Sunday, August 5, 2012

சாதி அடிப்படையில் இழுத்து வரப்பட்ட தமிழர்கள்




( இந்தப் பதிவு கடல் கடந்து வந்த கள்ளத்தோணிகள்  என்ற பதிவின் தொடர்ச்சியாகும். அப்பதிவை நீங்கள் வாசித்திராவிட்டால் ங்கு சென்று வாசித்து விட்டு வாருங்கள். )


பிரித்தானியர்கள் ஒரு விடயத்தை நன்கு உணர்ந்து வைத்திருந்தார்கள். தங்களினுடைய ஆதிக்கம் நிலைத்திருக்க வேண்டுமானால் வெறும் ஆயுதபலம், பணபலம் என்பவை மட்டும் போதாது. மாறாக தாங்கள் ஒரு பெரு நிலத்தை ஆழ வேண்டுமானால் அதனைக் கூறு போட வேண்டும். எக்காரணத்தை கொண்டும் சமூக ஒற்றுமை என்று ஒன்று ஏற்பட்டு விடக் கூடாது. ஆங்கிலேயர்களின் இந்த உத்தி சகல காலனி நாடுகளிலும் நடைமுறை படுத்தப் பட்டதை நாம் இலகுவாக அவதானிக்கலாம். 


சமூகத் தரப்படுத்தலில் உள்ள ஒரு மாயையை அவர்கள் நன்கு பயன் படுத்திக் கொண்டார்கள். அது " தாழ்வு மனப்பான்மை " - Inferiority காம்ப்ளெக்ஸ் . உதாரணம் சொல்கிறேன். ஆபிரிக்க நாடுகளில் நீக்ரோக்கள் ( இந்த வார்த்தையே சற்று சங்கடத்துடன் பயன்படுத்துகிறேன். பிறகு சொல்கிறேன்) நிறத்தின் அடிப்படையில் மட்டம் தட்டப் பட்டார்கள். ஐரோப்பாவில் நீக்ரோக்கள் அல்லது கறுப்பினத்தவர்கள் மனிதர்களே இல்லை என்று வெளிப்படையாக கிறிஸ்தவ தேவாலய மத குருமார்கள் மூலமாக போதிக்கப் பட்டார்கள். இது பற்றி தனிப் பதிவே எழுதலாம். தென்னாபிரிக்காவில் பெரும்பான்மை இனத்தவர்கள் சிறுபான்மை வெள்ளையர்களால் நெடுங்காலம் அடிமைப் படுத்தப் பட்டது இப்படித்தான். 


வேடிக்கை பாருங்கள். இங்கிலாந்து வெள்ளையர்களுக்கு தம்மை விட மற்றவர்கள் கீழே என்ற மிதப்பு உண்டு. அமரிக்கர்களுக்கு ஆசியர்கள் என்றால் ஒரு அலட்சியம் உண்டு. ( அது இந்திய அல்லது சீனா ) இந்தியாவில் வட இந்தியர்க்கு தென் இந்தியன் எப்போதும் மதராசிதான் . மலையாளிகள் மற்ற தென் இந்தியர்களை ஏளனமாக பார்ப்பதுண்டு. நாம் தமிழர்கள் சாதியை கொண்டாடுவோம். (நாமும் திரைப்படங்களில் கறுப்பினத்தவரை, முடியுமானவரை கீழ்த் தள்ளுவோம். ) உண்மை என்னவென்றால் எல்லாமே ஒரு வகை சாதி அமைப்புதான். இதற்கு மதம், மொழி , இனம் போன்றவற்றை காரணம் காட்டினால் நாம்தான் மடையர்கள். 



விஷயத்துக்கு வருகிறேன். ஆங்கிலேயர்கள் தமிழர்கள் விஷயத்தில் அவர்களை ஒன்று சேர விடாமல் தடுப்பதற்கு பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. அவர்களை பிரிக்க இருக்கவே இருக்கிறது சாதி. 
சாதி அமைப்பு வித்தியாசமானது அது தன் தோள் மேல் நிற்பவனை தாங்கும் , கீழே இருப்பவனை மிதிக்கும் " என யாரோ சொன்னதாய் வாசித்திருக்கிறேன். தங்களுக்குள் பிளவு பட்ட ஒரு பெரும் சமூகத்தை இலங்கையில் குடியேற்ற இந்த காரணம் ஒன்று போதுமாக இருந்தது ஆங்கிலேயர்க்கு... தமிழர்கள் மட்டுமல்ல தென்னிந்தியாவே இந்த அவலத்தில் தான் இருந்தது. 

பிறகேன் தமிழர்கள்? பலர் நினைப்பது போல இலங்கையில் குடியேற்றப் பட்டது தமிழர்கள் மட்டுமல்ல. மலையாளிகள், தெலுங்கர்களும்தான். இன்று அவர்கள் ( மிகுதியாய் இருந்தவர்கள்) தமிழர்களுடன் கலந்து விட்டார்கள். அவர்களின் சாதி அமைப்பு மட்டும் இன்னும் கலக்கவில்லை. தென்னிந்தியா பூகோள ரீதியாக இலங்கையுடன் கொண்டிருந்த உறவும் வாய்ப்பாக அமைந்தது. 

இலங்கைக்கு அழைத்து வரப் பட்ட தமிழர்கள் குழுக்களாக பிரித்து வரப் பட்டார்கள். அவர்களின் சாதி மனோபாவம் உடைந்து வராமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளப்  பட்டார்கள். அதற்கு கையாளப் பட்ட உத்திகள் நூதனமானவை. கடினமான அடித் தட்டு வேலைகள் கீழ் நிலையில் உள்ளோர்க்கு அளிக்கப் பட்டன. மேற்பார்வை வேலைகள் , துரைமார்க்கு அடிவருடும் வேலைகள் உயர் சாதியினருக்கு வழங்கப் பட்டன. இதன் மூலம் அவர்கள் விசுவாசம் மிக்கவர்களாக இருப்பார்கள். முடியுமாயின் அவர்கள் கிறிஸ்தவ மதம் மாற்றப் பட்டு ஆங்கிலக் கல்வியையும் பெறுவார்கள். 

 இன்றும் அதே நிலையில்
இன்னும் எராளமாக கூற இருக்கின்றன . பதிவின் நீளம் கருதி அதை பிறகு பகிர்ந்து கொள்கிறேன். 
சரி . இங்கு குடியேற்ற பட்ட தமிழர்கள் தமக்கிடையில் ஒன்று சேர்ந்தார்களா? எப்படி அவர்கள் அழைத்து வரப் பட்டார்கள்? சுவாரசியமான விடயம் ஒன்றை கூறுகிறேன். 1940  களில் அவர்களுக்கிடையில் மாற்றம் ஒன்று ஏற்பட்டது . அந்த மாற்றம் சுதந்திரத்தின் போது வடகிழக்கு தமிழர்களின் உதவியோடு இந்தியத்தமிழர் நாடற்றவர்களாகப் பட வழி சமைத்து தந்தது. அந்தக் காழ்ப்புணர்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன. 

தமிழர்கள் வந்து இறங்கியது இலங்கயின் மன்னாரில் . கள்ள தோணிகள் என்று பெயர் பெற்றதும் இவ்வாறுதான். எவ்வாறு கண்டிக்கு கூட்டிச் செல்லப் பட்டார்கள்? 
விபரங்களுடன் 
மீண்டும் வருவேன். 

தாங்கள் கவனத்துக்கு .....
இந்த சிறிய பதிவுகள் மூலம் பல முக்கிய விடயங்களை உங்களுக்கு அறியத் தர ஆவலாக உள்ளேன். ஆதாரங்களை தனியாக பதிவிடுகிறேன். தயவு செய்து உங்கள் மேலான கருத்துகளின் மூலம் என்னை செதுக்குங்கள். 

நான் வலைப் பதிவுகளுக்குப் புதியவன் . ஆகவே திரட்டிகளில் வாக்கு அளிப்பதன் மூலமாகவும் இந்த பதிவுகளை சமூக வலைத் தளங்கள், கூகிள் மூலம் பகிர்வதன் மூலமாகவும் என் தளத்தில் இணைவதன் மூலமாகவும் என் எழுத்து முயற்சி பலரை சென்றடைய உதவி செய்யுமாறும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். 









11 comments:

  1. அருமையான பதிவு. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தொடருங்கள் நண்பரே. அருமையாக எழுதுகிறீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா.... உங்கள் மறுமொழிகள் தரும் உற்சாகத்தில் தான் எழுதுகிறேன்.

      Delete
  3. அருமை சகோ வாழ்த்துகள்

    நன்றி தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ... நான் பதிவனாய் அல்லாமால் வாசகனாய் முன்பிலிருந்தே உங்கள் பதிவுகளை வாசிக்கிறேன். நீங்கள் ஏன் நண்பனாய் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

      Delete
  4. வெள்ளைக்காரன் இந்தியாவிற்கு வரும் முன்னரே, நாட்டில் இந்து ஆரிய பார்ப்பன மடையர்கள் சாதிப்படி மக்களை பிரித்து வைத்திருந்தனர். சுரண்ட வந்த வெள்ளையனுக்கு வேலை மிச்சமானதுதான் உண்மை. எனவே இந்திய-தமிழ் சமுதாயத்தில் ஏற்கனவே கேடு கெட்ட இந்து மடையர்கள் செய்த அதையேதான் வந்தவனும் தொடர்ந்து செய்து வந்தான். அக்காலங்களில் இந்திய-தமிழ் இனங்கள் மற்றும் குலங்களை அடிமைத்தனம், மடத்தனம், மூட நம்பிக்கைகள் போன்ற தீய பழக்க வழக்கங்களுக்கு பாசிச இந்து மடத்தனம் வசியப்படுத்தி வைத்திருந்தது வெள்ளைக்கரனுக்கு வசதியாக இருந்தது. எனவே அடிமைத்தனம் பற்றி கூறுவோமானால் இந்தியாவை பொறுத்தவரை, வெள்ளைக்காரன் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவும் இல்லை, வெளியில் அதை கொண்டுவரவும் இல்லை. இந்தியன்-தமிழன் அடியாய் பிளவுபட்டு வாழ்ந்ததற்கு பாழாய்ப்போன ஆரிய இந்து மத மடத்தனமும் பெரிய காரணம்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆரியப் பார்ப்பனர்கள் மட்டுமல்ல நண்பரே உலகம் முழுவதும் உள்ள ஆளும் வர்க்கம் இந்த ஏற்றத் தாழ்வை மறையாமல் பார்த்துக் கொள்ளும். இன்னொரு பதிவில் இதையும் பகிர்ந்து கொள்கிறேன். வருகைக்கு நன்றி மாசிலா.

      Delete
  5. சுரண்ட வந்த வெள்ளையனுக்கு வேலை மிச்சமானதுதான் உண்மை.//
    மிகச் சரியாகத்தான் சொன்னிர்கள். அதேதான் நானும் சொல்கிறேன். இந்த மடத் தனத்தை அவர்கள் பயன்படுத்தி கொண்டார்கள்.

    ReplyDelete
  6. வணக்கம் சகோ,

    இயற்கை வளங்கள் பகிர்வு பிரச்சினையில் குழுக்களிடையே முரண்,போராட்டம் தோன்றுவது தவிர்க்க இயலாது என்றாலும், மனிதனின் ஆறாம் அறிவு மூலம் இதனை தவிர்க்க்லாம்.

    இயற்கை வளங்களை தங்கள் கட்டுக்குள் வைக்கு முயலும் சக்திகள் தங்கள் நலன் காக்க குழுக்களை இன் மத அடிப்படையில் பிரித்து மோதவிடுதலே வரலாறு.

    பாருங்கள் சகோ ஐரோப்பியர்களிடம் இருந்து பிரிந்த பல் நடுகளில் முரண்பாடு சுதந்திரத்தின் போதே ஏற்பட்டு விட்டது.
    இந்தியா__ பாகிஸ்தான்

    சிங்களம்____ஈழம்
    மத்தியக் கிழக்கு சொல்லவே வேண்டாம்.

    இதில் இலங்கை இந்தியா மட்டும் விதிவிலக்கா!!!!!!!!!!

    நன்றி

    ReplyDelete
  7. நல்ல பதிவு நண்பரே...

    உங்கள் (url) தவறாக டைப் செய்து விட்டதால் எனது (dashboard)-யில் வரவில்லை. சரி செய்து விட்டேன்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  8. வணக்கம் சொந்தமே!விரிவாகப்பேசப்பட வேண்டிய பதிவுதான்.பொண்டு சென்ற விதம் அழகு.இந்த உற்சாகங்களுடன் தொடர்ந்தும் எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete