீடுகளுக்கு ஒரு கழிவறையே காணப் படும். இரு அறைகள் இருக்கும். அதில்தான் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

மலையக எழுத்தாளர்கள் இதனை "லாயக் ( குதிரை லாயம்) காம்பராக்கள் " என அழைப்பர். 

கொழுந்து பறிக்கச் செல்லும் பெண்கள் தங்களுடைய குழந்தைகளை " புள்ளை காம்பராவில்" விட்டு செல்வார்கள். கவனித்துக் கொள்ள ஒரு பெண்ணொடு... குழந்தைகள் நிறைந்த இக்கூடாரத்தில் பாதுகாப்பு ,வசதிகள் மிக சொற்பம். இதிலிருந்து ஆரோக்கியமான குழந்தையை எப்படி எதிர் பார்ப்பது? 

பி. கு. 
நான் இலங்கைத் தமிழர்கள் மீது அன்பு மிக வைத்திருக்கிறேன். இங்கு சொல்லப் படும் விடயங்கள் சில தமிழர்கள் நாம் ஏன் இப்படி நடந்து கொண்டோம் என கொஞ்சம் யோசித்துப் பார்க்கத் தான். நிச்சயமாக அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான், தவிர எவர் மனதையும் புண் படுத்த அல்ல.....

இந்த பதிவில் புள்ளிவிபரத்துக்காக சாதிகள் சிலவற்றை குறிப்பிட  வேண்டி உள்ளது , மற்றபடி அதனை குறிப்பிட எனக்கு விருப்பம் இல்லை. 

பதிவு நீளம் குறைவானது என சிலர் கேட்டனர்... ஆனால் எல்லா விடயங்களும் உங்களுக்கு நன்றாகப் பதிய வேண்டும். எனக்கு மிக நீளமான பதிவுகளில் நம்பிக்கை இல்லை. 

நல்ல சில குறிப்புகளுடன்
மீண்டும் வருவேன்.

7 comments:

  1. I WIshes For You......... WellDone

    Http://puthiyaulakam.com

    ReplyDelete
    Replies

    1. முதல் வருகைக்கு நன்றி நண்பரே.... தொடர்ந்தும் என்னோடு இணைந்திருக்க வரவேற்கிறேன்....

      Delete
  2. நிறைய விஷயம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், பதிவு நீளமாக தான் இருக்கும்...

    நன்றி நண்பரே... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ... ஒரு சமூகத்தைப் பற்றிய குறிப்புகளைப் பதியும்போது கொஞ்சம் கவனமாகவும் இருக்க வேண்டியுள்ளது. வருகைக்கு நன்றி அண்ணா...

      Delete
  3. வணக்கம் ,
    உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி... இப்போதே இணைத்துக் கொள்கிறேன்.

      Delete
  4. அழைப்பை ஏற்று என் தளத்துக்கு வருகை தந்த தோழி எழிலுக்கு என் நன்றிகள்... என் பதிவுகளுக்கு ஆதரவையும் விமர்சனங்களையும் எப்போதும் தாருங்கள்...

    ReplyDelete